Thursday 19 May 2022

பொறுப்பு

பூர்வீக சென்னைவாசியான எனது நண்பர் சென்னையில் வங்கி அதிகாரியாக இருக்கிறார்.  அவருடைய தந்தை மாநில அரசில் அதிகாரியாக முக்கியப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். நண்பரும் அவரது தந்தையும் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்கள். நேற்று நண்பர் அலைபேசியில் அழைத்து தனது தந்தை அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினராகச் சேர்ந்திருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார். 

நண்பரிடம் ஒரு விஷயத்தை மட்டுமே நான் சொன்னேன். இந்திய அரசியல் சட்டம் புனிதமானது. அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் நாட்டின் எளிய மக்களுக்கு அரசின் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எளிய மக்கள் முன்னேற்றத்துக்கு அரசாங்கம் அரணாக இருந்து உதவ வேண்டும் என்பதற்காகவுமே முக்கியத்துவம் அளித்தனர். நம் நாட்டின் அரசியல் சட்டம் குடிமக்களுக்கு என கடமைகளை வகுத்துள்ளது. அந்த கடமைகளில் உறுதியாக இருக்கும் தார்மீகத் தன்மை அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது. இங்கே இயங்கும் அரசியல் கட்சிகள் அனைத்துமே இந்திய அரசியல் சாசனம் என்னும் மகத்தான ஒன்றினை அடித்தளமாகக் கொண்டவையே. சமூகத்தின் குடிமைப் பண்பை  உயர்த்துவதற்கு தன்னால் முடிந்த அளவு முயல்வதே  எந்த ஒரு அரசியல் கட்சி உறுப்பினருக்கும் இருக்கும்  முக்கிய பொறுப்பு ஆகும். 

இதனையே நண்பரின் தந்தைக்கு எனது செய்தியாக நண்பரிடம் சொன்னேன்.