Sunday, 5 June 2022

ஒரு சிறுவனும் ஒரு சலூனும்

சிறுவனாக இருந்த போது அப்பா சலூனுக்கு அழைத்துச் செல்வார். பின் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பின் அப்பா அழைத்துச் செல்லும் சலூனுக்கு சைக்கிளில் தனியாக செல்ல ஆரம்பித்தேன். எத்தனையோ சலூன்கள் இருக்கின்றன ; ஏன் அப்பா செல்லும் சலூனுக்கே நாமும் செல்ல வேண்டும் என பலமுறை யோசித்திருக்கிறேன். நாமாக புதிதாக ஒரு சலூனுக்குச் சென்றால் அப்பாவுக்கு தெரியுமா என பல சாத்தியக்கூறுகளை பரிசீலித்துப் பார்த்து  ஒருமுறை நானாக ஒரு புதிய சலூனுக்கு சென்று விட்டேன். அப்பா செல்லும் சலூன் கடைக்காரர் பல வருடங்களாகத் தெரிந்தவர். இப்போது சென்றிருக்கும் கடை புதிது. ஒரு புதிய இடத்தில் உணரும் அசௌகர்யத்தால் என்ன பாணியில் முடி வெட்ட வேண்டும் என்று சொல்வதில் சிறு தயக்கம் ஏற்பட்டு சொல்லாமல் இருந்து விட்டேன். அந்த சலூன் இளைஞர்கள் அதிகம் குழுமுவது. அவர் ஒரு விதமாக முடி வெட்டி விட்டார். வீட்டுக்கு வந்தேன். வீட்டில் அனைவருமே என்னைப் பார்த்ததும் கேட்ட கேள்வி : முடி வெட்டினாயா இல்லையா? வெட்டிக் கொண்டேன் என்று பதில் சொன்னேன். தலைமுடி குறைக்கவேயில்லையே என்றார்கள். வழக்கம் போல் தான் வெட்டிக் கொண்டேன் என்றேன். மீதி பணம் கொடுத்தேன். புது சலூனில் வழக்கமாக ஆகும் தொகையை விட ரூ. 20 கூடுதல். மீதி பணம் ஏன் குறைகிறது என்று கேட்டார்கள். நான் மௌனமாக இருந்தேன்.இதில் ஆச்சர்யம் என்ன என்றால் இத்தனை கேள்விகளையும் அம்மாவே கேட்டு விட்டார்கள். அம்மாவுக்கு இது தெரிந்தால் அப்பாவுக்கு நிச்சயம் தெரிந்து விடும். என்ன செய்வதென்று தெரியவில்லை. குளித்து விட்டு வந்தேன். அன்று மாலை அப்பாவைப் பார்த்த போது அப்பா என்னிடம் ,’’ஏன் இன்னும் முடி வெட்டிக் கொள்ளாமல் இருக்கிறாய்? ‘’ என்று கேட்டார்கள். நான் மௌனமாக இருந்து விட்டேன். ஓரிரு நாள் கழித்து அம்மா அப்பாவிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். அப்பா என்னிடம் , ‘’வழக்கமாக செல்லும் சலூனை ஏன் மாற்ற வேண்டும் என்று நினைத்தாய்?’’ என்று கேட்டார்கள்.  எல்லா சிறுவர்களையும் போல ஒரு ஆர்வத்திலும் துடிப்பிலும் தான் புதிதாக ஒன்றைச் செய்து பார்த்தேன்.என்றாலும் அதைச் சொல்ல தயக்கம். என்ன சொல்லலாம் என்று யோசித்தேன். நான் புதிதாக ஒன்றை முயன்று பார்க்க ஒரு காரணமும் இருந்தது. நான் வழக்கமாக செல்லும் சலூனில் நடுத்தர வயது உள்ளவர்களும் முதியவர்களும் தான் அதிகம் வருவார்கள். நான் காத்திருந்தால் சிறுவன் தானே என்று கடைக்காரரிடம் சொல்லி  வரிசையை அனுசரிக்காமல் அவர்கள் முன்னால் முடி வெட்டிக் கொண்டு சென்று விடுவார்கள். அதன் பின்னர் தான் எனது முறை வரும். இவ்வாறு சில முறை நிகழ்ந்து விட்டது. நான் அதனை காரணமாகக் கூறி ‘’First come ; First serve'' என்பது தானே முறை . என்னை எல்லாரும் சிறுவன் என்பதால் வரிசை