Thursday, 23 December 2021

கோவிந்த வல்லப பந்த்

 

இந்த சம்பவம் நடந்த போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 

அப்போது தான் எனக்கு வாகனப் பிராப்தி வாய்த்தது. சொந்தமாக சைக்கிள் வைத்திருந்தேன். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளை எடுத்துக் கொண்டு பொது நூலகம் செல்வேன். அங்கேயிருக்கும் நூல் அடுக்குகளில் ஏதேனும் புத்தகத்தை எடுத்து வாசிப்பேன். பொது நூலகத்தில் உறுப்பினராய் இருந்ததால் வீட்டுக்கும் புத்தகம் எடுத்து வருவேன். ஒரு நூலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் வாசிக்க முடியுமா என்று யோசிப்பேன். வாசிக்க வேண்டும் என்று விரும்புவேன். இலக்கியமும் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்த துறைகள். வாழ்க்கை வரலாறுகளிலும் ஆர்வம் உண்டு. 

பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி அறிவித்தார்கள். ‘’நாட்டுக்கு உழைத்தவர்’’ என்ற தலைப்பில் பேச வேண்டும். பள்ளியின் இலக்கிய மன்றங்களில் பலர் காந்தியைப் பற்றி நேருவைப் பற்றி பாரதியைப் பற்றி வ.உ.சி யைப் பற்றி கட்டபொம்மனைப் பற்றி பேசிக் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் இவர்களைப் பற்றியே உரைகள் இருக்கும். நான் புதிதாக யாரைப் பற்றியாவது பேச வேண்டும் என்று நினைத்தேன். புதிதாக ஏதாவது செய்வோமே என்ற எண்ணம். நூலகம் சென்று புத்தகங்களைத் தேடினால் மேலே சொன்னவர்களைப் பற்றியே அதிக நூல்கள் இருந்தன. எங்கோ ஓர் இடுக்கில் கோவிந்த வல்லப பந்த் குறித்த நூல் ஒன்று இருந்தது. அதனை என் உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்தி வீட்டுக்குக் கொண்டு வந்தேன். இவரைப் பற்றி பேசப் போகிறேன் என்று சொன்னேன். இவர் யார் என்று வீட்டில் அனைவரும் கேட்டார்கள். இந்த நூலைப் படித்து தெரிந்து கொள்ளப் போகிறேன் என்றேன். தந்தை அலுவலகம் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அவரிடம் வீட்டில் அனைவரும் எனது விருப்பத்தையும் செயலையும் குறித்து புகார் சொன்னார்கள்.  அவர் பந்த் குறித்து அறிந்திருந்தார். எனவே ‘’உன் விருப்பப்படி செய்’’ என்று சொல்லி விட்டார். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

புத்தகத்தை முழுமையாக வாசித்து அதிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு நானே உரையைத் தயாரித்தேன். பேச்சுப் போட்டியின் தினம் வந்தது. நான்கு ஆசிரியர்கள் நடுவர்கள். ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 50 பேர்.   
’’நாட்டுக்கு உழைத்தவர்’’ தலைப்பையும் சேர்த்து நான்கு தலைப்புகள் என்று ஞாபகம். மேற்படி தலைப்பில் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் காந்தி நேரு பாரதி என்று பேசினார்கள். நான் கோவிந்த வல்லப பந்த் குறித்து பேசினேன். 

வெற்றி பெற்ற மாணவர்களை அறிவிக்கும் நேரம் வந்தது. அப்போது நடுவர் குழுவில் இருந்த ஆசிரியை எதிரில் இருந்த 50 மாணவர்களில் என்னை நோக்கி ‘’இந்த தலைப்பையும் இந்த உரையையும் உனக்கு தேர்ந்தெடுத்துக் கொடுத்தது யார்?’’ என்று கேட்டார். நானே தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னேன். உரை தயாரித்தது எவ்வாறு என்று கேட்டார். நூலகம் சென்று நூல் ஒன்றை வாசித்து என்று சொன்னேன். 

அந்த ஆசிரியை எல்லா மாணவர்களையும் நோக்கி ‘’நாங்கள் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பேச்சுப் போட்டியின் நடுவர்களாக இருந்திருக்கிறோம். பெரும்பாலும் மாணவர்கள் பேசுவது அனைத்தும் நாங்கள் கேட்ட அறிந்த விஷயமாகவே இருக்கும். முதல் முறையாக முற்றும் புதிதான விஷயம் ஒன்றை ஒரு பேச்சுப் போட்டியில் ஒரு மாணவன் பேசி அறிகிறோம். கோவிந்த வல்லப பந்த் குறித்து நாங்கள் அறிவது இதுவே முதல் முறை. இந்த மாணவனின் சொந்த முயற்சியைப் போல அனைவரும் முயன்று பார்க்க வேண்டும். ஆசிரியர்களான நாங்கள் இந்த மாணவனின் முயற்சியைப் பாராட்டுகிறோம்’’ என்றார். 

அந்த போட்டியில் எனக்குப் பரிசு கிடைக்கவில்லை. என்றாலும் அடுத்த சில நாட்கள் ஆசிரியர்கள் மத்தியில் கோவிந்த வல்லப பந்த் குறித்து பேச்சு நிலவிக் கொண்டிருந்தது. 

பின்குறிப்பு :

கோவிந்த வல்லப பந்த் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சட்டம் பயின்றவர். உப்பு சத்யாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கங்களில் தீவிரப் பங்காற்றியவர். நாட்டின் சுதந்திரத்துக்குப் பின், உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக இருந்திருக்கிறார். நேருவின் மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார்.