Monday 11 April 2022

நீதியை நோக்கி

ஒரு பொதுப் பிரச்சனை ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அந்த விஷயம் சட்டத்தின் ஒளி வரம்புக்குள் வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சட்டத்தின் செயலாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வலுவான ஒரு தரப்பு பெரும் முயற்சி மேற்கொள்கிறது. நான் எனது மனசாட்சியின் துணையுடன் நீதியின் மேல் இருக்கும் நம்பிக்கையுடன் அந்த விஷயம் தொடர்பாக செயல்படுகிறேன்.  

பகவத் கீதையில் கிருஷ்ணன் ‘’நெறிகளை செயலாக்க உதவும் காரணிகளில் நான் தண்டனை’’ என்கிறான் ; ‘’சூழ்ச்சியில் நான் பகடையாட்டம்’’ என்கிறான். இந்த இரண்டு வாக்கியங்களும் என் மனதில் சுழன்று கொண்டேயிருந்தன. 

இந்த விஷயத்தில் செயல்படுவதன் வாயிலாக அரசாங்கம், அரசாங்க விதிகள், சட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்புகள், சட்டத்தின் இயங்குமுறை என பல விஷயங்களை நெருங்கி அறிய வாய்ப்பு கிடைக்கிறது. 

இந்திய அரசியல் சட்டம் மகத்தானது. உலகின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட தேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வுடன் பொறுப்புணர்வுடன் அதன் ஒவ்வொரு வரியும் எழுதப்பட்டுள்ளது. அந்த உணர்வு மிகப் பெரிது . பெரிதினும் பெரிது.