Saturday 20 November 2021

ஆதிமூலம்

மயிலாடுதுறை அருகே ஒரு கிராமம். கொள்ளிடக் கரையில் அமைந்துள்ளது. அங்கே எனக்கு நண்பர்கள் மிக அதிகம். விவசாயிகள் பலபேர் எனக்கு மிகவும் பழக்கமானவர்கள். ஒருநாள் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த போது, அந்த ஊரின் பெயர் கண்ணில் பட்டது. என்ன செய்தி என்று வாசித்தேன். ஒருநாள் விடிகாலை 4 மணி அளவில் ஊரில் நாய்கள் அனைத்தும் கூடி பெருங்குரலில் குரைக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. அனைத்துத் தெருவின் நாய்களும் சேர்ந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட திசையில் எதையோ ஊன்றி நோக்கி குரைப்பதை குரைப்பொலி கேட்டு வீட்டுக்கு வெளியில் வந்த ஒரு சிலர் பார்த்திருக்கிறார்கள். டார்ச் லைட் ஒளியை நாய்கள் நோக்கும் திசையில் செலுத்தியிருக்கிறார்கள். அங்கே தெருவில் ஒரு முதலை இருந்திருக்கிறது. உடன் ஊர் மக்கள் பலரை எழுப்பியிருக்கிறார்கள். இளைஞர்கள் சிலர் நீளமான சுருக்கை உருவாக்கி முதலையைச் சுருக்கிட்டு பிடித்திருக்கின்றனர். பின்னர் அது எங்கும் நகர இயலா வண்ணம் ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். வனத்துறை வந்து முதலையைக் கொண்டு போய் கொள்ளிடம் ஆறு ஆழமாக இருக்கும் அணைக்கரை என்ற ஊரில் விட்டு விட்டார்கள்.  

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து நான் அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு நண்பரின் வீட்டில் பேசிக் கொண்டிருந்தேன். நண்பரின் மனைவியும் உடனிருந்தார். முதலை குறித்து செய்தித்தாளில் வெளியான செய்தியை வாசித்ததை நினைவு கூர்ந்தேன். நீங்கள் முதலை மரத்தில் கட்டிப் போடப் பட்டிருந்ததைப் பார்த்தீர்களா என்று கேட்டேன். 




நண்பரின் மனைவி , ‘’பிரபு ! நாங்கள் எல்லாரும் போய் பார்த்தோம். நான் மட்டும் முதலையை ‘’ஆதிமூலமே’’ என்று தொட்டுக் கும்பிட்டேன் என்றார்கள். 

பெருமாளும் தெய்வம். கருடனும் தெய்வம். கஜேந்திரனும் தெய்வம். சுதர்சனச் சக்கரமும் தெய்வம். பெருமாளின் அருட்பார்வை பட்ட பெருமாள் படைக்கலனான சுதர்சனால் தீண்டப்பட்ட முதலையும் தெய்வம் தானே!

இந்தியப் பண்பாட்டை சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.