Wednesday 27 April 2022

ஓட்டம்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். வயதானவர். பணி ஓய்வு பெற்று 22 ஆண்டுகள் ஆகி விட்டன. தினசரி 5 கி.மீ நடைப்பயிற்சி மேற்கொள்வார். ஒரு மாதத்துக்கு முன்னால் காலைநடைக்குச் சென்ற போது சாலையில் தடுக்கி விழுந்து விட்டார். அடி ஒன்றும் பலமாக இல்லை. வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை நன்றாக அறிவார்கள். ஒரு ஆட்டோ பிடித்து அவருடைய வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் பரிசோதித்துப் பார்த்தார்கள். வெளிக் காயம் ஏதுமில்லை. கை கால் முகம் கழுவி ஆசுவாசப்படுத்திக் கொண்டு லேசான மயக்கம் போன்ற உணர்வு இருக்கிறது ; கொஞ்ச நேரம் படுத்து உறங்குகிறேன் என்று கூறிவிட்டு தனது அறையில் படுத்து உறங்கி விட்டார். சில மணி நேரம் கழித்து எழுந்தால் அவர் தன் வாழ்நாள் முழுதும் சேகரித்த ஞாபகங்களில் பெரும்பாலானவற்றை மறந்து விட்டார். முதல் விஷயம் அவருக்கு தமிழ் மறந்து விட்டது. தன்னைச் சுற்றியிருக்கும் குடும்ப நபர்களைப் பார்த்து ‘’நீங்களெல்லாம் யார்?’’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். உடனே அவரை அள்ளிப் போட்டு உள்ளூர் பொது மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரும் என்ன ஏது என்று புரியாமல் அவர்களுடன் சென்றார். மருத்துவரிடம் நடந்தவற்றை குடும்பத்தினர் விளக்கினர். மருத்துவர் சென்னை அழைத்துச் செல்ல சொன்னார். அதுவரை எடுத்துக் கொள்ள சில விட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரைக்க விரும்பி நண்பரிடம் அவரது பெயரைக் கேட்டார். நண்பருக்கு அவருடைய பெயரும் நினைவில்லை. அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு அருந்தக் கூறினர். அதாவது தட்டில் உணவை வைத்து அவர் முன் வைத்தனர். அதை எப்படி உண்ண வேண்டும் என்பது அவருக்கு மறந்திருந்தது. ஸ்பூனால் அவருக்கு ஊட்டி விட்டனர். ‘’இந்த பெண்மணி ஏன் இவ்வளவு துயரமாய் இருக்கிறார்? ஏன் அழுது கொண்டு இருக்கிறார்? இவர் யார்?’’ என்று ஆங்கிலத்தில் தனது மகனிடம் கேட்டார். அந்த பெண்மணி அவரது மனைவி. அவருடைய நிலையை விட அவருடைய வினாக்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தின. அவருடைய வினாக்களின் துயரிலிருந்து விடுபட எண்ணி ஒரு மருத்துவரை அழைத்து வந்து அவர் நெடுநேரம் உறங்குவதற்காக ஒரு ஊசியைப் போட்டு அவரை சென்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே மருத்துவமனையில் அட்மிட் செய்து ஸ்கேன் செய்து பார்த்தனர். அவருடைய மூளைக்குச் செல்லும் குருதிக் குழாய்கள் ஒன்றிரண்டில் வழக்கமான ஓட்ட்ம் தடைப்பட்டு இருந்தது. இதற்கு மருந்து என்று எதுவும் இல்லை. தானாக சரியானால் உண்டு என்றார்கள். எதற்கும் 10 நாட்கள் இங்கேயே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்கள். அடுத்த நாள் காலை விடிந்ததும் பல் துலக்க டூத் பிரஷ், பேஸ்ட் கொடுத்தார்கள். ‘’இவை யாவை?’’ என ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு பதில் கூறப்பட்டதும் ‘’இதை ஏன் என்னிடம் தருகிறீர்கள்?’’ என்று கேட்டிருக்கிறார். ‘’பல் துலக்க’’ என்று சொன்னதும் ‘’பல் துலக்குதல் என்றால் என்ன?’’ என்று அடுத்த கேள்வி. பின்னர் அவரது மகன் தனது தந்தைக்கு பல் துலக்க சொல்லித் தந்திருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுகிறாரே தவிர அவரால் ஆங்கிலம் படிக்க முடியவில்லை. அட்சரங்கள் அனைத்தும் மறந்து போய் விட்டது. ஓரிரு நாட்கள் மெல்ல நகர்ந்தன. 

