Saturday, 22 January 2022

விதி மீறல் (நகைச்சுவைக் கட்டுரை)

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. 

அப்போது தரைவழித் தொலைபேசிகளே முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக இருந்த நேரம். ஊரில் ஒரு நண்பரை அவர் வீட்டுக்குச் சென்று அழைத்துக் கொண்டு அதன் பின் இன்னொரு நண்பர் வீட்டுக்குப் போய் அவரையும் கூட்டிக் கொண்டு பூம்புகார் செல்வதாகத் திட்டம். இரண்டாவது நண்பரின் கையில் அன்று இரு சக்கர வாகனம் இல்லை. அவருடைய வாகனத்தை அவரது சகோதரர் எடுத்துச் சென்று விட்டார். எனவே நான் சென்று அவரை என்னுடன் கூட்டிக் கொண்டால் தான் நாங்கள் மூன்றாவது நண்பரைச் சென்றடைய முடியும். இரண்டாம் நண்பரைக் காண சென்று கொண்டிருந்த போது எங்கள் மூவருக்கும் பொதுவான நண்பர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு ‘’லிஃப்ட்’’ கொடுத்தேன். பூம்புகார் செல்ல உத்தேசித்துள்ளோம் என்று சொன்னேன். அவரும் எங்களுடன் வர விருப்பம் தெரிவித்தார். அவரையும் அழைத்துக் கொண்டு இரண்டாம் நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். என்ன செய்வது என்று ஆலோசித்தோம். 

மூன்றாம் நண்பரை இங்கே வரச் சொல்லி விடுவோம். நாம் அப்போது நான்கு பேராக இருப்போம். இரு வாகனங்கள் நம்மிடம் இருக்கும். வாகனத்துக்கு இருவர் என பூம்புகார் பயணிப்போம் என்றேன். ஆனால் மூன்றாம் நண்பரின் வீடு  பூம்புகார் சாலையில் இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்துக்கு அவர் எதிர் திசையில் வர வேண்டும் என்பதால் நண்பர்கள் இருவரும் அவருடைய இடத்துக்கு ஒரே இரு சக்கர  வாகனத்தில் மூன்று பேர்  செல்வோம் என்று கூறினர்.

‘’அது அஃபென்ஸ்’’ என்றேன் நான். 

‘’பிரபு ! நீங்க எப்பவுமே இப்படி தான். போற வழியில போலீஸ் பீட் எதுவும் கிடையாது. நாம பத்து நிமிஷத்தில் அவர் வீட்டுக்குப் போயிடலாம்’’

கட்டாயமாக என்னை வண்டியில் ஏற்றி புறப்பட்டனர். 

செல்லும் வழியில் ஒரு கல்யாண மண்டபத்துக்கு எதிரில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் வெள்ளைச் சீருடை அணிந்த போக்குவரத்துக் காவலர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். எங்களை அவர்கள் பார்த்து விட்டனர். நாங்கள் வண்டியை ஓரங்கட்டினோம். வண்டி என்னுடையது. அதனால் வண்டியின் ஆர். சி. புத்தக நகலையும் காப்பீட்டு நகலையும் நான் கொண்டு போய் காண்பித்தேன். வண்டியை ஓட்டிய நண்பர் அவருடைய ஓட்டுனர் உரிமத்தின் நகலைக் காண்பித்தார். மீண்டும் அவற்றை வண்டியில் கொண்டு வந்து வைத்துக் கொண்டோம். 

காவலர் எங்களைப் பார்த்து ‘’டூ வீலர்ல எத்தனை பேர் வருவீங்க’’ என்றார். 

‘’சாரி சார். நாங்க செஞ்சது தப்புதான்’’ என்றேன். 

காவல் ஆய்வாளர் ‘’ஏட்டையா ! என்ன விஷயம் ‘’ என்றார். அவரிடம் செல்லச் சொன்னார் காவலர். 

நான் அவரிடமும் சென்று ‘’சாரி சார்’’ என்றேன். 

‘’ஏட்டையா ஆர் . சி , லைசன்ஸ் செக் பண்ணீங்களா’’

‘’இருக்கு சார் ‘’ என்றார் தலைமைக் காவலர். 

‘’சொல்லுங்க’’ என்றார் எங்களைப் பார்த்து. 

மீண்டும் அவரிடம் ‘’சாரி சார்! நாங்க செஞ்சது தப்பு தான்’’ என்றேன். 

‘’நீங்க எந்த தப்பும் செய்யல தம்பி. எம்.ஜி. ஆர் முதலமைச்சரா இருக்கறதுக்கு முன்னாடி சைக்கிள்ல ரெண்டு  பேர் போனா தப்பு. சைக்கிள்ல டைனமோ லைட் இல்லாம போனா தப்புன்னு ரூல்ஸ். அவர் முதல்வரா இருந்த பீரியட்ல அந்த விஷயத்துக்கு அனுமதி கொடுத்திட்டாங்க. அதனால அது தப்பு இல்லாம ஆயிடுச்சு. இப்ப டூ வீலர்ல மூணு பேரு போகக்கூடாதுன்னு ரூல்ஸ் . நீங்க அந்த ரூல்ஸ் ஐ ஒபே பண்ணல. அவ்வளவு தான். நீங்க செஞ்சிருக்கறது விதி மீறல்’’ என்றார். 

நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். மற்ற இரண்டு பேரும் எதுவும் பேசாமல் தள்ளி இருப்பதைக் கண்டு அவர்களை விசாரித்தார். 

‘’சார் பிரபு மூணு பேர் போக வேண்டாம்னு தான் சார் சொன்னார். நாங்க தான் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு வந்தோம். ‘’ 

‘’அப்ப அவர் ஃபைன் கட்ட வேண்டாம். நீங்க கட்டுங்க’’ என்றார். 

‘’பூம்புகார் போகலாம்னு கிளம்பினோம் சார்’’ என நடந்ததைக் கூறினர். காவல் ஆய்வாளர் எங்களுக்கு அபராதம் ஏதும் விதிக்காமல் அனுப்பி வைத்து விட்டார்.