Sunday, 13 February 2022

விளைதல் ( மறு பிரசுரம்)

சில மாதங்களுக்கு முன்னால், ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட சலூன்களுக்கு எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதன் தாக்கம் சமூகத்தில் எவ்வாறு உள்ளது என ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் வினவியிருந்தார். அவருக்கு அளித்த பதில் :




அன்புள்ள நண்பருக்கு,

நாம் ஒரு சாலையில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்கிறோம் ; அப்போது ஒரு ஆலமரத்தைப் பார்க்கிறோம். சில நிமிடங்கள் வண்டியை நிறுத்தி விட்டு வண்டி என்ஜினுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மரத்தின் வேர்பரப்பில் அமர்கிறோம். மரத்தில் சில வினாடிகள் தலைசாய்த்துக் கொள்கிறோம். தருநிழலின் குளுமை நம்மை அமைதி கொள்ளச் செய்கிறது. அந்த விருட்சத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் காகங்களும் கரிச்சான்களும் சிட்டுக்குருவிகளும் நம் கண்ணில் படுகின்றன. நமது சலிப்பும் சோர்வும் நீங்கி நமது பயணத்தைத் தொடர்கிறோம். அந்த விருட்சத்தை அங்கே நட்டவர் யார் என்பதை நாம் அறிவோமா? அதனைப் பராமரித்தவர்கள் யார் என்று அறிவோமா? அந்த மரத்தை நட்டவர் நம்மை அறிவாரா? மரத்தின் நிழல் பலருக்கும் பயன் தரக்கூடியது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அந்த உணர்வின் வெளிப்பாடாக அவர் செயலாற்றியிருக்கிறார். சில வாரங்கள் - சில மாதங்கள் அவர் கவனம் கொடுத்த ஒரு செயல் எத்தனை ஆண்டுகளுக்கு நல்விளைவுகளை உருவாக்கியிருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். மனிதர்களுக்கு மட்டுமா எத்தனை பிராணிகள் எத்தனை பட்சிகள் எத்தனை பூச்சிகள் அந்த ம்ரத்தால் பயன் அடைந்திருக்கும். வாழ்க்கை என்பது மிகப் பெரியது. வாழ்வினை இயக்கும் விசைகளை நம்மால் முற்றறிந்திட இயலாது. இருப்பினும் நமக்குச் சாத்தியமான செயல்களை நாம் ஆர்வத்துடன் உற்சாகத்துடன் மேற்கொள்ள வேண்டும். அதன் விளைவுகள் நம்மால் எண்ணிப் பார்க்க முடியாததாகக் கூட இருக்கக் கூடும்.  

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனது ‘’மனதின் குரல்’’ நிகழ்ச்சியில் தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த திரு. பொன். மாரியப்பன் அவர்கள் குறித்து பேசியிருந்தார். மாரியப்பன் அவர்கள் தனது சலூனில் ஒரு நூலகம் அமைத்திருப்பதையும் அந்த நூல்களை வாசித்து வாசித்ததன் சாரத்தை ஒரு பக்க அளவில் எழுதுபவர்களுக்கு முடி திருத்தும் கட்டணத்தில் சலுகை வழங்கி வருகிறார் என்ற தகவலையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார். 

இந்த விஷயம் குறித்து யோசித்த போது இதைப் போல மக்கள் பயன் பெறும் செயல் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களிலும் வாசிக்க புத்தகங்கள் இருக்கின்றன என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சலூன்கள் உள்ளன. அவை அனைத்துக்கும் தலா 8 நூல்கள் வழங்கப்பட்டன. 

