Tuesday 24 May 2022

கவி

கம்ப ராமாயணத்தில் ஓர் இடம். 

கடலில் சேது எழுப்பி வானர சேனை இலங்கையை அடைகிறது. இலங்கை வந்தடைந்த பின்னரும் இராவணன் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டால் மன்னிக்க இராமன் தயாராக இருக்கிறார். இதனை ஒரு தூதன் மூலம் தெரிவிக்க இராமன் எண்ணுகிறார். யாரைத் தூதனாக அனுப்பலாம் என்று சிந்திக்கிறார். மீண்டும் அனுமனை அனுப்பினால் அவன் ஒருவனே வானர சேனையில் பேராற்றல் கொண்டவன் என்பதாக அர்த்தமாகும் ; எனவே இங்கே அனுமனை ஒத்த மாவீரர்கள் பலர் உண்டு என்பதையும் குறியீட்டுரீதியில் காட்ட வேண்டும் என இராமன் எண்ணி அங்கதனை தூதனாக அனுப்பலாம் என பரிந்துரைக்கிறார் இராமன். அனைவரும் ஏற்கின்றனர். 

அப்போது அங்கதன் எண்ணியதாக கம்பன் கூறுவது : 


பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் படர்வதே போல்,

வீரன் வெஞ் சிலையில் கோத்த அம்பு என, விசையின் போனான்,

“மாருதி அல்லன், ஆகின், நீ ‘எனும் மாற்றம் பெற்றேன்;

யார் இனி என்னோடு ஒப்பார்? ‘ என்பதோர் இன்பம் உற்றான்.


(ஸ்ரீராமனை நிலத்தில் விழுந்து வணங்கி சிம்மம் ஒன்று வானில் அம்பெனப் பறப்பது போல் இலங்கைக்கு விரைந்தான் அங்கதன். அப்போது சிறுவனான தான் ‘’மாருதிக்கு மாற்றாகும் திறன் கொண்டவன்’’ என இராமனால் நினைக்கப்பட்டதால் இதை விடப் பெற என்ன நிலை இருக்க முடியும் என்று அங்கதன் எண்ணினான்)

அதன் பின்னர் நீண்ட நெடிய யுத்தம் முடிந்து ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நிகழ்கிறது. 


இது புகழ் பெற்ற பாடல்


அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,

பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுேளார் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.


இந்த பாடலில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தின் போது அனுமன் அரியணை தாங்குவதை முதலில் கூறுகிறார். அதன் பின்னர் உடனே அங்கதன் உடைவாள் ஏந்துவதைச் சொல்கிறார். 

நுண்ணினும் நுண்ணியது கவி உள்ளம்.