Friday 6 May 2022

விடுமுறை ( நகைச்சுவைக் கட்டுரை)

இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 

எங்கள் பகுதியில் ஒரு கல்லூரி மாணவன் இருந்தான். அவன் பொறியியலில் முதுநிலை படித்துக் கொண்டிருந்தான். எனக்கு பரிச்சயம் உள்ளவன். என் மீது பிரியமாக இருப்பான். என்னை விட வயதில் இளையவன். அவன் எங்கள் ஊரிலிருந்து ரயிலில் சென்று கல்லூரியில் படித்து வந்தான். அவன் படித்த கல்லூரி தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. இந்த சம்பவம் நடந்ததற்கு முதல் நாள் இரவு ஒரு பெரும்புயல் வீசக்கூடும் என்ற அறிவிப்பு இருந்தது. 

காலை 5.15க்கு அவன் வந்து வீட்டுக் கதவைத் தட்டினான். நான் தான் கதவைத் திறந்தேன். 

‘’என்னப்பா விடிகாலைலயே வந்திருக்க. என்ன விஷயம்?’’ எனக்கு தூக்க கலக்கம். அது நீங்காமலேயே உள்ளே அழைத்து உட்கார வைத்தேன். 

‘’அண்ணன் ! இன்னைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு. ஜங்ஷன் வரைக்கும் போகணும்.’’

அப்போது பேய்மழை கொட்டிக் கொண்டிருந்தது. 

‘’கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள்ல பள்ளி கல்லூரி விடுமுறைன்னு நியூஸ்ல சொன்னாங்க. அதோட டிரெயின்லாம் கேன்சல்.தெற்கு ரயில்வே அனௌன்ஸ் பண்ணியிருக்காங்க. அதுவும் நியூஸ்ல வந்துச்சு’’

‘’ஆமாம் அண்ணன்! ஆனா எங்க காலேஜ் உண்டு’’

‘’கவர்மெண்ட் அறிவிச்சப்புறம் அதை மீறி செஞ்சா உங்க காலேஜூக்கு ஃபைன் போட்டுடுவாங்க. ‘’ 

‘’ஆனா எக்ஸாம் நடந்துடுமே அண்ணன். எனக்கு நல்ல ஸ்கோர் இருக்கு. இந்த எக்ஸாம் எழுதாமப் போனா எனக்கு டிஸ்டிங்க்‌ஷன் மிஸ் ஆயிடும். 92 பர்செண்ட் வாங்கி டிஸ்டிங்க்‌ஷன் மிஸ் ஆச்சுன்னா ரொம்ப கஷ்டமாயிடும் அண்ணன்’’

மழையால் கரண்ட் வேறு இல்லை. மாணவன் கல்லூரி உடையில் புத்தகப்பையுடன் கிளம்பி வந்து நிற்கிறான். 

’’கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் முகம் கழுவி விட்டு வரேன்’’

வந்து அமர்ந்தேன். 

அப்போது தொலைபேசியும் அலைபேசியும் சமமாக பயன்படுத்தப்பட்டு வந்த காலம். நான் எங்கள் ஊரின் எக்ஸ்சேஞ்ச்க்கு ஃபோன் செய்து தஞ்சாவூர் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச்சின் எண்ணை வாங்கிக் கொண்டேன். அங்கு ஃபோன் செய்தேன். 

‘’சார் வணக்கம் சார் . எனக்கு தஞ்சாவூர் எஸ். பி ஆஃபிஸ் , கலெக்டர் ஆஃபிஸ் நம்பர் வேணும். ‘’எண்கள் கிடைத்தன. 

முதலில் எஸ். பி ஆஃபிசுக்கு ஃபோன் செய்தேன். 

மூன்றாவது ரிங்கில் ஃபோனை எடுத்தார்கள். 

’’வணக்கம் சார். அதாவது, கவர்மெண்ட்  புயலால நாலு மாவட்டத்துக்கு லீவு சொல்லியிருக்காங்க. ஆனா  ‘’-----------------’’ காலேஜ் இன்னைக்கு எக்ஸாம் நடத்துறாங்க.’’

ஃபோனை எடுத்தவர் சிறிது யோசித்தார். ‘’இது எஸ். பி ஆஃபிஸ். நீங்க கலெக்டர் ஆஃபிசுக்குத்தான் ஃபோன் செய்யணும்.’’