மேலும் சில மருத்துவர்கள் வந்து சோதித்தனர். அதில் சீனியரான ஒரு மருத்துவர் , ‘’மனித உடல்ல மூளை ரொம்ப நுட்பமான அமைப்பு. ரொம்ப மைனூட்டா ரத்த ஓட்ட்ம் தடைப்பட்டிருக்கு. தானா சரியாகும்னு நம்புவோம்’’ என்றார். 

பத்து நாட்கள் சென்றன. அதே நிலை. எந்த முன்னேற்றமும் இல்லை. ஒருநாள் மாலைப் பொழுதில் தனது மருத்துவமனை அறையில் இருந்த ஆங்கில செய்தித்தாளை வாசிக்கத் தொடங்கினார். மருத்துவர்களுக்குத் தகவல் சொல்ல அனைவரும் ஆர்வமாக வந்து பார்த்தனர். நியூஸ் பேப்பர் படிப்பது என்ன உலக அதிசயமா அதை என்ன இவ்வளவு ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் என வியந்து மருத்துவர்களை நோக்கியிருக்கிறார் நண்பர். ‘’சின்ன அளவுல ரத்த ஓட்ட்ம் கூடியிருக்கிறது’’ என அபிப்ராயப்பட்டார்கள் மருத்துவர்கள். 

எங்கள் ஊர்ப்பக்கம் வயலில் பாய்ச்சல்காலில் மடை முழுமையாகத் திறக்கவில்லை என்றால் தண்ணீர் தத்தி தத்தி பாயும். அவ்வாறு பாய்கிறது போல என குடும்பத்தினர் நினைத்தார்கள். மேலும் ஐந்து நாட்கள் போனது. ஒருநாள் காலை விழித்து எழுந்ததும் தனது மனைவியை பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். அனைவருக்கும் சந்தோஷம். இருந்தாலும் தமிழ் இன்னும் ஞாபகம் வரவில்லை. மேலும் ஐந்து நாள் போனது. தனது பேரக்குழந்தைகளின் பெய்ர்களைச் சொல்லி அவர்கள் எங்கே என்று கேட்டிருக்கிறார். பத்து நாள் கழித்து மெல்ல மெல்ல எல்லா ஞாபகங்களும் வந்து விட்டன. 

‘’ஒரு மாதிரி தெளிவில்லாம இருக்கு. எனக்கு என்ன ஆச்சு?’’ என்று கேட்டிருக்கிறார். இந்த கேள்வி கேட்டதும் அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். 

ஊருக்கு வந்ததும் அவருடைய உறவினர்களும் நண்பர்களும் அவரைச் சூழ்ந்து நலம் விசாரிக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் ‘’நான் யார்?’’ என்று கேட்டார். அந்த சுற்றத்தில் நானும் இருந்தேன். 

‘’நான் யார்?’’ என்று தெரிந்து கொள்ளத்தான் மானுட குலம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முயல்கிறது என்று நினைத்துக் கொண்டேன். 

பின்குறிப்பு :

நண்பர் இப்போது நலமாக இருக்கிறார். எல்லா ஞாபகங்களும் வந்து விட்டன. தமிழில் பேசுகிறார். ஆனால் தமிழ் அட்சரங்கள் நினைவில் இல்லை என்பதால் தமிழில் எழுதப்பட்ட எதையும் படிக்க முடியாது.