கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். அதனால் எனது வாழ்க்கைமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் சிந்திக்கும் விதத்தில் - செயலாற்றும் விதத்தில் - மனிதர்களைப் புரிந்து கொள்ளும் விதத்தில் என நிறைய மாற்றங்கள் அகவயமாகவும் புறவயமாகவும் நிகழ்ந்துள்ளன. எந்த விஷயத்தையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு விரிவான பின்புலத்தில் வைத்து சிந்தித்தல், புரிந்து கொள்ளும் திறனில் கூர்மையாயிருத்தல், உறுதியான நிதானமான அணுகுமுறையில் செயல்களை ஆற்றுதல், எந்நிலையிலும் சோர்வடையாமல் இருத்தல் ஆகிய தன்மைகளை எனது இயங்குமுறையாகக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் நானாவித விஷயங்கள் குறித்தும் சிந்தித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறேன். இயல்பாகவே படைப்பூக்கம் கொண்ட மனம் என்னுடையது. கற்பனை எனது அறிதல் முறையாக இருந்திருக்கிறது. கற்பனை கொண்ட மனம் என்னை நூல்களை வாசிக்கச் செய்தது. ஓர் இலக்கிய வாசகன் என்னும் எண்ணமே பெரும் பெருமிதத்தை அளித்தது. மிக அதிக எண்ணிக்கை கொண்ட நூல்கள் என்று கூறமுடியா விட்டாலும் கணிசமான எண்ணிக்கையில் நூல்களை வாசித்திருக்கிறேன்.
அதன் பின்னர் ஓர் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினேன். எனது நலம் விரும்பிகள் மிகவும் விசனப்பட்டார்கள். உணர்ச்சிகரமான மனமும் கற்பனையில் மிதக்கும் குணமும் கொண்ட எனக்கு திட்டவட்டமான தன்மை கொண்ட வணிகம் சரி வருமா என்ற ஐயம் அவர்களுக்கு இருந்தது. ஓர் செயலை நிகழ்த்த இடம், பொருள், ஏவல் என்ற மூன்று விஷயங்கள் கவனம் கொள்ளப்பட வேண்டும் . இந்த மூன்றும் சரிசமமான இடத்தில் உறுப்புகளாக உள்ள துறை கட்டிடக் கட்டுமானம். துறை குறித்தும் துறையின் இயங்குமுறை குறித்தும் எனக்கு சரியான புரிதல் ஏற்பட்டது என்னுடைய நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். என் தொழில் சார்ந்த பணிகள் குறித்து எனக்கு திருப்தி இருக்கிறது. என் தொழில் எனக்கு முழுமையான சுதந்திரத்தையும் அளிக்கிறது.
இந்திய நிலத்தில் சில மோட்டார் சைக்கிள் பயணங்களை மேற்கொண்டேன். அந்த பயணம் என்னை எழுத்தை நோக்கி இட்டுச் சென்றது. பயணக் கட்டுரை எனது முதல் எழுத்து. அதன் பின் கவிதை, சிறுகதை, கட்டுரை, கம்ப ராமாயண ரசனைத் தொடர் என தொடர்ந்து எழுதினேன். வலைப்பூ துவங்கி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எழுதி வருகிறேன்.
அதன் பின்னர் சமூகப் பணிகள் சிலவற்றில் ஈடுபட்டேன். உலகம் ஒரு குடும்பம் என்கிறது இந்திய மரபு. உலகின் அனைத்து உயிர்களும் நலம் பெற்று வாழ வேண்டும் என்பதே இந்திய மரபின் பிரார்த்தனையாக இருக்கிறது. நம் மரபும் நம் மரபின் ஆசிரியர்களும் காட்டிய வழியில் எனது சமூகப் பணிகளை வடிவமைத்துக் கொள்கிறேன். இதில் என் பங்களிப்பு என்பது எதுவுமே இல்லை. நான் வெறும் கருவி மட்டுமே.
இன்று காலை செய்ய வேண்டும் என யோசித்து நிலுவையில் வைத்திருக்கும் பணிகளை பட்டியலிட்டேன். பதினெட்டு பணிகள் நிலுவையில் இருந்தன. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறு பணியிலிருந்து பெரும் பணிகள் வரை. இந்த பணிகள் உண்மையிலேயே அளவில் பெரியவை. ஒரு மனிதனின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் இந்த பணிகள் பலமடங்கு பெரியவவை. இருப்பினும் இவற்றை ஆற்றும் போது ஒருநாள் கூட நான் சோர்ந்தது இல்லை. ஒருநாள் கூட நான் பாரமாக உணர்ந்தது இல்லை. ஏனென்றால் இந்த பணிகளின் மூலம் பலர் என்னுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளார்கள். பலருடன் நான் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறேன். அந்த இணைப்பு அளிக்கும் சக்தியே என்னை - எங்களை - நம்மைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.
’’மை நஹி - தூ ஹி’’ என ஒரு வாசகம். ‘’நான் அல்ல - எல்லாம் நீயே’’ என்பது அதன் பொருள்.