‘’உண்மை தான் சார். ஆனா இது லா அண்ட் ஆர்டர் இஷ்யூவும் கூட. அந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் பக்கத்துல இருக்கற மாவட்டங்கள்ல இருந்தும் அங்க வந்து படிக்கறாங்க. அவங்க காலேஜ் கிளம்பி வந்து அவங்களுக்கு எதாவது ஆச்சுன்னா அது பெரிய விஷயமாயிடும் சார்’’

ஃபோனை எடுத்தவர் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். 

‘’நீங்க எஸ். பி க்கு இப்படி ஒரு கால் வந்ததுன்னு இந்த விஷயம் பத்தி இன்ஃபார்ம் பண்ணிடுங்க.’’

அவர் ஒரு யோசனையுடன் சரி என்று சொல்லி விட்டார். 

மாணவனிடம் , ‘’தம்பி ! நீ என்ன பண்ற தஞ்சாவூர்ல இருக்கற உன் ஃபிரண்ட்ஸ் ரெண்டு மூணு பேருக்கு ஃபோன் செஞ்சு ஹெட் ஆஃப் த டிபார்ட்மெண்ட்க்கு ஃபோன் பண்ணி வெளியூர்ல உள்ள ஸ்டூடண்ட்ஸ் வந்து சேர ரயிலோ பஸ்ஸோ கிடையாது. எனவே வெளியூர் ஸ்டூடண்ட்ஸ் நல்லதுக்காக எக்ஸாம் நடத்தக் கூடாதுன்னு ரெக்வெஸ்ட் பண்ணச் சொல்லு’’

‘’ஸ்டூடண்ட்ஸ்க்கு அதெல்லாம் பழக்கம் இல்லன்ணன்.’’

‘’இந்த மாதிரி ஒரு சிக்கல்ன்னு இன்ஃபார்ம் பண்ணாதான் நிர்வாகத்துக்கு தெரியும்.’’

‘’நானே ஃபோன் பண்ணட்டுமா?’’

‘’ நீ பண்ணக் கூடாது. அங்க இருக்கறவங்க தான் பண்ணனும்’’

மாணவன் தஞ்சையில் உள்ள தன் சக மாணவர்களுக்கு ஃபோன் செய்தான். 

அந்த இடைவெளியில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். 

பாதி கோப்பை அருந்தியிருந்த நிலையில் கலெக்டர் ஆஃபிஸுக்கு ஃபோன் செய்தேன். ரிங் ஆகிக் கொண்டிருந்தது. யாரும் எடுக்கவில்லை. 

எஸ். பி ஆஃபிசுக்கு ஃபோன் செய்தேன். 

‘’சார்! கலெக்டர் ஆஃபிசுக்கு ஃபோன் செஞ்சன். யாரும் எடுக்கல. எனக்கு கலெக்டரோட ஃபஸ்ட் பி.ஏ செல் நம்பர் வேணும். அந்த நம்பர் கொடுங்க’’

ஃபோனை எடுத்தவர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். 

‘’சார் ! கொஞ்சம் ஹெல்ப்  பண்ணுங்க. உங்க ஹெல்ப் ரொம்ப முக்கியமானது. ஸ்டூடண்ட்ஸ்ஸுக்காக’’

‘’இல்ல . ஆஃபிஸ்ல நாங்க இப்ப மினிமமாத்தான் இருக்கோம். எங்க டிபார்ட்மெண்ட் ஸ்டாஃப் நம்பர் இருக்கும். ஆனா கலெக்டர் ஆஃபிஸ் ஸ்டாஃபோட நம்பர் இருக்குமான்னு தெரியலை. அதான் யோசிக்கறன்’’

‘’நான் ஒரு வழி சொல்றன். உங்க மைக்ல கலெக்டரோட ஃபஸ்ட் பி.ஏ நம்பர் வேணும்னு சொல்லுங்க. யாராவது ஒருத்தர் கொடுத்துடுவாங்க.’’

அவர் மௌனம் காத்தார். 

‘’மாணவர்களோட நன்மைக்காக சார்’’

’’சரி . நான் டிரை பண்றன்.’’

