Thursday 2 December 2021

பிரயத்தனம் (நகைச்சுவைக் கட்டுரை)

கல்லூரி முடித்த ஆண்டில் நான் நகரின் மையப்பகுதியில் இருந்த இடம் ஒன்றை வாங்க விரும்பினேன். அது 2 ஏக்கர் பரப்புடையது. மனைத்தரகர் ஒருவர் அந்த இடத்தை எனக்குக் காட்டினார். பலர் அதனை வாங்க விரும்பினார்கள். அந்த இடத்தின் உரிமையாளர் ஒருவர். அந்த இடத்தை வாடகைக்கு வைத்திருந்தவர் இன்னொருவர். அந்த இடம் வாடகைதாரரிடம் 50 ஆண்டுகளாக இருக்கிறது எனினும் அவர் உரிமையாளருக்கு 40 ஆண்டுகளாக எந்த வாடகையும் தருவதில்லை.  உரிமையாளர் அந்த இடத்தை விற்பனை செய்வதற்கும் அதில் வாடகைக்குக் குடியிருப்பவரை காலி செய்து ஒப்படைப்பதற்கும் எந்த சம்பந்தமும் தனக்கு இல்லை ; மனையை வாங்குபவர் காலி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார். வாடகைக்கு குடியிருப்பவர் பல வருடங்களாக இருக்கிறார். அவர் கணிசமாக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டே காலி செய்வார் என்று தோன்றியது.  எனக்கு இடத்தைக் காண்பித்தவர் வாடகைதாரருக்கு வேண்டியவர் என்பதால் உரிமையாளரிடம் ஒரு சிறு தொகை அட்வான்ஸாக வழங்கப்பட்ட பின்னர் வாடகைதாரரைக் காலி செய்து விடலாம் என்று சொன்னார். 

அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த மனைகள் சதுர அடி ரூ.200 என்ற அளவில் விலை போயின. அந்த விபரத்தை நானும் மனைத்தரகரும் பலரிடம் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டோம். வாடகைதாரர் பத்து இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு இடத்தை காலி செய்து கொடுப்பதாக ஒத்துக் கொண்டிருப்பதாக தரகர் சொன்னார். அந்த இடத்தின் உரிமையாளரிடம் தரகர் அழைத்துச் சென்றார்.

‘’இவங்க தான் இடத்தை வாங்க வந்திருக்காங்க. பேமெண்ட் ஒரே பேமெண்ட்டா கொடுத்திடறன்னு சொல்றாங்க. நம்மள பத்தி உங்களுக்குத் தெரியும். ஜெனூனா இருக்கறவங்களோட தான் நான் பிசினஸ் செய்வேன். இடம் வேணும்னு பிரியப்பட்டு வந்திருக்காங்க. பாத்து முடிச்சுக்கங்க’’ என்றார் தரகர். 

உரிமையாளர் ‘’இடம் ரெண்டு ஏக்கர் 88,000 சதுர அடி. சதுர அடி 100 ரூபா’’ என்றார். 

நான் உடனே சரி என்றேன். உரிமையாளரும் தரகரும் அதிர்ச்சி அடைந்தனர். 

தரகர் என்னை உரிமையாளரின் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்தார். ‘’என்ன தம்பி ! சட்டுன்னு சரின்னு சொல்லிட்டீங்க. ஏதாவது பேரம் பேச வேண்டாமா?’’

‘’நாம 100 ரூபாய்க்கு வாங்கினா நமக்கு கட்டுப்படி ஆகும்னு தானே கணக்கு பண்ணோம். அந்த இடத்தைக் காலி செய்ய பத்து லட்சம் ஆகும். ஒரு சதுரடிக்கு கணக்கு பண்ணா தோராயமா 11 ரூபா. 100ம் 11ம் 111. அப்ரூவல் வாங்க கொஞ்சம் இடம் விடணும். அத அடக்கத்துல சேத்தோம்னா 140 ரூபா. நாம சதுர அடி 225க்கு சர்வ சாதாரணமா கொடுக்கலாம்.’’

‘’இல்லை தம்பி ! அவங்க சொல்ற விலையை விட கொஞ்சமாவது கொறச்சு கேக்கணும். அதானே வழக்கம்.’’

