Thursday, 20 January 2022

கோர்ட் ( நகைச்சுவைக் கட்டுரை)

இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் இருக்கும். 

நான் எனது இரு சக்கர வாகனத்தின் - வீட்டில் உள்ள மோட்டார் வாகனங்களின் காப்பீடை உரிய தேதியில் செலுத்தி வைத்திருப்பேன். காப்பீட்டு நகலும் வாகன பதிவு ஆவணங்களின் நகலும் வண்டியில் எப்போதும் இருக்கும். ஒருநாள் மதியம் வண்டியை வாட்டர் வாஷ் செய்ய வாட்டர் வாஷ் மையத்திற்கு எடுத்துச் சென்றேன். அப்போது ஆவண நகல்களை வீட்டில் வைத்து விட்டு சென்றேன். நனைந்து விடக் கூடாது என்பதற்காக. வீடு திரும்பியதும் மீண்டும் எடுத்து வைக்க மறந்து விட்டேன். 

அன்று இரவு, எனது நண்பர் ஒருவரை ரயிலேற்றிவிட ஜங்ஷன் சென்றேன். வீடு திரும்புகையில் நகரின் மையப்பகுதியில் காவல்துறை சோதனை நடந்து கொண்டிருந்தது. எனது வாகனத்தை நிறுத்தினார்கள். ஆவணங்களின் நகலைக் கேட்டார்கள். 

‘’டாகுமெண்ட்ஸ் வீட்ல இருக்கு.’’

‘’ஃபைன் கட்டுங்க’’

‘’எதுக்கு?’’

‘’ஆர் சி புக் ஜெராக்ஸ் இல்ல. இன்ஷ்யூரன்ஸ் ஜெராக்ஸ் இல்ல.’’

‘’இன்ஷ்யூரன்ஸ் கரண்ட்ல தான் இருக்கு. ஆர் சி ஜெராக்ஸ் வீட்ல இருக்கு. நான் காலைல கொண்டு வந்து தர்ரேன்.’’

மற்றவர்களை விசாரிக்கத் தொடங்கினர். 

ஒரு கான்ஸ்டபிள் என்னிடம் வந்து ‘’ சார் இருநூறு ரூபாய் ஃபைன் கட்டிடுங்க’’ என்றார். 

’’ஃபைன் எழுதிக் கொடுங்க. நான் கோர்ட்டில் கட்டிடறன்’’

கான்ஸ்டபிள் அவருடைய மேலதிகாரியிடம் சென்று சொன்னார். பின்னர் ஒரு அச்சிடப்பட்ட நோட்டை எடுத்து என்னுடைய பெயர் விலாசம் எழுதிக் கொண்டு அதன் ஒரிஜினலை என்னிடம் தந்து விட்டு கார்பன் காப்பியை நோட்டிலேயே தக்க வைத்துக் கொண்டார். நான் வீட்டுக்கு வந்து மேஜை மேல் வைத்து விட்டு உறங்கி விட்டேன். காலை எழுந்ததும் அதனை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அதில் அசல் ஆவணங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு காட்டப்பட வேண்டும் என்றிருந்தது. அபராதத் தொகை என எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆவணங்களைக் கொண்டு வரும் போது அவை நடப்பில் இல்லாமல் இருந்தால் அபராதம் காவல் நிலையத்தில் செலுத்தப்பட வேண்டும் என இருந்தது.  ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று அங்கே இருந்த துணை ஆய்வாளரிடம் அவற்றைக் காண்பித்து விபரம் சொன்னேன். அவர் இன்ஷ்யூரன்ஸ் நடப்பில் இருக்கிறதா என பார்த்தார். ஆர் சி புத்தக ஒரிஜினலையும் பார்த்தார். எல்லாம் சரியாக இருக்கிறது எனக் கூறினார். நான் அவருடைய பெயரைக் கேட்டேன். சொன்னார். அந்த படிவத்தின் பின்புறம் எழுதிக் கொண்டேன். அவரது அலைபேசி எண்ணையும் கேட்டு  எழுதிக் கொண்டேன். வீட்டுக்கு வந்து விட்டேன். அந்த படிவத்தை கிழித்துப் போட்டு விடலாமா என எண்ணினேன். இல்லை வேண்டாம் என மனத்தின் ஒரு பகுதி சொன்னது. என்னுடைய மேஜை டிராயரின் அடியில் அதனை வைத்தேன். 

