Friday 11 March 2022

வித்துவான் தியாகராச செட்டியார்

 


நூல் : வித்துவான் தியாகராச செட்டியார் ஆசிரியர் : உ.வே.சாமிநாத ஐயர் பதிப்பகம் : டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை விலை : ரூ. 100

தமிழர் வரலாற்றில் உ.வே.சா அவர்களின் இடம் தனித்துவமானது. அவருடைய தமிழ்ப் பணிக்கு இணையாகவே அவரது ஆளுமையும் அவதானங்களும் தமிழ் வரலாற்றில் முக்கியமானவை. எந்த மொழியிலும் உரைநடை என்பது அந்த மொழியறிந்த பெருந்தளத்தை நோக்கிப் பேசுவது. அந்த வகையில் தமிழ் உரைநடை உருவாகி எழுந்த காலகட்டத்தில் அந்த எழுச்சிக்கான தனது பங்களிப்பை ஆற்றியவர்களில் முக்கியமான ஒருவராக உ.வே. சா இருந்துள்ளார். 

உ.வே.சா தன் வாழ்நாளில் முக்கியமானவர்களாக மூன்று பேரைக் கருதுகிறார். தனது தந்தை, தனது குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மற்றும் வித்துவான் தியாகராச செட்டியார். தனது சென்னை அகத்துக்கு வித்துவான் தியாகராச செட்டியாரின் நினைவாக ‘’தியாகராச விலாசம்’’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் என்பதிலிருந்தே அவருக்கு தியாகராசர் மேல் இருந்த அன்பு புலப்படும். 

வித்துவான் தியாகராச செட்டியார் லால்குடிக்கு அருகில் உள்ள பூவாளூரைச் சேர்ந்தவர். பூவாளூர் என்பது பூவாளியூர் என்பதன் திரிபு. வாளி என்ற சொல்லுக்கு அம்பு என்று பொருள். பூவாளி என்றால் மலர் அம்பு.  மன்மதன் சிவபெருமானை வணங்கிய தலம் ஆதலால் அந்த ஊர் பூவாளியூர் எனப்பட்டது என ஐதீகம். சிவனின் பெயர் திருமூலநாதன். காவிரிப்பூம்பட்டினத்தை கடல்கோள் கொண்ட போது அங்கிருந்த வணிகர்கள் நாடெங்கும் பரவுகிறார்கள். அந்த குழுக்களில் ஒன்று பூவாளியூரில் தங்கலாயிற்று. அவர்கள் பூவலூர் செட்டியார்கள் என பின்னாட்களில் அழைக்கப்படலாயினர். 

தியாகராஜருக்கு சிறு வயதிலிருந்தே தமிழில் ஆர்வம் இருக்கிறது. அவருடைய தந்தை சிறந்த வணிகர் . தனது சொத்தான பெருத்த அளவிலான விவசாய நிலத்தை நல்ல முறையில் விவசாயம் பார்த்து நல்ல பொருள் ஈட்டி வந்தார். தனது தந்தையிடம் தியாகராஜர் தமிழ் படிக்க தனக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார். முதலில் சம்மதிக்காத தந்தை பின்னர் திருச்சியில் தன் சகோதரர் வீட்டில் தங்கி தியாகராஜரை தமிழ் படிக்கச் சொல்கிறார். தமிழ் பயிலச் செல்லும் போது ‘’தமிழுடன் தம்பி கடையில் இருந்து வியாபாரத்தையும் கற்றுக் கொள்’’ என்று அறிவுறுத்தி அனுப்புகிறார். 

இந்த சரிதத்தை வாசித்த போது உ.வே.சா வின் ‘’என் சரித்திரமும்’’ ‘’மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரமும்’’ என் நினைவில் வந்தன. இந்த இரண்டு நூல்களிலும் தமிழ் அறிஞர்கள் படும் பொருள் கஷ்டத்தின் சித்திரம் காணக் கிடைக்கும். தியாகராஜருக்கு நிலபுலன்கள் இருந்ததால் பொருள் கஷ்டம் இல்லாமல் இருக்கிறார். அவரே உ.வே.சா வை கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்த்து விடுகிறார். உ.வே.சா வாழ்வில் அது முக்கியமான நகர்வு. முக்கியமான முடிவு. 

ஒரு சிகிச்சைக்காக செட்டியார் சென்னை செல்ல நேர்கிறது. அப்போது சென்னையில் பேசப்படும் தமிழும் மொழி வழக்கும் அவருக்கு பேராச்சர்யம் தருவதை பலரிடம் சொல்கிறார். 

திருச்சி, கும்பகோணம், சென்னை ஆகிய ஊர்கள் குறித்த காட்சிகள் இன்று வாசிக்கும் போது வியப்பளிக்கின்றன.