Sunday 16 January 2022

பலவிதப் பணிகள்

ஜனவரி துவங்கியதிலிருந்தே பலவிதப் பணிகள் நிறைந்திருக்கின்றன. தொழில் சம்பந்தமான சில முக்கியப் பணிகளைச் செய்தேன். இப்போதெல்லாம் என்னை என் தொழில் சார்ந்த ஒருவனாக யாரும் எண்ணுவதில்லை. நினைவுபடுத்தினாலும்  யாரும் ஒத்துக் கொள்வதில்லை. நினைத்துப் பார்த்தால் எந்த மனிதனாலும் பலவிதமான பணிகளைச் செய்ய முடியும். பணி என்பது இந்த கணத்தில் நாம் என்ன ஆற்ற முடியுமோ அதனை ஆற்றுவதே. இந்த கணத்தில் நம்மால் செய்யக்கூடியதை முழுமையாகச் செய்தோம் என்றால் நம்மால் நிறைவை உணர முடியும். யக்‌ஷப் பிரசன்னம் ‘’திருப்தியை மிஞ்சிய செல்வம் இல்லை’’ என்கிறது. 

சென்ற வாரம் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். தடுப்பூசிக்காகப் பணி புரிந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு மூதாட்டி என்னிடம் தனது சிக்கல் ஒன்றைக் கூறினார். அதாவது , அவர் முதல் தவணை போடும் போது 94 எனத் தொடங்கும் அவரது அலைபேசி எண்ணை 84 எனத் தொடங்கும் அலைபேசி எண்ணாக பதிவு செய்து விட்டார்கள். அவரது அலைபேசி எண்ணின் முதல் இலக்கம் மாறி விட்டது என்பதால் அவரால் தடுப்பூசிச் சான்றிதழ் பெற முடியவில்லை. அதனை என்னிடம் தெரிவித்தார். தடுப்பூசி போட்ட போது அளித்த சீட்டை என்னிடம் வழங்கினார். தடுப்பூசிச் சான்றிதழ் எடுத்துத் தர முடியுமா என்று கேட்டார். ரயிலில் பயணிக்க எதிர்காலத்தில் தடுப்பூசிச் சான்றிதழ் தேவை என்கிறார்களே என்றார். 

இன்னும் அறிவிப்பு வரவில்லை ; வரும் போது சரி செய்து கொள்ளலாம் என பதில் கூறலாம். ஆனால் எனக்கு அப்படி பதில் சொல்லி பழக்கமில்லை. ஒருவர் தனது சிக்கலை ஒருவரிடம் கூறும் போது அந்த சிக்கலிலிருந்து தான் விடுபட வேண்டும் என்று விரும்பியே அதனைப் பகிர்ந்து கொள்கிறார். அந்த உணர்வுக்கு மதிப்பு தர வேண்டும் என நான் நினைப்பேன். அதற்கு ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தான் நான் முடிவெடுப்பேன். 

மூதாட்டியிடம் சீட்டைப் பெற்றுக் கொண்டதற்கு மறுநாள் தவறாகப் பதிவாகியிருந்த அலைபேசி எண்ணுக்கு ஃபோன் செய்து பார்த்தேன். அந்த எண் வேறொருவருக்கு சொந்தமானதெனில் அவரிடம் விஷயத்தை விளக்கி கோவின் இணையதளத்தில் அந்த எண்ணைப் பதிவு செய்தால் ஒரு ஓ. டி. பி வரும். அதனைத் தெரிவித்தால் அதன் வழியே தளத்தின் சான்றிதழ் பிரிவைத் திறந்து உள்சென்று சான்றிதழ் பெற்று விடலாம். ஆனால் அப்படி ஒரு அலைபேசி எண்ணே இல்லை என பதில் வந்தது. 

அடுத்த நாள் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். நான் முயன்று பார்த்த வழிமுறையையே அவர்களும் கூறினர். நான் முயன்று விட்டேன். பயனில்லை என்றேன். எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கணக்கில் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பார்த்து அந்த நிலையத்தின் செவிலியரிடம் பேசினர். அவர் அடுத்தடுத்து முக்கியமான நிறைய பணிகள் இருப்பதால் இந்த விஷயத்தை அடுத்த நாள் செய்யலாமா என்று கேட்டார். நான் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டேன். மீண்டும் மறுநாள் சென்றேன். காத்திருக்கச் சொன்னார்கள். 45 நிமிடங்கள் காத்திருந்தேன். சமூகப்பணி ஆற்றுபவர்கள் இவ்வாறான காத்திருப்புக்குப் பழகிக் கொள்ள வேண்டும்.  சமூகப் பணியாற்றுபவன் இன்னும் மேலான உலகத்துக்காக இன்னும் மேலான சகவாழ்வுக்காகக் காத்திருக்கிறான். அவ்வாறான நேரங்களில் நான் உடனிருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ன நோக்கத்துக்காக வருகிறார்கள் என கவனிப்பேன். அங்கே அவர்களுக்கு ஏதாவது செய்து கொடுக்க முடிந்தால் செய்து கொடுப்பேன். 

