Tuesday 28 December 2021

காவிரி போற்றுதும் - செயலாற்றல்

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பாக செயல்படுகிறது. பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டுச் செறிவு கொண்ட ஒரு தேசம் தன் குடிகளுக்கு அளிக்கும் செல்வம் என்பது மிகப் பெரியது. இந்தியாவில் ஒரு கிராமம் என்பது ஒரு தேசத்தின் நுண் வடிவமாகவே உள்ளது. எல்லையற்ற பரம்பொருளை ஒரு சிலையில் பதிட்டை செய்வது போல இந்த தேசம் கிராமங்களின் வடிவில் பதிட்டை செய்யப்பட்டுள்ளது. பக்தன் சிலையின் வழியாக தெய்வத்தை வணங்குவது போல ‘’காவிரி போற்றுதும்’’ கிராமங்களுக்குச் செய்யும் சேவையை தேசத்துக்குச் செய்யும் சேவையாக எண்ணுகிறது. 

இதுவரை ‘’காவிரி போற்றுதும்’’ செய்துள்ள செயல்களையும் அதன் மூலம் அடைந்துள்ள அனுபவங்களையும் அவற்றை வழித்துணையாய்க் கொண்டு இனி மேற்கொள்ள உத்தேசித்துள்ள விஷயங்களையும் இந்த தருணத்தில் பதிவு செய்வது அவசியமானது என்று தோன்றியது. 

எனது பதிவுகளில் செயலாற்றும் கிராமங்களின் பெயரைக் குறிப்பிட்டது இல்லை. செயல் ஒரு கிராமத்தில் நிகழ்ந்திருந்தாலும் எல்லா கிராமங்களிலும் ஆற்ற வேண்டிய பணிகள் இவை என்பதால் எல்லா கிராமங்களின் பெயரும் செயலாற்றும் கிராமங்களின் பெயரே. 

1. மயிலாடுதுறையிலிருந்து 30 நிமிடம் மோட்டார்சைக்கிள் பயணத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு முதல் முறையாகச் சென்றேன். அப்போது அந்த கிராமத்தில் எவரையும் எனக்குத் தெரியாது. பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சில இளைஞர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த கிராமத்தில் என்னால் முடிந்த ஏதேனும் பணிகளை ஆற்ற விரும்புவதைச் சொன்னேன். அவர்கள் நான் சொன்ன விஷயங்கள் மீது  ஆர்வம் காட்டினார்கள். 

வாழிடத்தைச் சுற்றி அதிக மரக்கன்றுகளை நடுதல் என்பது எல்லாரும் விரும்பக்கூடிய செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய அனைவரும் ஏற்கும் ஒரு செயல். ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாநில அளவில் மாவட்ட அளவில் இது மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த அவதானத்திலிருந்து எனது செயலைத் திட்டமிட்டேன். மாநில அளவில் மேற்கொள்ளப்படும் போது மரக்கன்றுகளைப் பராமரித்தல் என்பது  பலவிதமான செயல்கள் அடங்கியதாக இருப்பதால் அதனைப் பின் தொடர்வதில் எல்லாரும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதற்கு பொருட்செலவு ஆகும். அதிக மனித உழைப்பு தேவை. எனவே பொது இடத்தில் மரக்கன்றுகள் நடுவதை விட ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்கினால் அவர்கள் பொறுப்பாக பராமரிப்பார்கள் என்று எண்ணினேன். பொது இடத்தில் நடப்பட்டாலும் சொந்த இடத்தில் நடப்பட்டாலும் மரம் சூழியலுக்குத் தன் பங்களிப்பை அளிக்கவே செய்யும். 

அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து அவர்களிடம் எனது எண்ணத்தைச் சொன்னேன். அவர்கள் அதனை ஏற்றார்கள்.

இந்த பணியைச் செய்யும் போது, எனக்கு ஒரு நடைமுறை புரிந்தது. விவசாய சூழலில் மரங்கள் வளர்க்க சிறப்பான கவனம் செலுத்தப்படுவதில்லை. இங்குள்ள காலநிலைக்கு மழைக்காலத்தில் மரங்கள் நடப்பட்டால் அவை தன்னியல்பாக வளர்ந்து விடும். எனினும் மரங்களின் மூலம் பொருளியல் பயன் அடைய வேண்டும் என்றால் அதற்கு மிகச் சிறிய அளவில் கவனம் செலுத்தப்பட வேண்டும் . இந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டியிருப்பதை பணி செய்யும் போது உணர்ந்து கொண்டேன். 

