Monday, 17 January 2022

இயல்பு

சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு இயல்பு உண்டு. நான் எப்போதும் எதையாவது வாசித்துக் கொண்டு இருப்பேன். வாசிப்பின் விளைவாக நான் பல்வேறு உலகங்களில் பல்வேறு காலங்களில் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். தமிழ்ச் சமூகத்தில் நூல்களை வாசிப்பவனுக்கென ஒரு தனிமை உருவாகி விடும். ஏனென்றால் தமிழ்ச் சமூகத்துக்கு நூல்களை வாசிக்கும் பழக்கம் இல்லை. பாடப்புத்தகம் மட்டுமே பள்ளியிலும் கல்லூரியிலும் பலர் படித்திருப்பார்கள். அதைத் தாண்டி வேறு நூல்களை வாசிக்கும் சமூகப் பழக்கம் இங்கே இல்லை.  நூல்களை வாசித்தல் அது குறித்து சிந்தித்தல் விவாதித்தல் ஆகியவை இங்கே நிகழ்வதில்லை. இங்கே வாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். இன்றும் கூட நான் ஒரு விஷயத்தைக் கவனிப்பதுண்டு. ஒரு நூலை முழுமையாக வாசிக்கவே இங்கே பலருக்குத் தெரியாது. ஒரு நூலை வாசிக்கும் போது அந்த நூலுக்கு முழுதாக நமது நல்லெண்ணத்தைக் கொடுக்க வேண்டும். வாசிப்பின் போதே எந்த எதிர்ப்பு உணர்வும் அந்த நூல் குறித்து மனதில் உண்டாகக் கூடாது. முழுமையாக வாசித்த பிறகு அந்த நூலை நாம் ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். ஏற்கிறோம் என்றால் ஏன் ஏற்கிறோம் என்று நமக்குத் தெரிய வேண்டும். ஏற்கவில்லை என்றாலும் ஏன் அவ்வாறு நினைக்கிறோம் என்பது நமக்குத் தெரிய வேண்டும். சிறு வயதில் நான் நிறைய புத்தகம் வாசிப்பேன். எங்கள் வீட்டில் நூல் வாசிக்கும் சூழல் இருந்தது அதற்கு முக்கியக் காரணம். அப்போது புனைவுகளை அதிகம் வாசிப்பேன். அதன் பின்னர் சுய சரிதங்கள், வரலாறு ஆகியவற்றின் மீது ஆர்வம் திரும்பியது. நூல்கள் அடிப்படையில் மனிதர்களையும் மனித உணர்வுகளையும் மனிதனின் தவிப்புகளையும் குறித்துப் பேசுபவை. எனவே அவை மானசீகமாக மானுடத் திரள் நோக்கி வாசகனைச் செலுத்திய வண்ணம் இருக்கும். தமிழ்ச் சூழலில் இலக்கிய வாசகன் இன்னொரு சக வாசகனைக் கண்டடைவது என்பது அபூர்வமானது. அவ்வாறாகக் கண்டடைந்த வாசகனுக்கும் சக வாசகனுக்கும் ஒரே ரசனை இருப்பது என்பது அதனினும் அபூர்வமானது. எனவே தமிழ் இலக்கிய வாசகன் வாசிப்புப் பழக்கம் இல்லாத சக மனிதர்களுடன் கருத்துக்கள் குறித்து பேசுவது விவாதிப்பது என்பது மிகவும் அசௌகர்யமான செயலாகவே இருக்கும். இங்கே நூல் வாசிக்கும் யாரும் தங்களை வாசகர்களாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எவ்வாறு அந்த தனித்தன்மையை மறைத்துக் கொள்வது என்பதைப் பயின்று விடுவார்கள். இருப்பினும் வாசகனின் நுட்பமான மனம் சக மனிதர்களிடமிருந்து விலகிச் செல்கிறோமா என்ற ஐயம் கொண்ட படியே இருக்கும். அவரவர்க்குரிய வழிமுறைகளில் அவரவர் இதனைக் கடந்து வருவார்கள். 

என்னுடைய பள்ளி நாட்களில் முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை, ராஜிவ் கொலை வழக்கு, டங்கல் திட்டம், புதிய பொருளாதாரக் கொள்கை, ராம ஜென்ம பூமி, மண்டல் கமிஷன் ஆகிய விஷயங்கள் பத்திரிக்கைகளில் விவாதிக்கப்படும். நான் அவை குறித்து எல்லா தரப்பையும் வாசிப்பேன். பெரியவர்களுடன் விவாதிக்க நேரும் போது அவர்கள் அந்த விஷயங்கள் குறித்து மேலோட்டமாகவே அறிந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் வாதங்களின் போதாமைகளை எடுத்துக் காட்டி நிறுவி விடுவேன். அது அவர்களுக்கு சங்கடங்களை உருவாக்கும். அனைவருடனும் முரண்பட்டு விடுகிறேனே என்று பெற்றோர் கவலை கொள்வர். 

