பாரதியார் பராசக்தியிடம் காணி நிலம் வேண்டும் என்று கேட்டார். அந்த காணி நிலத்தில் என்னென்ன இருக்க வேண்டும் என்று அவருக்கு பல விருப்பங்கள் இருந்தன. எனக்கும் காணி நிலம் குறித்து சில விருப்பங்கள் இருக்கின்றன! காணி நிலம் என்பது 1.3 ஏக்கரைக் குறிக்கும். ஒரு ஏக்கரை விட சற்று கூடுதல். இதனை ஓர் நுண் அலகாகக் கொள்ள முடியும். இந்தியா 2.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியை குறு விவசாயி என்கிறது. காணி நிலம் வைத்திருப்பவர் அத்தகைய அளவீட்டின் படி குறு விவசாயியே.
நுண் அலகு என்னும் கருதுகோள் அறிவியலில் முக்கியமானது. அளவிடப் பெரியவற்றை ஒரு நுண் அலகாக அல்லது சிறு சிறு நுண் அலகுகளாகப் பிரித்துக் கொண்டு அதனை முழுமையாக அறிவதன் மூலம் நுண் அலகைப் போல் பல்லாயிரம் பல லட்சம் மடங்கு பெரிதாக இருப்பவை குறித்த அறிதலை அடைய முடியும். ஆங்கிலத்தில் இதனை ‘’Micro'' and ''Macro'' என்பார்கள். இவ்வாறான முறை உயிரியல், மருத்துவம், பொருளாதாரம், சமூகவியல், கலை, தொழில்நுட்பம் என பல துறைகளில் உள்ளது. ஐரோப்பாவில் ‘’Small is beautiful'' என்று ஒரு பார்வை உண்டு. நாம் விவசாயத்தில் அதனை யோசித்துப் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு காணி நிலத்தை - அதாவது 1.3 ஏக்கரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். இப்போது நமது பரிசோதனைக்கு 1.3 ஏக்கர் நிலம் உள்ளது. எனினும் நாம் இந்த நிலத்தில் செய்ய உள்ள ஆய்வு அல்லது முயற்சி விவசாயம் மட்டும் தொடர்பானது இல்லை. அதனுடன் பொருளியலும் இணைந்துள்ளது. எனவே அதனை விவசாய முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம். பொருளியல் முயற்சியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அந்த ஒரு காணி நிலம் விவசாயிக்கு உச்சபட்ச வருமானம் தரக்கூடிய சாத்தியம் கொண்டதாக இருக்க வேண்டும். அதன் வரப்புகள் ஒரு வயல் வரப்பு எத்தனை அடி நீளம் கொண்டதாக இருந்தால் உபயோகமாக இருக்குமோ அத்தனை அடி நீளம் கொண்டிருக்க வேண்டும். அந்த வயலில் நெல் பயிரிடுகிறோம் என்றால் அந்த மண்ணில் இருக்க வேண்டிய நுண் ஊட்டங்களுக்கு எத்தன்மையான உரங்கள் அளிக்கப்பட்டன என்பது அதன் அளவு மற்றும் செலவுடன் குறித்துக் கொள்ளப்பட வேண்டும். இயற்கை விவசாயம் எனில் அதில் இடப்பட்ட மண்புழு உரம் , ஜீவாமிர்தம் ஆகியவற்றின் அளவையும் பொருள் மதிப்பையும் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த காணி நிலத்துக்கு எவ்வள்வு விதை நெல் தேவைப்பட்டது. ஒற்றை நாற்று முறை எனில் எத்தனை நாற்றுகள் நடப்பட்டன என அனைத்தும் எண்ணிக்கைக்குள் வர வேண்டும். குருவிகள் அமர ஏற்பாடு எத்தனை சதுர அடிக்கு இத்தனை எனத் தேவையோ அதுவும் அமையப் பெற வேண்டும். இரவுப் பறவைகள் அமர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
நெல் வயலின் வரப்பில் பயிரின் வளர்ச்சியைத் தடுக்காத நிழல் கட்டாத உயரமாக வளரும் தேக்கு மரங்கள் வைக்கப்பட வேண்டும். அவை முறையாக கவாத்து செய்யப்பட வேண்டும். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையில் இருக்கும் வரப்பின் மேற்பரப்பில் பச்சைப்பயறு , காராமணி போன்ற பருப்பு வகைகள் விதைக்கப்பட வேண்டும். அந்த நிலத்தில் செய்யப்படும் ஒரு ரூபாய் செலவு கூட ஆவணப்படுத்தப் பட வேண்டும். சித்திரை மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களில் ஓர் ஆண்டில் நெல் மூலம் கிடைத்த வருவாய் என்ன உளுந்து மூலம் கிடைத்த வருவாய் என்ன வரப்பில் பயிரிடப்படும் பருப்பு மூலம் கிடைக்கும் வருவாய் என்ன என்பது ஆவணப்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வயலில் உள்ள மண்ணில் எவ்வாறு நுண்ணுயிரிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதும் குறிக்கப்பட வேண்டும். அந்த வயலில் விவசாயம் மூலம் வருவாய் கிடைக்க சாத்தியம் உள்ள அத்தனை வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த ஒரு காணி நிலத்தில் விவசாயம் மூலம் லாபம் என்ன கிடைக்கிறது என்பது வரவு செலவுடன் அட்டவணைப்படுத்தப்பட வேண்டும்.