மருத்துவமனையில் காத்திருந்த போது எனக்கு ஒன்று தோன்றியது. நம் மாநிலத்தில் உடலை ஆரோக்கியமாக உறுதியாக வைத்திருக்கும் பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கான பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு உடற்பயிற்சி பழக்கம் இல்லை. ஒரு கிராமத்தில் 100 - 150 குழந்தைகள் இருப்பார்கள் எனில் அவர்களுக்கு கால்பந்து, ரிங் பால், பேட்மிட்டன் பந்து , பேட்மிட்டன் மட்டை ஆகியவற்றை நாம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை தினமும் விளையாடச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவானது. உருவான எண்ணம் எனக்கு உற்சாகமூட்டியது. அடுத்தடுத்து என்ன நிகழக் கூடும் என்று கற்பனை செய்தேன். ஒரு மாதம் அந்த குழந்தைகள் அந்த பந்துகளுடன் விளையாடுவார்கள். பின்னர் அவர்களைச் சந்தித்து  அவர்களுக்கு உடல்நலன் உடற்பயிற்சி ஆகிய விஷயங்களைக் குறித்து எடுத்துக் கூறி தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவ வேண்டும்.  இன்னொரு புறம் 100 குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க நிதிக்கு எங்கே போவது என்ற எண்ணம் மனதில் இன்னொரு பக்கம் உருவாகி பல வினாக்களை எழுப்பியது. அந்த எண்ணத் தொடரை வெட்டி விட்டு முதல் தொடரிலேயே பயணித்தேன். ஒரு சமூகச் செயல்பாட்டாளன் என்றுமே கற்பனையை இழக்கக் கூடாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது நாள் அது செயலாகும் . 

45 நிமிடக் காத்திருப்புக்குப் பின் ‘’சார் ! இன்னும் 30 நிமிஷம் ஆகும் சார். எங்கயாவது போகணும்னா போய்ட்டு வந்திருங்க ‘’ என்றார்கள். மருத்துவமனைக்கு அருகில் ஒரு மனைத்தரகர் இருக்கிறார். அவர் வீட்டுக்குச் சென்றேன். எனது நண்பர் ஒருவர் அவரது மனையை விற்பனை செய்ய வேண்டும் என்று சொன்னார். அந்த மனையை மனைத்தரகருக்குக் காட்டினேன். அதன் உரிமையாளர் அதன் விலையாக இரண்டு என்ற இலக்கத்துக்குப் பக்கத்தில் ஏழு பூஜ்யங்களை சொல்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவருக்கு அந்த இடத்தை ஒன்று என்ற இலக்கத்துக்குப் பக்கத்தில் ஏழு பூஜ்யங்கள் என வாங்கிக் கொடுத்தேன். உரிமையாளர் நல்ல பார்ட்டியாக எதிர்பார்க்கிறார் என்ற விபரத்தை தரகரிடம் சொன்னேன். அவரை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தேன். பத்து நிமிடம் காத்திருந்தேன். சான்றிதழைக் கையில் கொடுத்தார்கள். கிராமத்தில் அந்த மூதாட்டியிடம் சென்று கொடுத்தேன். அவருக்கு அவ்வளவு சந்தோஷம். ‘’ சார் ! இந்த காலத்துல சொந்த காரியத்தையே யாரும் சிரத்தையா செஞ்சுக்க மாட்டேங்கறாங்க. அடுத்தவங்க காரியத்தை இவ்வளவு அக்கறையா செய்றீங்களே சார். ரொம்ப நன்றி’’ . 

அந்த மக்களின் பிரியமும் அன்பும் நல்லெண்ணமுமே என் வாழ்வில் நான் சேர்த்த அரும் பெருஞ்செல்வம். அதற்கு எதுவும் ஈடாகாது.