லூயி ஃபிஷரின் ‘’ The life of Mahatma Gandhi'' நூலை வாசித்தது எனக்கு மக்கள், சமூகம், சமூகச் செயல்பாட்டாளன் சமூகத்தைப் புரிந்து கொள்ளுதல், சமூகத்தை அவன் நேசித்தல் ஆகிய விஷயங்கள் குறித்து ஒரு புரிதலை உருவாக்கியது. காந்திய வழிமுறைகள் அவற்றின் குறியீட்டுத் தன்மை ஆகியவை பெரும் ஈர்ப்பை உண்டாக்கின. அந்த நூலில் தண்டி யாத்திரை பற்றி எழுதும் போது லூயி ஃபிஷர் தண்டி யாத்திரை குறித்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அதனை நெப்போலியனின் இரண்டாவது திக்விஜயத்துக்கு ஒப்பானது எனக் கூறியதை வாசித்த போது அடைந்த சிலிர்ப்பு இன்றும் நினைவில் உள்ளது. 

பின்னர் நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். ஒரு மனை. அதில் ஒரு வீடு கட்ட வேண்டும். இதற்குள் எனது நாளின் பெரும்பகுதி அடங்கியது. ஒவ்வொரு நாளும் நிகழும் கட்டுமானப் பணியும் அதற்கான ஆயத்தங்களும் தொழிலாளர்களின் மன அமைப்பும் நிதிப் பழக்கங்களும் வாழ்க்கைமுறையும் அருகில் இருந்து அவதானிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. அதில் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். Force of Habit எப்படி தொழிலாளர் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிந்தேன். அப்போது அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் கிடையாது. வங்கிக் கணக்கு இல்லை என்பதால் சேமிக்கும் வழக்கமும் கிடையாது. ஆயுள் காப்பீடு அவர்களிடம் இருக்காது. மருத்துவக் காப்பீடும் இருக்காது. சகாயமான ஊதியம் பெற்றாலும் சிரமத்தில் இருப்பார்கள். இவை வாழ்க்கை குறித்த நடைமுறைப் புரிதலை உருவாக்கின. வீடு மனை ஆகியவை அசையாச் சொத்துக்கள் என்பதால் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பு கொள்ளவும் அவர்களின் மன ஓட்டத்தை அறியவும் வாய்ப்பு கிடைத்தது. 

மற்றவர்கள் பேசுவதை ஆழ்ந்து கவனிப்பதும் குறைவாக மிகக் குறைவாகவே பேசுவதும் லௌகிகத்தில் உபயோகமானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இலக்கிய வாசகனாக தனித்திருத்தல் என்னும் இயல்பு இதில் அதிகம் உதவியது. 

இவை அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருந்த போது நான் நிறைய வாசித்துக் கொண்டுமிருந்தேன். பலவிதமான கனவுகளும் கற்பனைகளும் மனத்தை நிரப்பிக் கொண்டிருந்தன. நாம் சிந்திக்கிறோம் என்ற உணர்வு இனியது ; சிந்தித்து செயல்படுகிறோம் என்னும் உணர்வு அதனினும் இனியது. 

ஒரு இந்தியப் பயணம் மேற்கொண்ட பின்னர் ஒரு பயணக்கட்டுரை எழுதினேன். அது பிரசுரமானது. அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை, கவிதை, கம்ப ராமாயண அறிமுக நூல் என எழுதினேன். வலைப்பூ தொடங்கி அனேகமாக தினமும் ஏதாவது பதிவிடுகிறேன். 

