Saturday, 19 March 2022

''காவிரி போற்றுதும்’’ - மீண்டும் செயல் களத்தில்

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு என்ற பேரூராட்சியின் ஒரு பகுதியாக இலுப்பைப்பட்டு என்ற சிறு கிராமம் உள்ளது. வட காவேரியான கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் அமைந்திருக்கும் கிராமம். அம்மை அமுதகரவல்லியாகவும் அப்பன் நீலகண்டனாகவும் உள்ள சிவத்தலம். சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலம். பஞ்ச பாண்டவர்கள் இங்கே வந்து சிவனை வழிபட்டதாக ஐதீகம். ஆலயத்தினுள் விருட்சி, நந்தியாவட்டை ஆகிய பூசனைக்கு உகந்த மலர்களால் ஆன பூத்துக் குலுங்கும் ஓர் எழிலுறு நந்தவனம் உள்ளது. 

சில வாரங்களுக்கு முன், எனது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு யோசனையை முன்வைத்தார். இந்திய மரபில், ஒவ்வொருவருக்கும் ஜென்ம நட்சத்திரம் உண்டு. அந்த நட்சத்திரத்துக்குரிய மரக்கன்றுகள் என குறிப்பிட்ட சில மரக்கன்றுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

வானத்தை சிவ சொரூபமாகவும் புவியை சக்தி சொரூபமாகவும் உருவகப்படுத்திக் கொள்கிறது நம் மரபு. உயிர்க்குலங்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையும் வானுக்கும் மண்ணுக்குமான அன்பாலும் பிணைப்பாலுமே நிகழ்கிறது என்பது இந்தியர்களின் புரிதல். 

இந்திய வானியல் அடையாளப்படுத்தும் விண்மீன் திரள்கள் 27. அவற்றுக்கு உரியதென வகுக்கப்பட்டுள்ள மரங்களின் எண்ணிக்கையும் அதுவே. அந்த மரங்கள் அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. நமது பாரம்பர்ய மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படக் கூடியவை. 

ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரத்துக்குரிய மரக்கன்றுகளை அவரவர் நடுவதும் அவற்றுக்கு நீர் வார்ப்பதும் அவற்றின் நிழலில் சில நிமிடங்கள் இருப்பதும் பலவிதமான நன்மைகளை அளிக்க வல்லவை என்பது நம் முன்னோரின் நம்பிக்கை. ஒரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு இந்த மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகளை அளிப்பது ஓர் நற்செயலாக இருக்கும் என நண்பர் எண்ணினார். அதனை என்னிடம் தெரிவித்தார். அது மிகவும் பயனுள்ள யோசனை என்று எனக்குப் பட்டது. ஏதேனும் ஒரு கிராமத்தில் இதனை செயல்படுத்திப் பார்க்கலாம் என எண்ணினேன். 

ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இலுப்பைப்பட்டு என்ற கிராமத்தினைத் தேர்ந்தெடுத்தேன். ஊரின் பெயரில் இலுப்பை மரம் இருந்தது ஒரு காரணம். உயிர்களுக்கு மருத்துவனாக நீலகண்டன் விளங்குவதும் அன்னை பிறவாமை என்னும் அமுதளிக்கும் அமுதகரவல்லியாகவும் கோயில் கொண்டிருந்தது இன்னொரு காரணம். அந்த ஆலயத்தின் தல விருட்சம் இலுப்பை. அந்த ஊர் அதனால் தான் அந்த பெயர் பெற்றது. 

நண்பர் யோசனையைச் சொன்னவுடன் இந்த கிராமம் பொருத்தமாக இருக்கும் என்று யூகித்தேன். அந்த ஊரின் ஆலயத்துக்குச் சென்று எண்ணம் நல்விதமாய் செயலாக வேண்டும் என வேண்டிக் கொண்டேன். ஊர்க்காரர்கள் ஓரிருவரிடம் எண்ணத்தைச் சொன்னேன். அவர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர். பின்னர் சிவ ராத்திரி தினத்தன்று அந்த ஊருக்குச் சென்று சிவாலயத்தில் சில மணி நேரங்கள் இருந்தேன். 

