’’காவிரி போற்றுதும்’’ குறித்த எண்ணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே மார்ச் மாதத்தில் உருவானது. இரண்டு ஆண்டுகள் ஆகி உள்ளன. கணிசமான அளவு செயல்கள் ஆற்றப்பட்டுள்ளன என்றே நினைக்கிறேன். இருப்பினும் இன்னும் இன்னும் என மனம் வேகம் கொள்கிறது. மக்கள் பணியாளன் அனுபவத்தில் உணரும் உண்மை என ஒன்று உண்டு. எந்த செயலுக்கும் அடிப்படை அந்த செயலைச் செய்ய வேண்டும் என்ற உணர்வே. எனவே மக்கள் பணியாளன் எப்போதும் தன் குழுவிடம் அகத்தில் அந்த உணர்வு எப்போதும் சுடரும் படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பான்.
இந்த இரண்டு ஆண்டுகளில் பொதுப் பணிகளில் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். செயல் புரியும் கிராமத்தில் சில விவசாயிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அங்கிருந்த விவசாயி ஒருவர் என்னைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் சொன்னார் : ‘’ சாருக்கு பொறுமை ரொம்ப அதிகம். யார் எது சொன்னாலும் முழுசா கேட்டுக்கறாரு. யாரும் கடுமையா ஏதும் சொன்னாக் கூட சாருக்கு கோபம் வர்ரதில்லை. சொல்ல வேண்டிய விஷயத்தை அமைதியா எடுத்துச் சொல்றாரு. நாம யாரைப் பத்தியாவது புகாரா சொன்னாக் கூட யாரைப் பத்தியும் எதிர்மறையா நினைக்காதீங்க சொல்லாதீங்கன்னு சொல்றாரு. மெல்ல மெல்ல செஞ்சாலும் தான் நினைச்சதை செஞ்சுடராரு.’’
நாம் மக்களை இணைப்பதற்காகப் பணி புரிகிறோம். நம்மை ஏற்காதவர்கள் நம்மை வெறுப்பவர்கள் கூட நம்மவர்களே. அவர்களுக்கும் சேர்ந்து யோசிக்க வேண்டிய செயலாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. மக்கள் பணியாளன் அந்த உணர்வுடன் எப்போதும் இருப்பான்.
நான் முதலில் பணி புரிந்த கிராமத்துக்கு இரண்டு நாட்கள் முன்னால் சென்றிருந்தேன். அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் வீட்டு வாசல் முன்னால் வைப்பதற்காக அளித்திருந்த மலர்ச் செடிகள் சிறப்பாக வளர்ந்து பூ பூத்துக் கொண்டிருக்கின்றன. அரை அடி நீளத்தில் அளித்த அச்செடிகள் இன்று ஆறடி உய்ரம் வளர்ந்திருப்பதைப் பார்க்கும் போது இவை நாம் அளித்த செடிகள் தானா என்று நமக்கே ஐயம் உருவாகிறது.
‘’காவிரி போற்றுதும்’’ முதலில் ஒரு கிராமத்தில் கணக்கெடுப்பு மேற்கொண்டு 20,000 மரக்கன்றுகளை அந்த கிராமத்துக்கு அளித்த பின் அடுத்து அதே பணியை பத்து கிராமங்களுக்கு 2,00,000 மரக்கன்றுகள் என முன்னெடுப்பது எனத் திட்டமிடப்பட்டிருந்தது. அதுதான் நம் ஆரம்ப திட்டம். அதன் பின்னர் சூழலைப் பொறுத்து பல்வேறு பணிகள் இணைந்தன. பல்வேறு தளங்களில் செயல்கள் விரிவாயின. எனினும் என்னுடைய மனம் மரக்கன்றுகள் விஷயத்தில் மையம் கொண்டு சுழன்றவாறு இருந்தது. 2,00,000 மரக்கன்றுகளை ஒரு நர்சரி அமைத்து சொந்தமாக உண்டாக்க குறைந்தபட்சமாகக் கூட கணிசமான தொகை தேவைப்படும். என்ன செய்வதென்ற யோசனையிலேயே நாட்கள் சென்றது.
