Saturday 21 May 2022

வரலாற்றின் குற்றவாளிகள்

முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. ராஜிவ் காந்தி 21.05.1991 அன்று கொல்லப்பட்ட போது எனக்கு பத்து வயது. தமிழ்நாட்டு மக்கள் ராஜிவைக் கொன்றவர்களை மன்னிக்கவேயில்லை. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இன்று வரை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அடையும் துன்பங்கள் அனைத்தும் மிகத் தீவிரமானது அந்த படுகொலைக்குப் பின்னால் தான். சாமானிய மக்கள் திரள் ஒரு விஷயத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறார்கள் - எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதை எவராலும் முழுமையாக அறுதியிட்டுக் கூறி விட முடியாது. கார்ல் மார்க்ஸ் ஒருமுறை கூறினார். ‘’The jury has the supreme power but they have to face the court of public opinion'' என்று. தமிழ்நாட்டின் சாமானிய மக்களுக்கு விடுதலைப் புலிகள் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான எந்த விஷயத்தையும் செய்யப் போவதில்லை என்பதை அவர்கள் உள்ளுணர்வால் எப்படியோ தெரிந்து வைத்திருந்தார்கள். எனவே தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இன்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் மட்டுமே விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை ஆதரித்து வந்தனர். 

ராஜிவைக் கொல்ல முடிவெடுத்தது விடுதலைப் புலிகள் செய்த பெரும் பிழை. அந்த முடிவு ஒரு அரசியல் தற்கொலை. அவர்களுடைய அரசியல் முதிர்ச்சியின்மையை தமிழ்நாட்டுக்கு வெளிக்காட்டிய செயல். இலங்கையில் அவர்கள் கொன்று குவித்த அரசியல் தலைவர்கள் போல அவர்கள் அதை எண்ணியிருக்கக் கூடும். உலக அரசியல் அரங்கில் இலங்கைத் தமிழ் மக்கள் நிராதரவான நிலைக்கு ஆளானதற்கு அதுவே காரணமானது. அந்த முடிவால் அரசியல் ரீதியான எந்த பயனும் அவர்கள் அடையவில்லை என்பதை காலம் நிரூபித்தது. அப்போது அனைத்துமே கை மீறி சென்றிருந்தது. 

உலகெங்கும் சாமானிய மக்கள் அமைதியான சூழ்நிலையையே விரும்புகிறார்கள். போரை விரும்பும் சாமானியர்கள் என எவரும் எங்கும் இல்லை. விடுதலைப் புலிகள் சாமானியர்கள் மேல் போரைத் திணித்தனர். சாமானியர்களிடமிருந்து ‘’வரி’’ என்ற பெயரில் நிதி திரட்டி அந்த பணத்தை போதை மருந்து கடத்தலுக்கும் ஆயுதக் கடத்தலுக்கும் பயன்படுத்தி அதன் மூலம் கிடைத்த பெரும் தொகை மூலம் பல ஆண்டுகள் யுத்தத்தை நடத்தினர். இந்த உண்மையை தமிழக ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் வெவ்வேறு சொற்களில் மூடி மறைத்தனர். விடுதலைப் புலிகள் தலைமையின் அகங்காரத்துக்காக லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் பலியானார்கள். இது புதிதல்ல. உலகில் சர்வாதிகாரிகளால் நிகழ்ந்த சாவின் எண்ணிக்கையை கோடிக்கணக்கில் மட்டுமே கூற முடியும்.  

இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் போல இலங்கைத் தமிழ் மக்களுக்கு பயனளிக்கும் இன்னொரு விஷயம் இல்லை. தங்கள் சுயலாபத்துக்காக அதனை எதிர்த்த அனைவரும் வரலாற்றின் குற்றவாளிகள்.