Monday 22 November 2021

சைக்கிள் பயணம்

இந்த வார இறுதியில், ஒரு சைக்கிள் பயணத்தை ஒருங்கிணைக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது ரிஷிகேஷில் ஓர் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அங்கே இருந்தவர்களிடம் எனது பயண அனுபவங்களைக் கூறிக் கொண்டிருந்தேன். ஆசிரமவாசி ஒருவர் ஆசிரமத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னால் நாங்குநேரியிலிருந்து ரிஷிகேஷுக்கு சைக்கிளில் ஒருவர் வந்ததாகவும் இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை யாராவது ஒரு சைக்கிள் பயணி தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள் என்றும் மேலும் தமிழ்நாட்டில் இருந்து நடந்தே ரிஷிகேஷ் வருபவர்களும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.  

எனது நண்பர் ஒருவர் பூனாவிலிருந்து பெங்களூர் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்பவர். ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவர் அந்த பயணத்தை மீண்டும் மீண்டும் நிகழ்த்துவார். 




பல வருடங்களுக்குப் பின் மேற்கொள்ளும் சைக்கிள் பயணம் இது. அனேகமாக இதுவே சைக்கிளில் மிக அதிக தூரம் மேற்கொள்ளப் போகும் பயணம். மயிலாடுதுறையிலிருந்து பரங்கிப்பேட்டை வரை சென்று திரும்ப உத்தேசித்துள்ளோம். நண்பர்கள் பன்னிருவர் பயணத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். முன்னர் சிதம்பரம் வரை என்று தான் திட்டமிட்டோம். சிதம்பரம் 40 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்று மீள 80 கி.மீ. இரட்டை இலக்கத்தில் உள்ள பயண தூரத்தை மூன்று இலக்கமாக ஆக்க விரும்பி நான் பரங்கிப்பேட்டையைத் தேர்ந்தெடுத்தேன். மயிலாடுதுறையிலிருந்து பரங்கிப்பேட்டை 65 கி.மீ தூரம் . ஆகவே எங்கள் மொத்த பயண தூரம் 65 + 65 = 130 கி.மீ. நூறு என்பதை ஆயிரமாகக் கொள்ளும் பழக்கம் நம் மரபில் உண்டு. இந்த பயணத்தில் பங்குகொள்பவர்கள் பலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் சைக்கிளில் பயணிப்பதற்கு ஒரு துவக்கத்தை உருவாக்கித் தரும் விதமாக பயணம் 100 கி.மீ.க்கு மேல் அமைய வேண்டும் என்று விரும்பினேன். 

பரங்கிப்பேட்டை மகா அவதார் பாபாஜியின் ஜென்மபூமி. அவர் சிறு வயதில் அங்கு தான் வசித்திருக்கிறார். அவருடைய தந்தை அங்கே இருக்கும் முருகன் கோவிலில் அர்ச்சகராகப் பணி புரிந்திருக்கிறார். அந்த கோவில் ஊரின் மத்தியில் இருக்கிறது. பரங்கிப்பேட்டையில் பாபாஜிக்கு அழகிய ஒரு சிற்றாலயம் அவரது பக்தர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது. 




ஞாயிறன்று காலை 5 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட உத்தேசித்துள்ளோம். பங்கேற்பாளர்கள் சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்து விட வேண்டும். அது அவர்களின் சொந்த சைக்கிளாகவோ வாடகை சைக்கிளாகவோ இருக்கலாம். இரண்டு ஒரு லிட்டர் பாட்டில்களில் குடி தண்ணீர் நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் இரண்டு புளிசாதப் பொட்டலங்கள் தரப்படும். காலை உணவும் மதிய உணவும் அவையே. இரவு உணவுக்கு ஊர் திரும்பி விடலாம். பயணத்தின் போது அலைபேசி கொண்டு வரக் கூடாது. 

நம்முடைய வழக்கமான ஒரு தினத்தை ஆர்வமூட்டும் அனுபவங்கள் கொண்ட தினமாக மாற்ற இது போன்ற நுண் விஷயங்கள் உதவுகின்றன. பங்கேற்பாளர்கள் அனைவருமே பயண தினத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.