Friday, 6 May 2022

விதியும் மதியும்

உலகம் எளிய குடிமக்களால் ஆனது. சாமானியர்களான அவர்களே இன்றைய தேதிக்கு 700 கோடி எண்ணிக்கைக்கு மேல் இருக்கிறார்கள். உலகின் ஒட்டு மொத்த அரசாங்கங்களின் அதிகாரிகளாக ஊழியர்களாக பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்த எண்ணிக்கையில் ஒரு சதவீதத்துக்கும் கீழே தான் இருக்கிறார்கள்.  அரசாங்கங்கள்தான் விதிகளை உருவாக்குகின்றன. அவற்றை உருவாக்குபவர்களே அவற்றை உடைப்பவர்களாக இருக்கக் கூடாது. ''The law makers should not be the law breakers''. ஒரு தொழில் முனைவோனாக நான் எப்போதும் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பேன். உலகில் சமயங்கள் தோன்றி 6000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். அரசுகள் உருவாகியும் அதே ஆண்டுகள் இருக்கக் கூடும். சமயங்கள் உருவாக்கியிருக்கும் விதிகளை விடவும் அரசாங்கங்கள் உருவாக்கியிருக்கும் விதிகளை விடவும் வணிக விதிகள் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை எல்லாராலும் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒரு சமயத்தை பின்பற்றுபவர் இன்னொரு சமயத்தை பின்பற்றுவதில்லை. எனினும் வணிக விதிகளை கொள்கை அளவிலேனும் எல்லாரும் ஏற்கிறார்கள். ஒரு ரூபாய் என்பது எல்லாருக்குமே ஒரு ரூபாயே. செல்வந்தருக்கும் அதே மதிப்புதான். ஏழைக்கும் அதே மதிப்பு தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த ரூபாயின் மதிப்பு ஒன்றே. எந்த மொழி பேசுப்வருக்கும் அது சம மதிப்பே கொள்ளும். ரூபாய் தன்னளவில் யாவரையும் சமமாக ஒன்றாகப் பார்க்கிறது. விருப்பு வெறுப்புகள் அதைப் பயன்படுத்துபவர்களுடையவை. தொழில் முனைவோனாக நான் எண்ணுவது சமயத்தின் விதிகளை விட அரசாங்கத்தின் விதிகளை விட வணிக விதிகள் இந்த உலகில் உருவாக்கியிருக்கும் ஒழுங்கு என்பது மிக மிக அதிகம். உலகின் அத்தனை ஒழுங்கீனங்களுக்கும் கூட அதுவே காரணமாகிறது  என்பது ஒரு நகைமுரண்.

என்னுடைய கட்டுமானத் தொழில் என்பதே விதிகளை செயல்படுத்துவது தான். நூல் பிடித்தாற் போல் செய்ய வேண்டிய வேலைகள். ஒரு நாள் என்றால் குறைந்தபட்சம் இவ்வளவு வேலைகள் நடந்திருக்க வேண்டும் . அவ்வாறு நடந்தால் சிறிய அளவிலான லாபம் உறுதி செய்யப்படும். இல்லையேல் நட்டம் உருவாகும். எல்லாம் சரியாக நடந்தால் லாபம். சரியாக நடக்காவிட்டால் நட்டம். விதிகளை முறையாகச் செயல்படுத்துகிறோம் என்ற உணர்வு தான் இயற்கை இடர்களால் ஏற்படும் நட்டங்களிலிருந்து மீண்டு வருவதற்கான தெம்பை அளிக்கிறது. ஏற்ற இறக்கமும் லாப நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம்; அவற்றை இயல்பாக ஏற்க வேண்டும் என்ற நடைமுறை விவேகத்தை தொழில் முனைவோருக்கு வழங்குகிறது. 

அரசாங்க ஊழியர்கள் விதிமீறல் என்ற விஷயத்தை சர்வசாதாரணமாகச் செய்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு விதிகளைச் செயல்படுத்துவதைக் காட்டிலும் அதனை மீறி அதனால் சுயநலம் சார்ந்து பயன் அடைவதில் தான் விருப்பமும் ஆர்வமும் இருக்கிறது. இதன் விரிவாக்கமாக, இந்த அரசு ஊழிய மனோநிலை தங்களுக்கு சாதகமாக விதிகளை உருவாக்கிக் கொள்ளும் நிலைக்கு அவர்களை உந்தி முன்னகர்த்துகிறது. ஆனால் ஜனநாயகத்தில் அரசாங்க ஊழியர்களுடன் அனைத்தும் முடிவடைந்து விடுவதில்லை. அதற்கு மேல் நீதிமன்றம் இருக்கிறது. குடிமை அமைப்புகள் இருக்கின்றன. 

