Sunday 27 March 2022

மிகப் பெரிய உடற்பயிற்சிக்கூடம்

இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கே நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்.  
-சுவாமி விவேகானந்தர்

பதினைந்து நாட்களுக்கு முன்னால் பக்கத்து ஊர் ஒன்றில் ஒரு கால்பந்து போட்டி நடந்தது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் போட்டி. நண்பர்கள் அதனைக் காண வருமாறு அழைத்திருந்தனர் என்பதால் சென்றிருந்தேன். சிறுவர்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இந்திய மரபு குழந்தைகளை கிருஷ்ண சொரூபம் என்கிறது. கிருஷ்ணன் தன் நண்பர்களுடன் ஆடிய ஓயாத விளையாடலை நாம் இன்றும் கதைகளாக நம் சமூக நினைவில் வைத்திருக்கிறோம். ஒரு கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் கால்பந்து, ரிங் பால், வாலிபால், பேட்மிட்டன் என அவர்கள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் அந்த மைதானத்தில் கால்பந்து ஆடும் சிறுவர்களை ஆர்வத்துடன் கவனித்தேன். 

விளையாட்டு அவர்களை முழுமையாகத் தன்னுள் உள்ளிழுத்துக் கொள்கிறது. கூட்டுச் செயல்பாடு, கூர் மதி, அவதானம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவை விளையாட்டின் மூலம் உருவாகின்றன. உடல் வலிமை பெறுகிறது. உள்ளம் வலிமை பெறுகிறது. 

நேற்றும் இன்றும் இங்கே ஒரு கால்பந்து போட்டி ஏற்பாடாகி இருந்தது. நண்பர்கள் சில நாட்களுக்கு முன்னால் தகவல் சொன்னார்கள். பதின்மூன்று வயதுக்கு உட்பட்டவர்களின் போட்டி. முந்நூறு பேர் வரை கலந்து கொள்ளக் கூடும் என்று சொன்னார்கள். வெளியூர்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் சிறுவர்கள் வருவார்கள் என்று கூறினர். அந்த சிறுவர்களுக்கு இரண்டு நாட்களுக்கான உணவை வழங்க எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். ’’காவிரி போற்றுதும்’’ நண்பர்களுடன் பேசி அவர்களுடன் இணைந்து இந்த செயலை மேற்கொள்வதாக உறுதி அளித்தேன். 

மழைக்காலத்தில், ஒரு கிராமத்தின் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு ஆறு நாட்களுக்கு உணவளித்த அனுபவம் இருப்பதால் இந்த இரண்டு நாள் உணவளித்தலை எளிதில் ஒருங்கிணைக்க முடியும் என நம்பிக்கை இருந்தது. எந்த ஒரு விஷயத்திலும் இரண்டாவது அடியெடுப்பு என்பது முக்கியமானது. முதல் அடியெடுப்பின் அளவுக்கே முக்கியமானது. ஒரு விஷயம் நிலை பெற இது மிகவும் அவசியமானது. 

‘’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள் உற்சாகத்துடன் துணை நின்றனர். சமையலுக்குத் தேவையான வாடகைப் பாத்திரங்களுக்கான செலவை ஒருவர் ஏற்றார். சமையல் ஆட்கள் ஊதியத்தை ஒருவர் ஏற்றுக் கொண்டார். இரண்டு நாளுக்கும் தேவையான காய்கறிகளை ஒருவர் வாங்கித் தந்தார். எரிவாயு உருளையை ஒரு நண்பர் வழங்கினார். மளிகைப் பொருட்களின் செலவை ஒரு அலுவலகத்தில் பணி புரியும் நான்கு பொறியாளர்கள் இணைந்து ஏற்றுக் கொண்டனர்.  

மைதானத்தில் இருந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், வீரர்களின் பெற்றோர், பார்வையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்திய மரபில் உணவை அளிப்பவரினும் உணவை ஏற்பவரே முக்கியமானவர். சுவாமி சித்பவானந்தர் ‘’கல்வி’’ என்றொரு நூலை இயற்றியுள்ளார். அதில் ஒரு ஊரில் உள்ள பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள் எனில் அந்த மாணவர்களுக்கு உணவு அளிக்கும் கடமை அந்த ஊரைச் சேர்ந்தது என்கிறார். மேலும் அந்த மாணவர்களின் உணவுக்கான தானியங்கள் அந்த ஊரால் அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்த தானியங்களைக் கொண்டு அந்த பள்ளியின் மாணவர்களே உணவைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். பாத்திரங்களைத் தூய்மையுடன் பேணல், சமையல் செய்தல், பரிமாறுதல், சமைத்த சாப்பிட்ட இடத்தை தூய்மையுடன் வைத்திருத்தல் என அனைத்து செயல்களையும் தெய்வ வழிபாடென மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். சுவாமிஜி சொல்வது மேலான ஒரு நிலை. மேலான ஒரு உணர்வு. 

நூற்றுக் கணக்கான மாணவர்கள் கால்பந்து போட்டியில் உற்சாகமாக ஈடுபட்டதும் ஆர்வமாக உணவருந்தியதும் பெரும் நிறைவைத் தந்தது. 

அந்த குழந்தைகளின் மகிழ்ச்சி நிறைந்த முகங்கள் வாழ்க்கை மேல் மேலும் நம்பிக்கையைக் கொடுத்தன.