மாணவன் என்னிடம் ‘’அண்ணன் ! என்ன அண்ணன் என்னென்னமோ பண்றீங்க. ?’’

‘’ஒன்னும் பண்ணல. சாதாரணமா நாலு ஃபோன் தான் பண்றன்’’  

பத்து நிமிடம் கழித்து எஸ். பி ஆஃபிசுக்கு ஃபோன் செய்தேன். 

அவரிடம் கலெக்டர் ஃபஸ்ட் பி.ஏ எண் வந்து சேர்ந்திருந்தது. 

எண்ணைப் பெற்றுக் கொண்டு . ‘’சார் உங்க பேர் என்ன? இஸ்யூ சால்வ் ஆனதும் உங்களுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்றோம்’’

அவர் பெயரைச் சொன்னார். 

‘’இந்த அளவுக்கு ஹெல்ப் பண்ணனும்னா அதுக்கு ஒரு பெரிய மனசு வேணும். ரொம்ப தேங்க்ஸ்’’

‘’பரவாயில்லைங்க’’

தஞ்சாவூர் மாணவர்கள் ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட்டுக்கு ஃபோன் செய்து பேசி இருந்தார்கள். அவர்களுடைய பதில் வந்தது. 

‘’அண்ணன் ! இவ்வளவு முயற்சி செஞ்சும் ஹெச். டி எக்ஸாம் உண்டுன்னு சொல்லிட்டார் அண்ணன். தஞ்சாவூர்ல மழை இல்லையாம்’’

அப்போது காலை 6.45 ஆகி விட்டது. 

கலெக்டர் ஃபஸ்ட் பி. ஏ வுக்கு ஃபோன் செய்தேன். 

‘’ சார் ‘’--------------’’ காலேஜ் இன்னைக்கு கவர்மெண்ட் இன்ஸ்ட்ரக்‌ஷன் தாண்டி எக்ஸாம் நடத்துறாங்க. நீங்க அந்த காலேஜ் ரெஜிஸ்ட்ரார்கிட்ட பேசி எக்ஸாம் கேன்சல் பண்ண சொல்லுங்க’’

‘’நான் இப்ப அதிராம்பட்டினத்தில கலெக்டரோட இருக்கன். ராத்திரி முழுக்க நாங்க தூங்கலை. சைக்ளோன் ஒர்க். தஞ்சாவூர் போக காலைல பத்து மணி ஆயிடும். ‘’

‘’எக்ஸாம் காலைல 9 மணிக்கு சார். வெளியூர் ஸ்டூடண்ட்ஸ்லா வர முடியாது. அவங்களுக்கு டிஸ்டிங்ஷன் மிஸ் ஆகும்’’

‘’இப்ப என்ன செய்யணும்னு சொல்றீங்க?’’

‘’ரிஜிஸ்ட்ரார்ட்டயாவது கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாம் கிட்ட யாவது பேசுங்க. நீங்க பேசுனா விஷயம் நடக்கும்’’

’’அரைமணி நேரம் கழிச்சு எனக்கு ஃபோன் செய்ங்க’’

அவர் சொன்னவாறே நான் செய்தேன். 

‘’ரிஜிஸ்ட்ரார் கிட்ட பேசிட்டன். இன்னைக்கு எக்ஸாம் கேன்சல் பண்றன்னு சொல்லிட்டாங்க. ‘’

‘’ரொம்ப நன்றி சார்’’

மாணவன் எனக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றான். வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் வீட்டுக்குள் மழை பெய்தது போல் இருந்தது. நான் குளித்து விட்டு ஆசுவாசமானேன். 

11 மணிக்கு மாணவன் சோகமாகத் திரும்பி வந்தான். 

‘’அண்ணன் ! 9 மணிக்கு எக்ஸாம் நடந்திருக்கு அண்ணன். தஞ்சாவூர்ல மழை இல்லன்னு சொல்றாங்களாம்’’

மாணவனை நடந்த சம்பவங்களை விளக்கி உயர்கல்வித் துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னேன். அதனை தபால் ஆஃபிஸ் சென்று அனுப்பி விட்டு வந்தோம். 

