Sunday 21 November 2021

கடிதங்கள்

நான் சிறுவனாயிருந்த காலம் தொட்டு கடிதங்கள் எழுதி இருக்கிறேன். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு என கடிதம் எழுதி அனுப்புவேன். 1992ம் ஆண்டு என ஞாபகம். எங்கள் பிரதேசத்தை ஒரு தீவிரமான புயல் தாக்கியது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. நள்ளிரவு தொடங்கி பொழுது விடிந்து மூன்று மணி நேரம் வரை புயல் வீசிக் கொண்டேயிருந்தது. இரவெல்லாம் விழித்திருந்து அதனைப் பார்த்தேன். அந்த புயலினைப் பார்த்த அனுபவங்களை சென்னையில் வசித்த உறவினர் ஒருவருக்கு எழுதினேன். கடிதம் எழுதுவது என்பது ஆர்வமூட்டக்கூடிய உவப்பான ஒரு செயல். அருகில் இருக்கும் தபால் அலுவலகம் செல்வது, கார்டு கவர் வாங்கி வருவது. பேடில் வைத்து எழுதுவது, அனுப்புனர் பெறுநர் முகவரி எழுதுவது, தபால் பெட்டியில் போட்டு வருவது என அடுத்தடுத்து பல செயல்கள் கொண்ட நிகழ்வு அது.  பின்னர் 10 போஸ்ட் கார்டு 10 கவர் கையில் எப்போதும் வைத்திருப்பேன். இப்போதும் என்னுடைய மேஜையைத் துழாவிப் பார்த்தால் அஞ்சலட்டை இருக்கும். இன்றும் யாரோ சிலருக்கு அஞ்சல் அட்டையில் எழுத வேண்டிய ஒரு கடிதம் எனக்கு இருக்கவே செய்கிறது. மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் விவசாயி. அவர் தொலைபேசியோ அலைபேசியோ வைத்துக் கொள்ளவில்லை. அவரிடம் அவ்வப்போது செய்து வரும் பணிகளை அஞ்சலட்டையில் எழுதி அனுப்புவேன். நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றால், அவர் அந்த பணிகளைப் பற்றி விசாரிப்பார். நண்பர்கள் ஆச்சர்யப்படுவார்கள். அலைபேசி இல்லாத ஒருவர் சில நாட்கள் முன் நடந்த விபரம் கூட அறிந்திருக்கிறாரே அது எவ்விதம் சாத்தியம் என. 

பள்ளி நாட்களில் நான் மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவேன். எங்கள் பள்ளிக்கும் வீட்டுக்குமான தூரம் இரண்டரை கிலோமீட்டர். சைக்கிளில் பத்து நிமிடத்தில் வந்து விடுவேன். வந்ததும் கேட்கும் முதல் கேள்வி எனக்கு இன்று கடிதம் ஏதும் வந்ததா என. ஒருநாள் விடாமல் கேட்பேன். வீட்டில் இல்லை இல்லை என்பார்கள். ஒருநாள் கேட்காமல் இருந்து விட்டேன். மாலை வீட்டுக்கு வந்தால் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. ஏன் மதியமே சொல்லவில்லை என்று கேட்டேன். மறந்து போய் விட்டதாகக் கூறினார்கள். எனக்கு மனம் சமாதானமே ஆகவில்லை. இன்றும் பகல் பொழுதில் வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் ஏதேனும் கடிதம் வந்திருக்கிறதா என ஷெல்ஃபில் பார்க்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. எங்கள் பகுதியின் தபால்காரர்கள் அனைவருடனும் நல்ல பரிச்சயம் உண்டு. 

இன்றும் எழுதுவதற்கு சில கடிதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கடிதம் எழுத எனக்கு பல்வேறு விதமான ஆயத்தங்கள் தேவை. தபால் தலை அல்லது தபால் கவர் கைவசம் இருக்க வேண்டும். உறையை ஒட்டும் பசை மேஜையின் மீது இருக்க வேண்டும். டிம்மி ஷீட்டில் மார்ஜின் போட கூரான பென்சில் தேவை. கண்ணாடி ஸ்கேல் வைத்து நேர்த்தியாக மார்ஜின் போட வேண்டும். கடிதம் எழுதி கவரை ஒட்டி ஸ்டாம்ப்பும் ஒட்டி அனுப்புநர் பெறுநர் முகவரி எழுதப்பட்டு விட்டால் அதை உடனே கொண்டு சென்று தபால் பெட்டியில் போட்டு விட வேண்டும். இவ்வளவு செயல்களையும் இன்னின்ன விதமாகவே செய்ய வேண்டும் என விரும்புவேன். 

இன்று கூட எழுத வேண்டிய கடிதங்கள் நான்கு இருக்கின்றன.