அரசாங்கம் என்பது மக்களின் வரிப்பணத்தால் ஆனது. எந்த அரசாங்க ஊழியரும் தன் சொந்த முதல் போட்டு அரசாங்கத்தை ஸ்தாபிதம் செய்யவில்லை. அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் தேவை ஏற்படின் பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்கள் கையாளும் அரசுப்பணத்துக்கு கணக்கு சொல்ல வேண்டியவர்கள். 

நம் நாட்டின் சட்டம் அரசாங்க ஊழியர்கள் விஷயத்தில் தேவையான கெடுபிடியுடனே இருக்கிறது. பொதுவாக யாரும் அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதில்லை என்பதை சர்க்கார் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் நீதிமன்றத்தை அடிக்கடி நாடாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய இயலாமை அல்ல ; மக்கள் அரசாங்கம் மீதும் அரசாங்க ஊழியர்கள் மீதும் மீண்டும் மீண்டும் வைக்கும் நம்பிக்கையால் தான். இதனை புரிந்து கொள்ள ஒரு நுண்ணுணர்வு வேண்டும். ஒருவரின் நல்லியல்பை மென்மையை அவரின் பலவீனமாக எவரும் புரிந்து கொள்வார் எனில் அவர் அறிவின் பாதைக்கு எதிர் திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறார் என்று பொருள். 

பொது விஷயம் சார்ந்து ஒரு விதிமீறல் என்னுடைய கவனத்துக்கு வந்தது. அதனை நிகழ்த்தியவர் ஒருவர். அடிப்படையில் நான் அரசாங்கம் மீது நம்பிக்கை வைப்பவன். அரசாங்கத்தின் ஊழியர்களில் பத்தில் ஒன்பது பேர் சரியில்லை என்றாலும் சரியாக இருக்கும் ஒருவரின் மேல் அந்த ஒன்பது பேர் செய்யும் தவறுகளின் சுமையை சுமத்தக் கூடாது என்றும் அரசாங்கத்தில் ஒருவரைச் சந்திக்கும் போது புதிய ஒரு மனிதரைச் சந்திக்கும் போது நாம் எந்த நல்லெண்ணத்தின் சலுகையை அவருக்கு வழங்குகிறோமோ அதனை வழங்க வேண்டும் என்று எண்ணுபவன். நான் மட்டுமல்ல பொதுமக்களில் பலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். உண்மையில் இது ஒரு காந்திய வழிமுறை. எந்த மனிதருக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன் நான். 

பொது விஷயம் ஒன்றில் ஒரு தவறு நடந்தது. தார்மீகப் படியும் சட்டப்படியும் அது பெரிய தவறு. எவரும் தகவல் தெரிவிக்கும் முன்னரே அரசு அதிகாரிகள் அதன் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து நினைவூட்டல்கள் அளிக்கப்பட்டன. தவறு இழைத்தவருக்கு உதவ அது தொடர்பான தொடக்க நிலை ஊழியரிலிருந்து மேல்நிலை அதிகாரிகள் வரை முடிவு செய்து நிகழ்வுகள் நடந்தன. நடந்த ஒரு தவறுடன் இத்தனையும் சேர்ந்ததால் அது இன்னும் அடர்த்தியானது. அந்த விஷயத்தில் அவருக்கு உதவிய ஊழியர்களும் அதிகாரிகளும் அந்த விஷயத்துடன் இணைந்து அதன் தன்மையை மேலும் தீவிரமாக்கினர். காலத்தைக் கடத்தி விட்டால் இந்த விஷயத்திலிருந்து தப்பி விடலாம் என்று தவறு செய்தவர்களும் அவருக்கு உடந்தையாயிருந்தவர்களும் எண்ணினர். உண்மையில் காலம் கடத்தியது அவர்கள் மீதான் பிடியை மேலும் இறுக்குகிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தவறிழைத்த ஒருவருடன் அவருக்கு உடந்தையாயிருந்த சிலரும் இந்த விஷயத்தில் சிக்கக் கூடும்.