ஆறு மாதம் கழித்து எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. கோர்ட்டிலிருந்து பேசுவதாகச் சொன்னார்கள். வண்டி ஒரிஜினல் இல்லாமல் சென்றது தொடர்பாக அபராதம் செலுத்த வேண்டும் . உடனே வாருங்கள் என்றனர். அப்போது ஊரில் கோர்ட்டுக்கு புதுக் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். எனவே அருகருகே இருந்த மூன்று கல்யாண மண்டபங்களை வாடகைக்குப் பிடித்து கோர்ட் இயங்கிக் கொண்டிருந்தது. எந்த கல்யாண மண்டபத்துக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அங்கே சென்றேன். 

ஒரு போலீஸ்காரர் ஃபைன் கட்டுகிறீர்களா என்று கேட்டார். 

எதற்காக என்று கேட்டேன். 

பதிவாகியிருக்கிறது அதற்காக என்றார். 

நான் என் பாக்கெட்டில் இருந்த படிவத்தை எடுத்தேன். போலீஸ்காரர் அதனை எதிர்பார்க்கவில்லை. ஆர் சி புத்தகத்தின் நகலையும் இன்ஸ்யூரன்ஸ் நகலையும் காண்பித்தேன். இரண்டும் நடப்பில் இருப்பதை சுட்டிக் காட்டினேன். மேலும் காவல்துறை படிவத்தில் அடுத்த நாளே சென்று காவல் துணை ஆய்வாளரை சந்தித்து அவரது பெயரையும் அலைபேசி எண்ணையும் எழுதி வைத்திருப்பதைக் காண்பித்தேன். 

’’ஒரு மினிமம் அமௌண்ட் ஃபைன் கட்டுங்க. ஃபைன் கட்ட முடியாதுன்னா ஒரு வக்கீல் வச்சு வாதாடுங்க.’’

‘’எதுக்கு வக்கீல். நானே நடந்ததை சொல்றன். ஆர் சி புக்கும் காப்பீடும் எனக்கு படிவம் தந்த நாள்லயே நடப்புல இருக்கு. சரியா சொன்னா அதுக்கு மூணு மாசம் முன்னாடிலேந்து நடப்புல இருக்கு. இப்பவும் கரண்ட் தான். அதாவது காவல்துறை படிவம் தந்த நாளைக்குப் பிறகு நான் இன்ஸ்யூரன்ஸ் கட்டல. அதுக்கு மூணு மாசம் முன்னாடியே கட்டியிருக்கன். ஃபைன் கட்ட சொல்ற இன்னைக்கும் எல்லாம் கரண்ட்ல இருக்கு. அதுனால இதை தள்ளுபடி செய்யணும்னு ஜட்ஜ் கிட்ட கேக்கறன்’’ என்றேன்.  

போலீஸ்காரர் சோர்ந்து விட்டார். 

‘’சார் ! நீங்க லா படிச்சவரா?’’

‘’இல்ல. சிவில் என்ஜினியரிங் படிச்சன். பி. ஈ’’

‘’நாங்க இந்த ஃபார்மை கேன்சல் செஞ்சுக்கறோம் சார்.’’ 

நான் கிளம்பி விட்டேன். 

இந்த உரையாடல் அனைத்தும் திருமண மண்டப வாசலிலேயே  அதாவது கோர்ட்  வாசலிலேயே நடந்தது. நான் கோர்ட்டின் உள்ளே செல்லவேயில்லை.