Saturday 8 January 2022

காய் கறி

எனது நண்பர் ஒருவர் ஊருக்கு அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். ஐ டி கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கு பூர்வீக சொத்தாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தேக்கு மரம் பயிரிட ஆர்வமாயிருக்கிறார். இன்று காலை அவரைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவரது சகோதரரும் தேக்கு பயிரிடுவது குறித்து தங்கள் சந்தேகங்களைக் கேட்டனர். முக்கியமான சந்தேகம் பயிரிட அரசு அனுமதி வேண்டுமா என்பதும் மரத்தினை விற்பனை செய்ய அரசு அனுமதி வேண்டுமா என்பதும். இந்த சந்தேகம் எல்லா விவசாயிகளின் மனத்திலும் ஆழமாக உள்ளது. சந்தேகம் அதன் விளைவாக ஒரு அச்சம். அவர்களுடைய சந்தேகம் அடிப்படை ஆதாரம் அற்றது என விளக்கினேன். அவர்களுடைய ஊரிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஒரு விவசாயியை நான் ஊக்கப்படுத்தி 50 தேக்கு மரங்கள் நடச் சொல்லி இருக்கிறேன்; அவருடைய களத்தைச் சென்று பார்ப்போம் என்று அழைத்துச் சென்றேன்.   செப்டம்பர் மாதம் தேக்கங்கன்றுகள் நடப்பட்டன. இப்போது ஆறடி உயரம் வளர்ந்துள்ளன. விவசாயி ஆர்வத்துடன் தேக்கின் வளர்ச்சியைக் காட்டினார். ‘’பஞ்சகவ்யா’’ கொடுத்தால் வளர்ச்சி இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் அடுத்த முறை வரும் போது பஞ்சகவ்யா கொண்டு வருகிறேன் என்றும் சொன்னேன். புறப்படத் தயாரான போது அவர் வயலில் விளைந்த காய்கறிகளை ஒரு சாக்கு மூட்டையில் கொண்டு வந்து கொடுத்தார். இந்த மூட்டையை நான் வீட்டுக்கு எடுத்துச் சென்றால் காய்கறி வியாபாரம் செய்யப் போகிறாயா என்று கேட்பார்கள். அண்டை வீட்டுக் காரர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த காய்கறிகளைப் பிரித்துக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் விவசாயியின் வீட்டிலிருந்து புறப்பட்டேன். அவருடைய வீடு, களம், வயல் ஆகியவை அனைத்தும் அருகருகே அமைந்தவை. வீட்டின் தோட்டத்திலேயே வயலும் களமும் அமைந்திருப்பதான அமைப்பு.  ஐ டி நண்பருக்கு விவசாயியின் களத்தைப் பார்த்து அதில் தேக்கு வளர்ந்திருப்பதைக் கண்டதும் அவருடைய ஐயங்கள் நீங்கி அவருக்கு ஒரு தெளிவு பிறந்தது.


 

நானும் நண்பரும் ஆளுக்கொரு வாகனத்தில் வந்தோம். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் கடைவீதியில் வணிகம் செய்கிறார். நாங்கள் அடுத்து அவரைச் சந்திக்க செல்வதாய் திட்டமிட்டிருந்தோம். எனது வாகனம் ஐந்து நிமிடம் முன்னதாக வந்து விட்டது. நண்பரின் ஒரு கடையை  ஒட்டி ஒரு அம்மாள் மீன் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர் எப்போதும் அங்கே மீன் விற்பவர். எனக்கு அவரை முன்னரே தெரியும். அவருடன் இன்னொரு பெண்மணியும் இருந்தார். என்னைப் பார்த்ததும் ‘’சார் ! நாளைக்கு வியாபாரம் செய்ய முடியாது சார். மீன் விக்காம இருக்கு. இந்த மீன் அத்தனையையும் ஐந்நூறு ரூபாய்க்கு தரேன். வாங்கிட்டுப் போங்க சார்’’ என்றார்கள். 

‘’அம்மா ! நாங்க வெஜிட்டேரியன்.’’ 

‘’அப்படீன்னா?’’

‘’அப்படீன்னா எங்க வீட்டுல எல்லாரும் சைவம்’’

அந்த அம்மாள் நம்பிக்கை இழந்தார். 

இருப்பினும் அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று தோன்றியது. 

‘’அம்மா கடைக்காரர்ட்ட கேட்டீங்களா. அவரு இப்பதான் மதியம் சாப்பிட வீட்டுக்கு போவாரு? ராத்திரி கொழம்பு வச்சா கூட நாளைக்கு முழு நாளும் சாப்பிடலாம்.’’ கடைக்காரரான எனது நண்பரை உத்தேசித்து சொன்னேன். 

‘’என் கிட்ட இறால் தான் சார் இருக்கு. அவரு வஞ்சிரம் மீன் தான் வாங்குவாரு’’




நேரம் அப்போதே மதியம் இரண்டு மணி. 

ஐந்து நிமிடம் தாமதமாக வந்த ஐ டி நண்பர் நான் பேரம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

‘’அண்ணன் ! என்ன அண்ணன் ! மீன் வாங்க போறீங்களா. நீங்க வெஜிட்டேரியன் ஆச்சே?’’

’’இல்ல நாளைக்கு எந்த கடையும் இருக்காதுல்ல. இன்னைக்கு சேல்ஸ் சரியா இல்லையாம். இருக்கறத கொடுத்துட்டு ஊருக்கு கிளம்பறன்னு சொல்றாங்க. ‘’

‘’உங்க கிட்ட சொன்னா நடக்கும்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு’’

‘’ஒரு உதவின்னு கேக்கறாங்க. நாம டிரை செய்வோம்’’

‘’இதுல நாம எப்படின்ணன் உதவ முடியும்’’. ஐ டி நண்பரும் வெஜிட்டேரியன். 

‘’வெயிட் பண்ணுங்க. என்ன செய்ய முடியும்னு யோசிப்போம்.’’

எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். அவர் இரவுலாவி. அதாவது அவர் பகலில் உறக்கத்தில் இருப்பார். மாலை 5 மணியிலிருந்து காலை 5 மணி வரை முழு இரவும் விழித்திருப்பார். அவரைப் பகலில் பிடிப்பது என்பது அனேகமாக சாத்தியமில்லை. பகலில் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தூங்கிக் கொண்டிருப்பார். இருப்பினும் இன்று அவரது ஃபோன் ரிங் ஆனது. ஃபோனை எடுத்து விட்டார். 

‘’என்ன ஆச்சர்யமா இருக்கு. பகல்ல ஃபோன் எடுத்துட்டீங்க. ‘’

‘’ரிலேடிவ் ஒருத்தர சோழன் எக்ஸ்பிரஸ்ல டிராப் பண்ண வேண்டியதாயிடுச்சு’’

‘’அதாவது இங்க கடைத்தெருவுல நம்ம ஃபிரண்டு கடை இருக்குல்ல’’

‘’ஆமாம்’’

‘’அவரு கடை வாசல்ல ஒரு அம்மா மீன் விக்கறாங்க. நாளைக்கு ஃபுல் டே ஆஃப் ங்கறதால இன்னைக்கு மீன் நிறைய விக்காம இருக்குன்னு சொல்றாங்க. உங்களுக்கு மீன் தேவைப்படுமா?’’

‘’என்ன மீன் இருக்கு?’’

‘’இறால்’’

‘’ஆஞ்சு கொடுப்பாங்களா?’’

‘’கொடுப்பாங்க’’

‘’எவ்வளவு சொல்றாங்க?’’

‘’500 ரூபாய்’’

‘’சரி ஆஞ்சு வைக்க சொல்லுங்க. 10 நிமிஷத்துல நான் வந்துடறன்’’

நானும் ஐ டி நண்பரும் காத்திருந்தோம். நண்பர் வந்து மீனைப் பார்த்தார். அவருக்குத் திருப்தி. ஐந்நூறைக் கொடுத்து மீன் வாங்கிக் கொண்டார். 

இதற்கு முன் இவர்களிடம் மீன் வாங்கியிருக்கிறீர்களா என்று கேட்டேன். நண்பர் இல்லை என்றார். அந்த பெண்மணிகள் இருவரும் நாங்க இங்க தான் சார் எப்பவும் மீன் விப்போம். கடல் மீனு சார். ரொம்ப நல்லா இருக்கும். இன்னைக்கு வாங்கினதை கொழம்பு வச்சு சாப்டாலே உங்களுக்கே தெரியும் என்றார்கள். நண்பர் சரி என்றார். 

மீன் வியாபாரிகள் இருவரும் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினர். நாங்களும் அவரவர் வீட்டுக்குப் புறப்பட்டோம்.