Sunday, 9 January 2022

மூன்று அழைப்புகள்


சமீபத்தில் எழுதிய ‘’விளைதல்’’ பதிவை வாசித்து விட்டு மூன்று நண்பர்கள் அழைத்தார்கள். மூவருமே அவர்களுடைய சொந்த கிராமத்தில் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு நான் சில ஆலோசனைகளை வழங்கினேன்.  

1. நமது சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. அதற்கு காரணம் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் பிழைப்புக்கான படிப்பாகவே எண்ணுகிறது நம் தமிழ்ச் சமூகம். படிப்பு என்பதை போட்டி என்றே எண்ணுகிறார்கள் தமிழ் மக்கள். 

2. படித்த சிந்திக்கும் சமூகம் என்பது மெல்ல உருவாகி வர வேண்டியிருக்கிறது. 

3. நூல்கள் மீது ஆர்வம் கொண்ட சமூகமே நூலகங்களுடன் உணர்வுபூர்வமான பிணைப்பு கொள்ளும். நம் சமூகத்தில் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. 

4. நூலகத்துக்கு மாற்றாக ‘’லெண்டிங் நூலகம்’’ என்ற அமைப்பு கிராமங்களுக்கு அணுக்கமாக இருக்கும். 

5. ஒரு கிராமத்தில் 400 வீடுகள் உள்ளன எனக் கொள்வோம். நூலகம் அமைக்க விரும்பும் தன்னார்வலர் 1200 நூல்களை கிராமத்தில் உள்ள வீட்டில் ஒரு சிறு அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நூல்களின் பெயர்ப் பட்டியலை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அளித்து விட வேண்டும். 

6. இராமாயணம், மகாபாரதம், பாகவதக் கதைகள், புத்தர் நூல்கள், புத்தர் குறித்த ஜப்பானிய மாங்கா காமிக்ஸ்கள்,  ஆழ்வார்கள் கதை, நாயன்மார்கள் கதை, நம் நாட்டின் புகழ் பெற்ற மக்கள் நல அரசர்கள், சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறு, விஜயநகரப் பேரரசின் வரலாறு, மராத்தியர்களின் வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு, உலகப் புகழ் பெற்ற தலைவர்களின் தன்வரலாற்று நூல்கள், எளிய அறிவியல் நூல்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், தொழில் முனைவோரின் வரலாறு, சுற்றுச் சூழலியல் தொடர்பான நூல்கள், பறவையியல் கானியல் தொடர்பான நூல்கள், சுவாமி சித்பவானந்தரின் நூல்கள், சுவாமி விவேகானந்தரின் நூல்கள், ராஜாஜியின் நூல்கள், நவீன தமிழ் இலக்கிய நூல்கள், பொருளாதாரம் தொடர்பாக தமிழில் எழுதப்பட்ட நூல்கள், உலக இலக்கிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் என அந்த நூல்கள் அமையலாம். இது ஒரு உத்தேசப் பட்டியல். விரிவான பட்டியலை இதிலிருந்து உருவாக்கிக் கொள்ள முடியும். 

7. பத்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதாகும் இரண்டு சிறுவர்கள் கொண்ட இணையை இரண்டு தெருக்களுக்கு ஒரு இணை என நியமிக்க வேண்டும். ஊரில் மொத்தம் 8 தெருக்கள் இருக்கும். இரண்டு தெருக்களுக்கு ஒரு இணை என்றால் மொத்தம் 8 சிறுவர்கள். இந்த சிறுவர்கள் வாரத்தில் ஒருநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்த நூல்களை கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் சேர்த்து விடுவர். ஒரு குறிப்பேட்டில் யாரிடம் எந்த நூல்கள் உள்ளன என்பதை குறித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வாரமும் ஒருவர் வாசித்த நூலை அவர்களிடம் பெற்றுக் கொண்டு வாசிக்காத நூலை அவர்களுக்கு இந்த இணை அளிக்கும். 

8. ஆயிரத்து இருநூறு நூல்களும் வீட்டுக்கு 3 நூல்கள் என கிராமத்துக்குள் புழங்கிக் கொண்டிருக்கும். கிராமத்தைத் தாண்டி நூல்கள் வேறு எங்கும் செல்லாது. கிராமத்தின் எல்லா வீடுகளும் இதில் பங்கேற்பதால் அனைவருக்கும் இந்த முறை மீது ஒரு பிணைப்பு இருக்கும். 

9. நூல்களை வினியோகிக்கும் எட்டு சிறுவர்களுக்குத் தனியாக ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ அவர்கள் செய்யும் பணியின் முக்கியத்துவம் குறித்தும் அதனை நேர்த்தியாகச் செய்யும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி தந்து  விடலாம். 

10. முதல் கட்டமாக அந்த எட்டு சிறுவர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 10 புத்தகங்கள் என அளித்து அதனை வாசிக்கச் செய்து நூல் வாசிப்பில் பயிற்சி தரலாம். அவர்களின் நூல்களின் தூதுவர்களாக ஊர் முழுதும் செல்வார்கள். 

11. ஒரு புரிதலுக்காக ‘’லெண்டிங் லைப்ரரி’’ எனக் கூறுகிறோமே தவிர மக்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. 

12. நூல்களை நோக்கி ஆர்வமாக முன்னகரும் சமூகமாக தமிழ்ச் சமூகம் இன்று இல்லை என்பதால் நூல்களை மக்களிடம் கொண்டு செல்லும் - மக்கள் கைகளுக்கு கொண்டு சேர்க்கும் முறைகள் இப்போது தேவைப்படுகின்றன. 

13. நூலகம் அமைக்க விரும்பும் நண்பர்கள் நூலகம் அமைக்க வேண்டிய இடத்தின் கிரய செலவு, கட்டுமானச் செலவு, நூல் அலமாரிகள் செலவு, வாடகை என எந்த செலவும் செய்யத் தேவையில்லை. 1200 நூல்களுக்கான செலவை மட்டும் செய்தால் போதுமானது. 

14. ஒரு கிராமமே இதில் பங்கேற்பதால் நூல்கள் கிராமத்தின் பேசுபொருளாகும். 

15. ஒரு குறிப்பிட்ட தினத்தில் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை கிராம மக்கள் ஒவ்வொருவரும் வீட்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து நூல் வாசிப்பது என்பதை ஒரு வாசிப்புத் திருவிழா போல அமைக்கலாம். 

16. இது போல பல விஷயங்களை இவ்வாறு திட்டமிட முடியும்.