நான் எந்த ஒரு விஷயம் மனதில் இருந்தாலும் அதனைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பேன். நாள்கணக்காக யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த விஷயம் குறித்து ஒரு புதிய யோசனை உண்டாகும். அது மிக எளிமையான ஒன்றாக இருக்கும். இது என் அனுபவம். இரண்டு நாட்களுக்கு முன் அந்த கிராமத்துக்குச் சென்று ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு யோசனை உண்டானது.
நான் முன்னர் திட்டமிட்டது 2,00,000 மரக்கன்றுகளை உண்டாக்க 2,00,000 நர்சரி சேப்ளிங் பைகள் தேவை என. அவை இருந்தால் தான் அவற்றில் மண்ணும் உரமும் இட்டு விதையிட்டு மரக்கன்றுகளை உண்டாக்க முடியும் என்பதால் 2,00,000 நர்சரி சேப்ளிங் பைகளை கொள்முதல் செய்வதுதான் முதல் பணியாக இருந்தது. அதற்கான நிதி இருப்பு இல்லை என்பதால் பணி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
மின்னல் தெறிப்பென ஒரு எண்ணம் உண்டானது. ஒரு நிலத்தில் 80 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்ட ஒரு பரப்பை எடுத்துக் கொள்ள வேண்டியது. அதனைச் சுற்றி 15 செமீ உயரத்துக்கு செங்கல்லால் கட்டு வேலை போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது 80 அடி நீளம் 80 அடி அகலம் 15 செமீ உயரம் கொண்ட இடம் தயாராகி விடும். அதில் சாண எருவையும் செம்மண்ணையும் மணலையும் கலந்து நிரப்பிக் கொள்ள வேண்டும். இந்த பரப்பின் மேல் 7 அடி உயரத்தில் படுதா கூட போட்டுக் கொள்ளலாம். வெயில் உக்கிரமாக விதைகள் மேல் படாமல் இருக்க.
50,000 நெல்லி விதைகள், 50,000 கொய்யா விதைகள், 50,000 பலா விதைகள், 50,000 நாவல் விதைகளை நாம் தயார் செய்திருக்கும் பரப்பில் விதைக்க வேண்டும். இவை முளைத்து 10 செமீ உய்ரம் அளவுக்கு வர ஐம்பது நாட்கள் ஆகும். காலை மாலை சீராக தண்ணீர் தெளித்து பராமரித்தால் போதும்.
இந்த ஐம்பது நாட்களில் 10 கிராமங்களில் விவசாயிகளுக்கு யாருக்கு எவ்வளவு தேவை என்று கணக்கெடுத்து விடலாம். காகிதப் பைகளில் நாற்றங்காலிலிருந்து எடுத்து மரக்கன்றுகளை வைத்து சில மணி நேரங்களில் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி விடலாம். விவசாயிகள் காகிதப் பையுடனே கூட மரக்கன்றுகளை நடவு செய்ய முடியும். காகிதம் மக்கக் கூடிய பொருள்.
நம் கிராமங்களின் குழந்தைகள் உணவில் பழங்கள் இடம் பெற வேண்டும் என்பதால் நெல்லி, கொய்யா, பலா, நாவல் என நான்கு பழ மரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
‘’காவிரி போற்றுதும்’’ நண்பர்களான இயற்கை விவசாயம் செய்யும் நண்பர்களுக்கும் இந்திய அரசின் விவசாய நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பணியில் இருக்கும் நண்பர்களுக்கும் இந்த யோசனையை அனுப்பி அவர்கள் அபிப்ராயம் கேட்டுள்ளேன்.
வாசகர்களுக்கு இந்த யோசனையை செழுமைப்படுத்த ஆலோசனைகள் இருந்தால் ulagelam(at)gmail(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.