தமிழ் அறிஞரும் துறவியுமான சுவாமி சித்பவானந்தரின் நூல்களை சலூன்களுக்கு அளிப்பது என்று முடிவு செய்தேன். சுவாமி சித்பவானந்தர் பேரறிஞர். தமிழ், சமஸ்கிருதம், வங்காளி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றவர். தமிழில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அவருடைய நூல்களிலிருந்து ஆறு நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். 1. ஸ்ரீராமகிருஷ்ண சரிதம் 2. ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம் 3. ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம் 4. சுவாமி விவேகானந்தர் 5. சகோதரி நிவேதிதை 6. தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர் ஆகிய ஆறு நூல்களையும் ராஜாஜி தொகுத்த பகவான் ராமகிருஷ்ணரின் ஞானமொழி மற்றும் சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களின் சிறு தொகுப்பான ‘’வீர இளைஞருக்கு’’ என்ற இரண்டு நூல்களையும் சேர்த்து எட்டு நூல்களை வழங்குவதாக முடிவு செய்தேன். இந்த நூல் தேர்வில் ஒரு விஷயத்தை பின்னர் அறிந்தேன். ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம், ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம் , ஸ்ரீவிவேகானந்தர் ஜீவிதம் ஆகிய மூன்று நூல்களும் சுவாமி சித்பவானந்தர் எழுதிய ‘’முதல் மூன்று நூல்கள்’’ என்ற சிறப்பைப் பெற்றவை. 

இந்த நூல்களுடன் சலூன்களுக்குச் சென்று சலூன்காரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து உரையாடி நூல்களை வழங்கி விட்டு வந்த போது இந்த விஷயத்தை சலூன்காரர்கள் ஆர்வத்துடன் வரவேற்கின்றனர் என்பதை உணர்ந்தேன்.  60 கி.மீ நீளமும் 50 கி.மீ அகலமும் கொண்ட 3000 சதுர கி.மீ பரப்பு கொண்ட மாவட்டம். 300க்கும் மேற்பட்ட சலூன்கள். பத்து நாட்களை முழுமையாக ஒதுக்கி ஒரு நாளைக்கு 30 சலூன் என நூல்களை வழங்கினேன். ஒரு சலூனிற்கு சராசரியாக பத்து நிமிடம் ஆகும். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் ; பொன். மாரியப்பன் குறித்து சொல்ல வேண்டும். மாவட்டம் முழுதும் மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து சொல்ல வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் கேட்க வேண்டும். ஒரு சலூனுக்கு 10 - 15 நிமிடம் ஆகி விடும். பலர் தேனீர் அருந்தச் சொல்வார்கள். அவர்கள் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். கடையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இதனைக் குறித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள். அலைபேசி எண் கேட்பார்கள். 

நூல்களை வழங்கி விட்டு வந்த சில நாட்களில் சலூன்களுக்கு வந்த வாடிக்கயாளர்கள் பலர் நூல்களைப் பார்த்து விட்டு சலூன்காரர்களிடம் எனது அலைபேசி எண்ணை வாங்கி எனக்குப் பேசி இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். சிலர் இந்த நூல்கள் எங்கே கிடைக்கும் விலைக்கு வாங்க விரும்புகிறோம் என்று கூறினர். சிலர் என்னைச் சந்திக்க விரும்பினர். அவர்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று நானே சந்தித்தேன்.  

சலூன் நூலகத்தின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்ற உங்கள் வினாவிற்குப் பின் அதனை அறிய முடிவு செய்தேன். ஒவ்வொரு சலூனையும் நேரில் சந்திக்க வேண்டும் என்றால் முழுமையாக ஒரு வாரம் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஆகும் என்பதால் எல்லா சலூன்களுக்கும் ஃபோன் செய்து பேசுவது என்று முடிவு செய்தேன். எல்லா சலூனுக்கும் ஃபோன் செய்தேன். எங்கள் உரையாடலின் முக்கியக் காரணிகளைக் கீழே பட்டியல் இடுகிறேன். 

1. எனது அழைப்பு எல்லா சலூன்காரர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. 

2. சலூனுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தினமும் நூல்களை எடுத்து வாசிப்பதாகக் கூறினர். இந்த நூல்களைக் குறித்து தினமும் ஒரு உரையாடல் நிகழ்கிறது என்று கூறினர். 

3. சில வாடிக்கயாளர்கள் நூலை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்து விட்டு மீண்டும் சலூனில் கொண்டு வந்து கொடுத்து விடுகின்றனர் என்று சொன்னார்கள். 

