ஆயகலைகள் 64 என்கிறது இந்திய மரபு. இந்த கலைகளின் தெய்வம் கலையரசி சரஸ்வதி. அத்தனை கலைகளிலுமே அறிதல் என்னும் நிலத்தில் முளைக்கும் விதைகளே. அதனால் தான் அத்தனை கலைகளுக்கும் தெய்வம் கலைமகள் என வழங்கியது நம் மரபு.
படைக்கலன் பயிலும் ஒருவன் புவியியலும் பயில வேண்டும். ஆயுர்வேதம் பயிலும் ஒருவன் யோக மார்க்கத்தையும் அறிய வேண்டும். ஞானம் என்னும் தீ திசைகள் அனைத்திலும் கிளர்ந்து கிளை விட்டு மேலெழுவதே. யாவும் ஒன்றே என அறிவதே மாணவன் ஆசானாகும் நிலை. போதிசத்வன் புத்தனாகும் நிலை. உபாசகன் தெய்வமாகும் நிலை.
நண்பர் ஒருவர் என்னுடைய தாக்கத்தால் தனக்கு சொந்தமாக உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிடுகிறார். மொத்த வயலிலும் 200 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி உயரம் கொண்ட பாத்தி அமைக்கப்பட்டது. பாத்தி அமைப்பதில் என்னுடைய கட்டிடப் பொறியியலின் எளிய யுக்திகள் சிலவற்றைப் பயன்படுத்தினேன். விவசாயப் பணியாளர்கள் வழக்கமான தங்கள் பாணியிலிருந்து வேறுபட்டு பணி புரிவதில் சிறு தயக்கம் காட்டினர். இருப்பினும் எண்ணிய வண்ணம் வேலை எண்ணியாங்கு இயற்றப்பட்டது. அத்தனை பாத்திகளும் ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் சில நடைமுறைப் பயன்கள் உண்டு. 90 சதவீதம் எனது எதிர்பார்ப்பு எய்தப்பட்டது. மீதி சதவீதமும் அவ்வாறே நிகழ தொகை கூடுதலாக செலவாகும் என்பதால் நான் 100 சதவீத துல்லியத்தை சற்று தளர்த்திக் கொண்டேன்.
ஒரு விவசாயப் பணிக்கு என்னுடைய கட்டிடப் பொறியியலின் ஞானம் துணை நின்றது மகிழ்ச்சி தந்தது.