Wednesday 2 March 2022

விழிப்புணர்வு

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஐ டி துறையில் பணிபுரிபவர். Work from home முறையில் பணிபுரிவதால் தனது பூர்வீக கிராமத்தில் கடந்த பல மாதங்களாக இருக்க வேண்டிய சூழ்நிலை. சென்ற ஆண்டு எங்கள் அறிமுகம் ஏற்பட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து நான் அவரிடம் அவ்வப்போது கூறுவேன். அவருடைய குடும்ப சொத்தாக நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. நெல் பயிரிடுகின்றனர். அவரது தந்தை விவசாயத்தை இத்தனை நாட்கள் கவனித்து வந்தார். தொடர்ந்து வீட்டில் இருக்கும் காலசூழ்நிலையால் நண்பருக்கு இப்போது தான் விவசாயத்தின் வரவு செலவு கணக்குகளைப் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து நான் கூறும் விஷயங்களிலிருந்து அவருக்கு தனது பூர்வீக நிலத்தில் தேக்கு பயிரிட வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 

‘’காவிரி போற்றுதும்’’ நெல் வயல் வரப்புகளில் மட்டுமே தேக்கு பயிரிட விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கிறது. எனினும் நண்பர் தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்திலும் முழுமையாகத் தேக்கு பயிரிட விரும்பினார். அதற்காக வயலில் நெடுக கிழக்கு மேற்காக இரண்டு அடி மேட்டுப் பாத்தி அமைத்து அதில் தேக்கு நட வேண்டும் என்று சொன்னேன். 

இங்கே மரம் வளர்ப்பில் உண்மையான பிரச்சனை மரங்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் விட வேண்டும் என்ற விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லாமல் இருப்பதே. ஆறு மாதம் வரை ஓரளவு தண்ணீர் ஊற்றுவார்கள். அதன் பின்னர் தானாகவே வளர்ந்து விடும் என்று இருப்பார்கள். அலட்சியம் காரணமல்ல ; அவர்கள் அப்படித்தான் நம்பிக் கொண்டிருப்பார்கள். ஆறு மாதம் வரை தண்ணீர் ஊற்றி அதன் பின்னர் ஊற்றாமல் இருந்தாலும் மரம் வளரும் தான். ஆனால் அதன் முழு சாத்தியத்தையும் முழுத் திறனையும் எட்டி வளராது. 

நண்பரிடம் இது போல பல விஷயங்களை அன்றாடம் பேசிக் கொண்டிருப்பேன். அவற்றிலிருந்து அவர் பல விஷயங்களைக் கிரகித்துக் கொண்டார். என்னிடம் முழு நிலத்திலும் தேக்கு பயிரிட தனது விருப்பத்தைக் கூறினார். முதலில் ஒரு ஏக்கர் முயற்சி செய்து பாருங்கள் என்றேன். ஒன்றுக்கும் நான்குக்கும் ஏற்பாடுகள் ஒன்று தான் என்று கூறினார். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணி புரிவதால் விஷயங்களை தர்க்கபூர்வமாகப் புரிந்து கொண்டார். 

மற்றவர்களிடமும் இது குறித்து ஆலோசனை செய்யுங்கள் என்று சொன்னேன். சிலரிடம் கேட்டிருக்கிறார். ‘’தேக்கு மரம் வெட்டும் போது அரசு அனுமதி பெறுவதில் சிக்கல் இருக்குமா?’’ என்ற ஐயத்தை எழுப்பியிருக்கின்றனர். உங்களிடம் அவ்வாறு கூறியவர்கள் எத்தனை தேக்கு மரம் வெட்ட அனுமதி கேட்டிருக்கின்றனர் என்று கேளுங்கள் என்றேன். உண்மைக்கு மாறான ஒன்றை பலரும் உண்மை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் தேக்குக்குப் பதிலாக ஐரோப்பாவில் அதிகமாக விற்பனை ஆகும் மரம் ஒன்றை பரிந்துரைத்திருக்கிறார்கள். என்னிடம் கேட்டார். ‘’கழுத்துல போடற செயின் சரியா பிளேஸ் ஆகியிருக்கான்னு கண்ணாடில பாத்து சரி செய்யலாம். ஆனா கைல போட்டிருக்க காப்பை கண்ணால பாத்தாலே போதும்’’ . ’’தேக்கு மரம் வளர்ந்ததும் உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்கறவங்களுக்கு உங்க தெருவில இருக்கறவங்களுக்கு அடுத்த தெருவில இருக்கறவங்களுக்கு பக்கத்து ஊர்க்காரங்களுக்குன்னு அதோட தேவை ரொம்ப அதிகமா இருக்கும். நல்ல டிமாண்ட் உண்டுங்கறதால விலையை நீங்களே முடிவு செய்யலாம்’’ என்று சொன்னேன். 

இருந்தாலும் நண்பர் மனதில் ஒரு சிறு சஞ்சலம் இருந்தவாறே இருந்தது. 

நேற்று நண்பர் தனது வயலை சர்வேயரை வைத்து அளந்தார். அப்போது அந்த ஊரில் உள்ள பெரும் பண்ணையார் ஒருவர் விஷயம் கேள்விப்பட்டு அங்கே வந்தார். அவரிடம் தேக்கா அல்லது ஐரோப்பிய மரமா எதைத் தேர்ந்தெடுப்பது என்று தனது சஞ்சலத்தைக் கூறியிருக்கிறார். அவர் சர்வ நிச்சயமாக , ‘’தேக்குதான் தம்பி’’ என்று கூறி விட்டார். ’’ஐரோப்பிய மரம் போட்டா விலையை வியாபாரி தான் தம்பி தீர்மானிப்பார்.  தேக்கோட விலைய நாம தீர்மானிக்கலாம்’’ என்று கூறினார். 

நண்பரின் சஞ்சலம் நீங்கியது. 

அந்த கிராமம் முழுவதும் நண்பர் தேக்கு பயிரிடப் போவது செய்தியாகி விட்டது. அனைவரும் அவரிடம் நாங்களும் கொஞ்சம் நிலத்தில் முயற்சி செய்கிறோம் என்று கூறி நண்பரிடம் விபரம் கேட்டனர். 

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

ஒரு விஷயம் குறித்து முழுமையான விழிப்புணர்வு இருப்பது எந்த அளவு பயன் தரக் கூடியது என்பதை நேரடியாகக் காண இந்த சம்பவம் வாய்ப்பளித்தது.