9 மணிக்குத் திட்டமிட்ட பரீட்சை மட்டும் நடந்திருக்கிறது. மற்ற பரீட்சைகள் அனைத்தும் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. அந்த 9 மணி பரீட்சையையும் எழுத முடியாதவர்களுக்கு தனியாக ஒரு தேர்வு நடத்தப்பட்டது. என் நண்பன் அதில் தேர்வு எழுதி விட்டான். அவனுடைய டிஸ்டிங்ஷனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

சில நாட்கள் கழித்து அந்த மாணவனை வீட்டுக்கு வரச் சொன்னேன். 

‘’நான் சொல்றத கவனமா கேட்டுக்க. நாம  பண்ண முயற்சில அன்னைக்கு உங்க காலேஜ்ல  இருந்த நிறைய எக்ஸாம் கேன்சல் ஆயிடுச்சு.  9 மணிக்கு நடந்த எக்ஸாமும் ரீ எக்ஸாம் வச்சாச்சு. ஆனா நாம நடந்ததை புகாரா அனுப்பிட்டோம். அதாவது நீ அனுப்பிட்ட. மேலேயிருந்து காலேஜ்ல எக்ஸ்பிளனேஷன் கேப்பாங்க. அவங்களுக்கு விளக்கம் கொடுக்கணும். அந்த விளக்கத்தோட காப்பியை உனக்கும் தருவாங்க. அப்ப நகல் பெற்றுக் கொண்டேன்னு கையெழுத்து போடச் சொல்லுவாங்க. அந்த பேப்பரை படிச்சுப் பாத்துட்டு கையெழுத்து போடு’’ மாணவனிடம் சொன்னேன். 

மாணவன் ஒருநாள் வகுப்பில் இருந்திருக்கிறான். பேராசிரியர் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். பதிவாளர் அலுவலகத்திலிருந்து ஊழியர் வந்து மாணவரை பதிவாளர் அழைப்பதாக அழைத்திருக்கிறார். பேராசிரியர் ஊழியரிடம் என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். கல்லூரி பற்றி இந்த மாணவன் புகார் அனுப்பியிருக்கிறான் ; அது தொடர்பாக என்று ஊழியர் பதில் சொல்லியிருக்கிறார். 

‘’நோ நோ நீங்க வேற யாரையோ கூப்பிட இவனைக் கூப்பிடறீங்க. ஹீ இஸ் வெரி பொலைட் அண்ட் கொயட். இந்த மாதிரி விஷயம்லாம் இந்த பையன் செய்ய மாட்டான்’’ பேராசிரியர் உறுதியாகக் கூறியிருக்கிறார். 

மாணவன் ‘’நான் தான் சார் புகார் அனுப்பினேன்’’ என்று சொன்னதும் அங்கே குண்டூசி கீழே விழும் ஓசை கேட்குமளவு அமைதி. 

ஊழியருடன் பதிவாளர் அறைக்குச் சென்று உறுதியான உடல்மொழியுடன் நின்றிருக்கிறான். 

‘’நீங்க தான் புகார் அனுப்பினதா?’’

‘’ஆமாம் சார். ‘’

‘’இதுல ஒரு கையெழுத்து போடுங்க.’’ என்று ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். மாணவன் அதை வாசித்திருக்கிறான். ‘’உங்களுக்கு ஒரு காப்பி கொடுப்போம்’’. பதிவாளர் கூறியிருக்கிறார். 

‘’எந்த பேப்பரா இருந்தாலும் வாசிச்சிட்டுதான் கையெழுத்து போட முடியும் சார்’’

வாசித்து விட்டு கையொப்பமிட்டிருக்கிறான். 

‘’இப்ப சந்தோஷம் தானா?’’

‘’கவர்மெண்ட் அனௌன்ஸ் செஞ்சும் டிஸ் ஒபே செஞ்சு காலேஜ் வச்சா அந்த காலேஜ்ஜுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் ஃபைன் கட்டணும்னு கவர்மெண்ட் நார்ம்ஸ். அது நடந்திருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும் சார்’’ என்று கூறி விட்டு வந்து விட்டான். 

அன்று மாலை என்னைச் சந்தித்து ‘’அண்ணன் ! நாம பேசிட்டு இருந்த மாதிரி இப்ப சந்தோஷமான்னு ரிஜிஸ்ட்ரார் கேட்டாரு. நான் நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லிட்டன் அண்ணன்’’ என்றான்.