கடந்த வாரம், செய்ய உத்தேசித்துள்ள செயல் குறித்தும் 27 நட்சத்திர மரங்களின் மருத்துவ குணங்கள் குறித்தும் ஒரு பிரசுரத்தைத் தயார் செய்து கொண்டேன். பொதுவாக நான் புதிய பணிகளை ஞாயிற்றுக்கிழமை அன்று துவக்குவது வழக்கம். ஆதவனின் தினம் என்பதால். நாளை அங்கே பணி துவக்குகிறேன். 

வீடு வீடாகச் செல்ல வேண்டும். மரங்களின் மருத்துவ குணங்களைச் சொல்ல வேண்டும். மரம் நடும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். ( எனது அனுபவத்தில், உண்மையில் இந்த மரம் நடும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. விவசாயிகள் பயிர்களுக்கு மட்டுமே பார்த்து பார்த்து தண்ணீர் வைக்க வேண்டும் ; மரங்கள் தானாக வளரும் என்ற மனப்பதிவில் உள்ளனர். குறைந்த பட்சம் இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது மரங்களுக்கு தண்ணீர் விடுவது நல்லது. ). அந்த கிராமத்தில் 300 வீடுகள் இருக்கக் கூடும். ஒரு நாளைக்கு 40 குடும்பத்தினரைச் சந்தித்தால் ஒரு வாரத்தில் கணக்கெடுப்பு நிறைவு பெறும்.  

இன்று காலை அந்த கிராமத்துக்குச் சென்று சிலரைச் சந்தித்தேன். நாளை வருவதாய் சொல்லி விட்டு வந்தேன். அப்போது அந்த ஊரின் பொது இடம் ஒன்றை என்னிடம் காட்டினர். அது 10,000 சதுர அடி கொண்ட இடம். முறையான வேலியிட்டிருந்தனர். அதில் தென்னை மரங்கள் நட விருப்பம் கொண்டிருப்பதாகக் கூறினர். ஒரு தென்னை மரத்துக்கும் இன்னொரு தென்னை மரத்துக்கும் இடையே இருபது அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். அவ்வாறெனில் 10,000 சதுர அடியில் 25 தென்னை மரங்கள் நட முடியும். 25 தென்னம்பிள்ளைகளை நான் வழங்குகிறேன் என்று கூறினேன். அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. 

கேரள மாநிலத்தில் ஒரு வழக்கமுண்டு. தென்னம்பிள்ளைகளை ஓர் இடத்திலோ அல்லது வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ வைத்து அந்த தென்னம்பிள்ளைகளின் முன்னிலையில் இராமாயணம் 7 நாட்கள் சொல்வார்கள். (சப்தாஹம்) . பின்னர் அந்த தென்னம்பிள்ளைகளை நடுவார்கள். அதே போலக் கூட ஒரு ஏற்பாட்டை இங்கே செய்யலாம் என நினைத்தேன். 

கணக்கெடுப்பு  நிறைவு பெறும் போதுதான், 27 நட்சத்திர வகையில் ஒவ்வொரு வகையிலும் எத்தனை தேவை என்பது தெரியவரும். அதன் பின்னர், அவற்றை ஏற்பாடு செய்வது எவ்வாறு என்று யோசிக்க வேண்டும். கணக்கெடுப்பு உற்சாகமான பணி. பலரைச் சந்திக்க முடியும். ஆர்வமாக வினா எழுப்புவார்கள். ஊக்கம் அளிப்பார்கள். பணியில் துணையிருப்போம் என உறுதி கொடுப்பார்கள். அவர்களில் ஒருவனாக உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள். அந்த மக்களின் அன்பே வாழ்க்கையில் நான் பெற்ற பேறு.