இந்நிலையில் சேவைப் பணிகள் சிலவற்றைத் திட்டமிட்டேன். செயல்படுத்தினேன். எனது இலக்கிய வாசிப்பும் சமூகப் புரிதலும் கட்டுமானத் தொழிலில் நான் அடைந்த லௌகிக விவேகமும் அவற்றுக்கு அடிப்படையாய் அமைந்தன. நண்பர்கள் என் மீது வைத்திருக்கும் பிரியமும் அன்பும் நம்பிக்கையும் அனைத்தையும் சாத்தியமாக்குகின்றன. உண்மையில் நான் ஒரு கற்பனை உலகில் ஆழ்ந்திருப்பவன். இன்றும் எனக்கு ஒரு பொது விஷயத்துக்காக என்றாலும் ஒருவரிடம் உதவி கேட்பதற்கு கூச்சமாகத்தான் இருக்கும். யாரும் சிரமமாக உணர்ந்து விடக் கூடாது என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். ஒருவரிடம் ஒரு ந்ல்ல விஷயத்துக்கு என்றாலும் அடிக்கடி நிதி கேட்கக் கூடாது என்று நினைப்பேன். ஆனால் என் தடைகளைத் தாண்டி எனக்கு நண்பர்கள் உதவுகிறார்கள். இப்போது அவ்வாறு உதவியளித்த பலரும் தங்கள் ஊர்களில் தாங்கள் பணி புரியும் ஊர்களில் ‘’காவிரி போற்றுதும்’’ செய்யும் பணிகளைப் போல் செய்கின்றனர். அவர்கள் நண்பர்களை ‘’காவிரி போற்றுதும்’’ உடன் இணைக்க விருப்பம் கொள்கின்றனர். 

சமீபத்தில் ஒரு விஷயம் நடந்தது. அதாவது தடுப்பூசிக்காகச் செயலாற்றிய கிராமத்தில் ஒரு மூதாட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது செவிலியர்கள் 94 எனத் தொடங்கும் அவரது அலைபேசி எண்ணை 84 எனத் தொடங்கும் எண்ணாக பதிவு செய்து விட்டார்கள். அதனை சரி செய்து சான்றிதழ் பெற்றுத் தருமாறு என்னை அந்த மூதாட்டி கேட்டுக் கொண்டார். அதற்காக இரண்டு நாட்கள் வேலை செய்தேன். அப்போது அரசு மருத்துவமனையில் காத்திருக்க நேரிட்டது. காத்திருக்கும் நேரத்தில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். மருத்துவமனைக்கு வருபவர்களை கவனித்துப் பார்த்தால் அவர்கள் ‘’ஃபிஸிக்கல் ஆக்டிவிட்டி’’ கொஞ்சம் கூட இல்லாதவர்கள் என்பது பார்த்தாலே தெரிந்தது. இந்த நிலைக்கு ஒரு சமூகக் காரணம் உண்டு. தமிழ்நாட்டில் வீடுகளில் குழந்தைகளுக்கு மூன்று அல்லது நான்கு வயது வரை மட்டுமே விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருகிறார்கள். அதன் பின் விளையாட்டு என்பதை பள்ளிக்கல்விக்கு இடையூறு என எண்ணி எந்த விளையாட்டுப் பொருட்கள் - அதாவது வாலிபால், ஃபுட்பால், பேட்மிட்டன் ராக்கெட், பேட்மிட்டன் பந்து, கிரிக்கெட் பந்து, டென்னிஸ் பந்து, ரிங் பால் என எதுவுமே வாங்கித் தருவதில்லை. ஏதேனும் ஒரு கிராமத்தில் வசிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் - 3 வயதிலிருந்து 17 வயது வரை - அவர்கள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும் என்ற விருப்பம் உருவானது. ஒரு கிராமத்தில் இந்த வயதில் அதிகபட்சம் 200 குழந்தைகள் வரை இருக்கக் கூடும். அவர்கள் அனைவருக்கும் இது வழங்கப்பட்டால் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவார்கள். பாரதி ‘’ஓடி விளையாடு பாப்பா’’ என்கிறார். இந்த விஷயத்தைச் செய்வது என முடிவு செய்தேன். 

நிதிக்கு என்ன செய்வது என்று யோசித்த போது வெளியூர் இல்லாமல் உள்ளூரில் இருக்கும் 200 நண்பர்களிடம் இந்த விஷயத்தை விளக்கி ஒவ்வொருவருவரையும் ஆளுக்கு ஒரு விளையாட்டுப் பொருள் என வாங்கித் தரச் சொல்லலாம் எனத் திட்டமிட்டேன். ஃபுட்பால், வாலிபால், ரிங் பால், பேட்மிட்டன் ராக்கெட் என ஒவ்வொருவர் ஒன்றை வாங்கித் தருவார்கள். இந்திய மரபு தெய்வம் இந்த மண்ணில் குழந்தையாக அவதரித்தது என்கிறது. ராமனும் கிருஷ்ணனும் இன்றும் இந்திய மக்களுக்கு குழந்தைகள் தான். அதனால் குழந்தைகளை மகிழ்ச்சி அடையச் செய்வது என்பது தெய்வங்களை மகிழ்ச்சி அடையச் செய்வதும் கூடத்தான்.