‘’பரவாயில்லை இந்த விலை நமக்கு கட்டுபடியாகும்’’

உரிமையாளரிடம் வந்தோம். 

‘’ஒரே பேமெண்ட்டில் அமௌண்ட் கொடுத்து விடுகிறேன். எனக்கு இடத்தோட டாகுமெண்ட்ஸ் ஜெராக்ஸ் வேண்டும்.’’

‘’டாகுமெண்ட்ஸ் என்னோட பிரதர் கிட்ட இருக்கு. அவன் அடுத்த வாரம் ஊருக்கு வரான். வரும் போது கொண்டு வரச் சொல்றேன்.’’ 

‘’தம்பி ! டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துடுவோமா. பேசி முடிவானது. அட்வான்ஸ் கொடுத்துட்டா உறுதியா இருக்கும்’’

‘’டாகுமெண்ட் வரட்டும் அண்ணன். லீகல் ஒப்பீனியன் பாத்துட்டு தந்துடுவோம்’’

வீட்டுக்கு வந்தேன். நண்பர்கள் ஐந்து பேருக்கு ஃபோன் செய்தேன். ஐந்து நண்பர்களிடம் இது நல்ல முதலீட்டு வாய்ப்பு ; முதலீடு செய்யுங்கள் என்று சொன்னேன்.  ஐந்து நண்பர்களுமே இதற்கு ஒப்புக் கொண்டனர். ஐவருமே ஒப்புக் கொண்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.  

டாகுமெண்ட்ஸ் ஜெராக்ஸ் ஒரு வாரத்தில் கைக்கு வந்தது. வில்லங்கம் ஏதும் இல்லை. 80 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் சுயார்ஜிதமாக வாங்கிய சொத்து. அவருடைய பேரன் பேத்திகள் மற்றும் அவர்களுடைய வாரிசுகளுக்கென உயில் எழுதி வைத்துள்ளார். மொத்தம் 50 பேர் அதன் உரிமையாளர்கள். 

உரிமையாளர் என்னிடம் ,’’தம்பி ! எங்க வீட்டு மேரேஜ் ஒன்னு அடுத்த வாரம் மெட்ராஸ்ல நடக்குது. இந்த 50 பேரும் அங்க வருவாங்க. நாம அங்க அவங்க கிட்ட விஷயத்தைச் சொல்வோம். ‘’ என்றார். 

திருமணத் தேதிக்கு முதல் நாள் சென்னை தி. நகரில் ஒரு ஹோட்டலில் ஒரு மினி ஹாலை வாடகைக்கு எடுத்திருந்தார். அவர் சொன்ன நேரத்துக்கு நானும் தரகரும் சென்றிருந்தோம். அங்கே 48 பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் சம்மதம். இரண்டு பேர் மட்டும் வரவில்லை. இந்த 48 பேரிலிருந்து சிலர் அந்த இரண்டு பேரின் வீட்டுக்குச் சென்று பேசினார்கள். குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் அந்த இரண்டு பேருக்கும் மனஸ்தாபம். அவர்கள் இருவரும் சம்மதிக்கவேயில்லை. 

நாங்கள் விலை பேசிய தினத்தில் அந்த சொத்துக்கு உரிமையுடையவர்கள் அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இன்னும் சில மாதங்களில் சிலருக்கு திருமணம் நிகழ இருந்தது. அவ்வாறு நிகழ்ந்து அவர்களுக்கு வாரிசு உண்டானால் சொத்தின் ஒரு பகுதி ‘’மைனர் சொத்து’’ ஆகி விடும். எனவே அந்த இரண்டு பேருக்கும் கிடைக்கும் பங்குக்கு மேலாகவே தொகை தருகிறோம் என்று அனைவரும் சொன்னார்கள். அந்த இருவரும் கேட்கவில்லை.  காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அந்த ஹோட்டலில் இருந்தோம். எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதால் ஊருக்குப் புறப்பட்டோம். 

தரகர் வருத்தப்பட்டார்.

‘’பரவாயில்ல அண்ணன்’’ என்று அவரிடம் சொன்னேன். 

18 வருஷம் ஆகி விட்டது. அந்த சொத்து இன்னும் வாடகைதாரரிடம் தான் இருக்கிறது. உரிமையாளர் எண்ணிக்கை 50லிருந்து 60 கூட ஆகியிருக்கக் கூடும்!