அன்பின் பிரபு,
காகம் வாசித்தேன்.
ஒரு நிமிஷம் திக்பிரமை நிலைதான்.
அந்த சமையலுக்கு முத்தாய்ப்பா அதே குரல், திவாகர் எப்படி உணர்ந்திருப்பார்... இதெல்லாத்துக்கும் மேல அம்மா காகத்துக்கு வெச்ச சாப்பாடு.
20 வருடங்களுக்கு முன்னதாக (அதற்கும் மேலாகவும் இருக்கலாம்) விகடனில் 'காக்கை மனிதர்' என்று ஒரு கதை. ஒரு வயதான தம்பதிகள், தங்கள் மகனால் புறக்கணிக்கப்பட்டு ரொம்பவும் சிரமதசையில் வாழ்ந்து கொண்டிருப்பர். ஆனாலும் தினமும் வரும் ஒரு காக்கை ஜோடிக்கு சாதம் வைப்பர். (அந்தக் காகத்திற்கு 'மணி' எனப் பெயர் வைத்து காலில் மணியெல்லாம் கட்டி வைத்திருப்பர்). ஒரு நாள் அந்த அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்து இறந்து விடுவார், அதிர்ச்சியில் அம்மாவும் இறந்துவிடுவார். அக்கம்பக்கத்தவர்கள் சிலபேர் அவர்களை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்கையில் அந்த காகங்கள் மெல்ல மெல்லப் பெருகி ஒரு கட்டத்தில் அந்த பிண ஊர்வலத்தில் சுற்றிலும் காக்கைகளாக இருக்கும் அதிசயத்தைக் காண அந்த தெருவே கூடி விடும். முன்னோர்களே கூடி அவர்களுக்கு காரியம் செய்ததாக ஒரு குரல் ஒலித்து (ஆசிரியர் குரல்) எல்லார் மனதும் நிறைந்திருக்கும்.
ஏனோ உங்கள் கதையை வாசித்த பின் இதுவும் நினைவில் சேர்ந்து கொண்டது.
பிரபு, கதைக்கு ரொம்ப நன்றி.
அன்புடன்
வெங்கட்ரமணன்