அந்த ஊருக்குப் பத்து நாட்கள் தொடர்ச்சியாக சென்றேன். காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுவேன். ஏழு மணி அளவில் அங்கே பணி தொடங்குவேன். மதியம் ஒருமணி வரை கணக்கெடுப்பில் ஈடுபடுவேன். ஒரு வீட்டுக்கு 5லிருந்து 10 நிமிடங்கள் என எடுத்துக் கொண்டால் ஒரு மணிக்கு பத்து குடும்பத்தாரைச் சந்திக்கலாம். உரையாடலாம். கணக்கெடுக்கவும் செய்யலாம். முதல் ஓரிரு நாட்களிலேயே அந்த கிராமத்தில் என் செயல்பாடுகள் குறித்த பேச்சு உருவானது. பலர் தங்கள் தோட்டங்களைச் சீரமைத்ததையும் வேலியிட்டதையும் கணக்கெடுப்பை நிறைவு செய்யும் முன்னரே கண்டேன். அவர்களைப் போன்றோரின் ஆர்வமே என்னை நாளும் இயங்கச் செய்கிறது. 

நான் அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் நண்பன். எல்லாருக்கும் பொதுவானவன். அந்த கிராம மக்களின் அன்பும் பிரியமுமே என்னை இவ்வாறு எண்ணச் செய்கிறது. இந்த எண்ணம் எனக்கு உருவானதற்கு நான் காரணமல்ல. அந்த கிராம மக்களே காரணம். 

கிராமம் ஒன்றாக இருப்பதை உணர்த்தும் விதமாக ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டேன். கிராம மக்கள் அனைவரும் பிரியத்துடன் அதனை செய்தனர். ஒரு மனிதன் முயன்றால் கூட ஒட்டுமொத்த கிராமத்தையும் இணைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். 

மரக்கன்றுகள் ஏன் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வியை பலர் எழுப்புவதுண்டு. ஒரு மரக்கன்றை வளர்க்கும் நீண்ட கால செயலில் மரக்கன்றின் விலை என்பது மிகவும் சொற்பமானது. அவற்றைப் பராமரிக்கவும் வேலியிடவும் பெரும் செலவு பிடிக்கும். விவசாயிகள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதால் தான் இந்த செயல் நிகழ்கிறது. அதற்கு ஊக்கமளிக்கும் விதமாக மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு நிச்சயம் இலவசமாக வழங்கலாம். 

அனைத்து மரக்கன்றுகளும் பிழைத்து விட்டனவா ? வளர்ந்து விட்டனவா? என்பது பலமுறை எழுப்பப்படும் கேள்வி. கணிசமான மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன.  தொடர் மழையால் மரக்கன்றுகளுக்கு பாதிப்பு இருந்தது. சிலர் பராமரிக்கும் விதத்தால் பாதிப்பு இருந்தது. ஆடு மாடு மேய்ந்து பாதிப்பு இருந்தது. இவ்வாறெல்லாம் இருப்பது அங்கே இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவும் இன்னும் அதிக மரக்கன்றுகள் வழங்கவும் உள்ள தேவையை உணர்த்துகிறதே ஒழிய வழங்கக்கூடாது என்ற முடிவை எடுக்க அல்ல. நடக்க முயற்சிக்கும் குழந்தை நிச்சயம் கீழே விழும். பின்னர் எழும். நடையின் நுட்பம் அறிந்த பின் அக்குழந்தை நடக்க உலகத்தின் மொத்த நீளமும் இருக்கிறது. 

2. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்த எல்லா குடும்பத்தாரையும் சந்தித்து கோவிட் - 19 தடுப்பூசி போட்டுக் கொள்ள விழிப்புணர்வை உண்டாக்கினேன். மரக்கன்றுகளுக்காக கணக்கெடுத்த அனுபவமும் ஒரு கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்த அனுப்வம் இருந்ததால் இந்த பணியை இலகுவாக செய்ய முடிந்தது. அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் அந்த கிராமம் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றது. 

அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கால்நடைகள் மேயாத பூமரக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. 

