Friday 8 April 2022

இரும்படிக்கும் இடத்தில் ( நகைச்சுவைக் கட்டுரை)

’’இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை ?’’ என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. இன்று அமைப்பாளர் அப்படி ஒரு நிலையில் மாட்டிக் கொண்டார்.அமைப்பாளர் இன்று ஒரு கூகுள் மீட்டிங்கில் பங்கெடுக்க வேண்டிய நிலை உண்டாகி விட்டது. அவர் ஒரு சில முறை ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் என்ற தைரியத்தில் இணைந்து கொள்கிறேன் என்று கூறி விட்டார். அப்போதெல்லாம் இவற்றை நன்றாகக் கையாளத் தெரிந்த ஒருவரையோ அல்லது இரண்டு பேரையோ அமைப்பாளர் கெஞ்சிக் கூத்தாடி பக்கத்து அறையில் இருக்க சொல்வார். ஏதேனும் சிக்கல் எனில் அவர்கள் வந்து தீர்த்துக் கொடுப்பார்கள். இன்று அனைத்தும் அமைப்பாளரே. சிக்கல் வந்தது. தீர்வு வரவில்லை. தீர்வு வரவில்லை என்ற சிக்கலை எப்படி தீர்ப்பது என்ற புதிருக்கான விடை பகவான்  மட்டுமே அறிந்தது 

அமைப்பாளருக்கு மிகச் சிறு வயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம். எனவே அவருக்கு புத்தகம் தான் மிகவும் நெருக்கம். இப்போது அவரிடம் ஒரு ஜப்பானிய மொழி புத்தகத்தைக் கொடுத்தால் கூட அவர் வாசித்துப் பார்ப்பார். பக்கம் பக்கமாக புரட்டுவார். கையில் வைத்துக் கொள்வார். அந்த புத்தகம் மொழியறியாத வாசகனுக்கும் ஏதேனும் சொல்லும் என நம்பக் கூடியவர் அமைப்பாளர். புத்தகங்களின் வழியாக உலகின் மகத்தான ஆளுமைகளை அண்மையில் அணுகி பழக்கம் கொண்டவர் என்பதால் அவருக்கு எலெக்ட்ரானிக் பொருட்கள் மீது  சிறு வயதிலிருந்தே ஆர்வம் இல்லை. ரேடியோ மீது அமைப்பாளருக்கு மெல்லிய ஈடுபாடு உண்டு. ஒரு பாக்கெட் சைஸ் ரேடியோ வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு கல்லூரியில் படிக்கும் போது இருந்தது. சுயமாக சம்பாதிக்கத் தொடங்கியதும் ஒரு பாக்கெட் சைஸ் ரேடியோ வாங்க வேண்டும் என்று கனவு கண்டார். சொந்தமாக தொழில் தொடங்கி பல ஊழியர்களுக்கு தினப்படி ஊதியம் கொடுத்து என்னென்னவோ செய்து விட்டார். அந்த ரேடியோவை மட்டும் வாங்கவே இல்லை. 

அமைப்பாளருக்கு சிறு வயதிலிருந்தே தபால் துறை, தபால் பெட்டி, தபால் பை, தபால் அலுவலகம் இவற்றின் மீது பேரார்வம் உண்டு. தபால் துறையை அவர் தேவலோகமாகவே எண்ணுவார். அஞ்சல் அட்டை போல ஒரு அற்புதம் இந்த உலகத்தில் உண்டா என எண்ணுபவர் அமைப்பாளர். ‘’இன்லேண்ட் லெட்டர் கார்டு’’ பெயரே எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது - ஜூலியஸ் சீசர் என்பது போல. ஆபிரகாம் லிங்கன் என்பது போல. ஒரு போஸ்டல் கவர் சிறந்த கலைப்படைப்பு அல்லவா என்று அதனை ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் அவருக்குத் தோன்றும். தபால்களின் மீது இத்தனை ஆர்வம் இருப்பதால் அறிமுகமான முதல் நாளிலிருந்து மின்னஞ்சல் மீது நன்மதிப்பு உண்டு. அதன் பெயரிலேயே அஞ்சல் இருப்பது காரணமாக இருக்கலாம். 

அமைப்பாளர் இப்போது தீவிரமாக உணரும் ஒரு விஷயம் என்பது அவருக்கு அலைபேசியால் பெரிய அளவில் உபயோகம் இல்லை என்பதே. ஏன் 90களில் லேண்ட் லைன் ஃபோன் பயன்படுத்தியது போல இப்போதும் பயன்படுத்தக் கூடாது என பலமுறை யோசித்திருக்கிறார். கூடிய விரைவில் லேண்ட் லைனுக்கு மாறி விடப் போகிறார் என்றே திடமாக எண்ணுகிறார். 

அமைப்பாளருக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் இரவுலாவி. அதாவது இரவில் முழுமையாக விழித்திருப்பார். பகல் பொழுதில் பெரும்பாலான நேரம் உறக்கத்திலேயே இருப்பார். அதாவது காலை 6 மணிக்கு உறங்கத் துவங்கினால் மதியம் 1 மணி வரை உறங்குவார். பின்னர் எழுந்து சிறிது நேரம் விழித்திருந்து மதிய உணவு உறங்கி விட்டு மதியம் 2.30க்கு மீண்டும் உறங்குவார். மாலை 5.30க்கு எழுந்திருப்பார். அதன் பின் குளியல். இரவு 9 மணிக்கு மேல் அவருடைய வீட்டு வாசலில் அமர்ந்து நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். 10 மணிக்கு ஊரே அடங்கி விடும். அவர் வானத்து நட்சத்திரங்களுடன் புன்னகையுடன் உரையாடிக் கொண்டிருப்பார். அமைப்பாளர் சில வருடம் முன்பு வரை இரவு 9 மணிக்கு உறங்கும் வழக்கம் கொண்டிருந்தார். இப்போது தான் இரவு 10 என்றாகி உள்ளது. சமயத்தில் நண்பரை சந்திக்கும் வண்ணம் ஆகும். அப்போது அமைப்பாளர் தூங்கி தூங்கி விழுவார். நண்பர் மிக மெல்ல பேச ஆரம்பிப்பார். ‘’இந்த உலகம் ரொம்ப பெருசு. இந்த வானம் இந்த உலகத்த விட ரொம்ப பெருசு’’. இரவு வானத்தைப் பார்த்தே நண்பர் அறிந்த உண்மை என்பதால் அமைப்பாளர் மௌனமாக இருப்பார். நண்பர் அமைப்பாளர் அறிந்து 20 வருடமாக இப்படித்தான் இருக்கிறார். அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்து அவர் அப்படித்தான் என்றார்கள். 

பணிவின் உச்சம் நந்தி பகவான். அவரையே அம்மையப்பன் ‘’சற்றே விலகியிரும் பிள்ளாய்’’ என்று கேட்டுக் கொண்டான். சற்று விலகியிருப்பது நல்ல விஷயம் என்ற அனுபவம் நந்திக்கும் இருக்கக் கூடும்!