4. ஒவ்வொரு அழைப்புக்கும் அவர்கள் கூறும் பதிலிலிருந்து வாடிக்கையாளர் வாசிப்பு விருப்பத்தைக் கணித்து ஐந்துக்கு இத்தனை என மதிப்பெண் அளித்தேன். 90 சதவீதம் ஐந்துக்கு 4.5 மதிப்பெண் பெற்றனர். 5 சதவீதம் ஐந்துக்கு 3.5 மதிப்பெண். ஐந்துக்கும் குறைவான சதவீதமே ஐந்துக்கு 2.5 மதிப்பெண். 

இந்த வரவேற்பு உண்மையிலேயே எனக்கு திருப்தி அளித்தது.  

இன்று நம் தமிழ்ச் சூழலில் பள்ளியில் தமிழ் மொழிக்கோ நூல்களுக்கோ எந்த முக்கியத்துவமும் இல்லை. மொழி மீதான அக்கறையின்மையை நம் பள்ளிக்கல்வி உருவாக்கி விட்டது. இப்படிப்பட்ட மூன்று தலைமுறை இங்கே உருவாகி விட்டது. பள்ளி கல்லூரி பாடப்புத்தகங்கள் தாண்டி 100க்கு 99 பேர் வீட்டில் எந்த புத்தகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் சலூன்களில் வாசிக்க புத்தகம் இருப்பது என்பது நிச்சயமாக ஒரு நல்நிகழ்வே. குழந்தை உளவியலாளர்கள் எப்போதும் அறிவுறுத்தும் ஒரு விஷயம் உண்டு. முதலில் குழந்தைகள் மொழியறியும் முன்னரே கூட புத்தகங்களைத் தர வேண்டும். அவர்கள் அதனைக் கைகளால் பிடித்து கைகளில் வைத்துக் கொண்டு புத்தகங்களுடன் ஒரு மன அணுக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு அணுக்கமே அவர்களை வாசிப்புப் பழக்கத்துக்கு இட்டுச் செல்லும் என்று. மயிலாடுதுறை மாவட்டத்தின் 300க்கும் மேற்பட்ட சலூன்களில் தினமும் பலருடைய கைகள் புத்தகங்களை எடுத்துப் புரட்டுகின்றன என்பதே எவ்வளவு நல்ல விஷயம். குறியீட்டு அளவிலும் இது முக்கியமான செயல்பாடு. 

சுவாமி விவேகானந்தரின் சொற்கள் தனிமனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் ஊக்கம் அளிப்பவை. சோம்பலை நீக்கி செயலாற்றுவதற்கான உத்வேகத்தை அளிப்பவை. நமது மரபை நமது பண்பாட்டை எடுத்துச் சொல்ப்வை. அவருடைய சொற்களால் உத்வேகம் பெற்றவர்கள் பலர். அரவிந்தர், மகாத்மா காந்தி, பாரதியார், ராஜாஜி, அவினாசிலிங்கம் செட்டியார் .... என சொல்லிக் கொண்டே போகலாம். 

தமிழ்நாடு விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட மாநிலம். தானியத்தை விதைக்க வேண்டும். முறையாக நீர் பாய்ச்ச வேண்டும். களை எடுக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியதைச் சரியாக செய்தோம் என்றால் விளைய வேண்டியது சிறப்பாக விளையும். மண்ணுடன் தொடர்புள்ளவன் எதையுமே நம்பிக்கையுடனே காண்பான். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சலூன் நூலகங்கள் சிறப்பான துவக்கத்தை உருவாக்கியிருப்பதில் என்னுடைய பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவே. சலூன்களுக்கு நூல்களை நன்கொடையாக அளித்த நண்பர்களும் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அக்கறையுடன் பெருமகிழ்வுடன் மேற்கொள்ளும் சலூன் கடைக்காரர்களும் சலூன்களில் நூல்களைப் பற்றி உரையாடும் வாசிக்கும் பொதுமக்களுமே இதற்கு முழுமுதற்காரணம். அவர்களுக்கு இந்த தருணத்தில் எனது நன்றியை உரித்தாக்குகின்றேன். 

அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை