Tuesday, 29 March 2022

தீர்வுகளின் பாதை

நான் காந்திய வழிமுறைகளில் நம்பிக்கை உள்ளவன். காந்திய வழிமுறைகளில் பிரதானமான ஒன்று மனிதன் மீது மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்தல். அதனை அவர் இந்தியர்களின் ஆன்மீகத்திலிருந்து உருவாக்கிக் கொண்டார். இந்தியாவில் இந்தியத் தொன்மங்களில் அதற்கான முன்னுதாரணங்கள் அதிகமாகவே உள்ளன. இராமாயணத்தில் இராவணனிடம் தூதுவனாக அனுமனை அனுப்புகிறார் ஸ்ரீராமர். அதன் பின்னர் அங்கதனை அனுப்புகிறார். இராவணன் நிராயுதபாணியாக இருக்கும் போதும் சிந்திக்க ஒருநாள் அவகாசம் அளிக்கிறார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் சஞ்சயன் என்ற அந்தணரைத் தூதுவராக அனுப்புகிறார்கள். அதன் பின்னர் ஸ்ரீகிருஷ்ணன் தானே தூதனாகச் செல்கிறார். கௌரவர் தரப்புடன் தொடர்ந்து உரையாடுகிறார். மகாத்மா காந்தி இவற்றிலிருந்து எதிரிக்கு சிந்திக்க அவகாசமும் வாய்ப்பும் அளிப்பதை தனது வழக்கமாகக் கொண்டார். எதிர்த்தரப்புடன் அவர் தொடர்ந்து உரையாற்றினார். எதிர்த்தரப்பு என்பது ஒற்றைப்படையானது அல்ல என்பதையும் அதில் பலர் பலவித மனோபாவத்துடன் இருக்கக் கூடும் என்பதையும் அங்கும் நீதி அறிந்தவர்கள் இருப்பார்கள் என்பதையும் காந்தி உணர்ந்திருந்தார். அவர்களிடம் தன் தரப்பைத் தொடர்ந்து முன்வைத்த வண்ணம் காந்தி இருந்தார்.  

நான் அரசாங்கம் என்னும் அமைப்பின் மீது எதிர்மறையான எண்ணம் கொண்டவன் அல்ல. அரசு சரியான விதத்தில் இயங்கினால் அதனால் சமூகம் பலன் பெறும் என நம்புபவன் நான். அரசாங்கத்தின் இயக்கம் என்பது பொது மக்களின் விழிப்புணர்வையும் கடமை உணர்வையும் முக்கியப் பகுதிகளாகக் கொண்டது என்னும் புரிதல் எனக்கு உண்டு. 

2014ம் ஆண்டு மத்திய அரசு பொது மக்கள் புகார் அளிக்க pgportal(dot)gov(dot)in என்ற இணையதளத்தை உருவாக்கியது. மத்திய அரசின் அரசுத் துறைகள் குறித்தும் மாநில அரசின் அரசுத் துறைகள் குறித்தும் பொது மக்களுக்கு புகார் ஏதும் இருப்பின் வீட்டில் இருந்தவாறே இந்த தளத்தில் புகாரைப் பதிவிடலாம். இந்த தளம் அந்த புகாரை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பும். புகாருக்கான தீர்வை அளிக்க முயலும். இன்ன தீர்வு நிகழ்ந்தது என்ற தகவலை 45 நாட்களுக்குள் புகார் அளித்தவரிடம் தெரிவிக்கும். புகார் அளித்தவர் தமது புகார் பெற்ற தீர்வில் தனக்கு திருப்தி இருக்கிறதா என்பதை அதில் தெரிவிக்க வேண்டும். திருப்தி என்றால் மட்டுமே அது முழுமை பெறும். திருப்தி இல்லை என்று தெரிவிக்கப்பட்டால் இன்னும் மேலான கவனம் அளிக்கப்படும். புகார் அளித்தவர் தனது அபிப்ராயத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு இருப்பது இந்த முறையில் ஒரு சாதகமான் அம்சம். 

இது ஒரு இணைய தளமாக உள்ளதால் பொதுமக்கள் எந்த விஷயங்களில் அதிகமாக புகார் அளிக்கிறார்கள் என்பதை தரவுகளின் அடிப்படையில் எளிதாக மத்திய அரசு அறிய முடியும். அதற்கான தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட முடியும். எத்தனை சதவீத புகார்கள் புகார் செய்தவர்கள் திருப்தியடையும் விதத்தில் தீர்க்கப்பட்டுள்ளன என்பதையும் தரவுகளின் அடிப்படையில் அறிய முடியும். 

இந்த இணைய தளத்தில் புகார் அளிக்கப்படுகிறது என்றால் அதிகாரிகள் அந்த புகாருக்கு மிக அதிக கவனம் கொடுக்கிறார்கள் என்பது ஒரு நடைமுறை உண்மை. பொதுமக்களின் பல புகார்களுக்கு இந்த தளம் தீர்வளித்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.