3. நண்பர்களின் ஆதரவுடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட சலூன்களில் சுவாமி சித்பவானந்தர் எழுதிய ஸ்ரீராமகிருஷ்ண சரிதம், ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம், ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம், சுவாமி விவேகானந்தர்,  சகோதரி நிவேதிதை, தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் ஆகிய நூல்களையும் விவேகானந்தரின் சொற்களின் தொகுப்பான வீர இளைஞருக்கு,  ராஜாஜி தொகுத்த  ஸ்ரீராமகிருஷ்ணரின் ஞானமொழி ஆகிய நூல்களும் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இந்த பணிக்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சலூன் கடைக்கும் சென்று ஒவ்வொரு சலூன் உரிமையாளரையும் நேரடியாக சந்தித்தேன்.  சலூன் உரிமையாளர்கள் வெளிப்படுத்திய ஆர்வமும் பிரியமும் நம்பிக்கையளிப்பது. 

4. மழையால் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் 500 பேருக்கு ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு நாள் மாலை 5 மணி அளவில் உணவு வழங்கப்பட்டது. நண்பர்களின் உதவியே இதனை சாத்தியமாக்கியது. அப்பகுதி மக்கள் அங்கிருந்த ‘’சப்த மாதா’’ கோவிலை சீரமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஐம்பது பெண்கள் இணைந்து நாற்ப்த்து எட்டு நாளைக்கு இப்போது உள்ள கோவிலில் மாலை அந்தி ஐந்தரை மணி அளவில் தினமும் ஒரு தீபம் ஏற்றி ‘’அபிராமி அந்தாதி’’ பாராயணம் செய்யுமாறு கூறியுள்ளேன். கோவில் கட்டித்தர முயற்சிகள் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளேன்.  

திட்டமிட்டுள்ள பணிகள்

1. ஒரு கிராமத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியதைப் போல பத்து கிராமங்களுக்கு இந்த பணியை இதே பாணியில் விரிவாக்க எண்ணம் கொண்டுள்ளேன். ஒரு கிராமம் முழுமையாக மரக்கன்றுகள் நடுதலில் ஈடுபட்டதையும் அங்குள்ள விவசாயிகளின் அனுபவங்களையும் எடுத்துக் கூறும் வாய்ப்பு இந்த கிராமங்களுக்குப் பணி புரியும் போது இருப்பதால் எண்ணிய முடிதல் நல்விதமாய் இருக்கக்கூடும். 

ஒரு கிராமத்துக்கு 20,000 மரக்கன்றுகள் தேவைப்பட்டது. பத்து கிராமங்களுக்கு 2,00,000 மரக்கன்றுகள் தேவைப்படும். அத்தனை மரக்கன்றுகளையும் விதையிட்டு வளர்த்து மரக்கன்றுகளாக்கி விவசாயிகளுக்கு அளிக்க விருப்பம் கொண்டுள்ளேன்.  

2. ஊர் அருகில் காவிரியின் கிளை ஆறு ஒன்று உள்ளது. அதன் நீளம் 50 கி.மீ. அதன் கரை நெடுகிலும் வாய்ப்புள்ள இடங்களில் ஆல், அரசு , இலுப்பை ஆகிய மரங்களை நடுவது. மொத்தம் 6000லிருந்து 10,000 வரை மரக்கன்றுகள் நடப்பட்டு மூன்று ஆண்டுகள் அதன் பராமரிப்பை உறுதி செய்து வளரச் செய்வது. 

நன்றிக்கடன்

1. நிகழ்ந்த செயல்களுக்கும் இனி நிகழ இருக்கும் செயல்களுக்கும் கிராமத்து மக்களே காரணம். அவர்களின் அன்புக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ’’காவிரி போற்றுதும்’’ செயல் துவக்கத்தை மட்டுமே நிகழ்த்துகிறது. அத்துவக்கத்தைப் பயன்படுத்தி செயலை முன்னெடுப்பவர்கள் கிராம மக்களே. 

2. ‘’காவிரி போற்றுதும்’’ செயல்களுக்கு ஆலோசனை கூறி உடனிருந்து மேலும் செயல்பட ஊக்கமளிக்கும் நண்பர்களே நிகழ்ந்த செயல்களுக்கும் இனி நிகழ இருக்கும் செயல்களுக்கும் காரணம். அவர்களுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.