முறையை அனுசரிக்காமல் எனக்கு பின்னால் வந்தவர்கள் என்னைக் காக்க வைத்து விட்டு முன்னால் போகிறார்கள். நானும் கஸ்டமர் தான் . நானும் பணம் கொடுக்கிறேன். என்று அப்பாவிடம் கூறினேன். அப்பா பின்னர் பொறுமையாக இவ்வாறு நடந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டார். அது என்னை மேலும் சிறுவனாகக் காட்டும் என்பதால் சொல்லவில்லை. ஆனால் அந்த பதிலைக் கூறாமல் அமைதியாக இருந்தேன். ’’அவர் நல்ல மனிதர் . உனக்கு இப்படி ஒரு புகார் இருந்தால் என்னிடம் கூறியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவரிடமே கூட கூறியிருக்கலாம். அவருக்கு உன் முறையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்காது. நீ பள்ளி விடுமுறை நாட்களில் தான் சலூனுக்குச் செல்கிறாய். 30 , 40 நிமிடம் தாமதமானால் கூட உனக்கு பாதிப்பு இல்லை என்பதால் அவ்வாறு செய்திருப்பார். அதற்காக புதிய சலூன் மாற்ற வேண்டியது இல்லை. இப்போது பார். முடி வெட்டுவதற்கு முன்னால் இருந்ததைப் போல முடி வெட்டிய பின்னும் இருக்கிறது. இந்த மாதிரி முடி வெட்டிக் கொண்டால் இப்போது மாதம் ஒரு முறை சலூனுக்கு செல்கிறாய் ; இனி வாரம் ஒரு முறை செல்வாய் ‘’ என்று அப்பா சொன்னார்.  15 நாள் கழித்து மீண்டும் பழைய சலூனுக்கே சென்றேன். சலூன்காரர் முடி வெட்டத் துவங்கினார். சிறிது நேரத்தில் , ‘’தம்பி ! நாலு நாள் முன்னாடி அப்பா முடி வெட்ட கடைக்கு வந்திருந்தார்கள்.’’ என்று சொல்லி விட்டு வேறு ஏதும் சொல்லாமல் சிரித்தார். நானும் சிரித்தேன். கொஞ்ச நேரம் கழித்து , ‘’மற்றவர்கள் கூட பரவாயில்லை ; தாடி வைத்துக் கொண்டு ஒரு மளிகைக் கடைக்காரர் எப்போதும் கடை திறக்க வேண்டும் ; கடை திறக்க வேண்டும் என்று சொல்லி முன்னால் வந்த என்னைப் பின் தள்ளி விடுகிறார்’’ என்றேன். ‘’அவர் காலைல 7 மணிக்கு கடை திறக்கணும். நான் கடை திறக்கவே 6.30 ஆகிடும். அவர் ஷேவ் செய்து கொண்டு வீட்டுக்குப் போய் குளித்து விட்டு தனது மளிகைக் கடைக்கு வர வேண்டும்.’’  என்று கடைக்காரர் சொன்னார். ‘’முதல் நாள் சாயந்திரமே வந்து ஷேவ் செஞ்சுக்க வேண்டியது தானே?’’ என்று நான் கேட்டேன். ‘’அவர் காலைல 7 மணிக்கு கடை திறந்தால் நைட் 9 மணிக்கு தான் கடையை சாத்துவார். எல்லா நேரமும் கடை தான். காலை டிஃபன் , மதியம் சாப்பாடு எல்லாம் ஹோட்டலில் இருந்து வாங்கி வரச் சொல்லி கடையிலேயே சாப்பிடுவார். இரவு உணவு மட்டும் தான் வீட்டில் ‘’ என்றார் கடைக்காரர். 

இந்த நிகழ்வுக்குப் பின் மேலும் சில ஆண்டுகள் அந்த சலூனுக்கே சென்று வந்தேன். அதன் பின்னர் தான் வேறு சலூனுக்கு மாறினேன். 

பல ஆண்டுகள் கழித்து ‘’சலூன் நூலகங்கள்’’ முன்னெடுப்புக்காக பழைய சலூன்காரரை சந்தித்தேன். ஆண்டுகள் பல ஆகியிருந்ததால் என் முகம் அவருக்கு நினைவில் இல்லை. எல்லா சலூன்களிலும் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போலவே அவரிடமும் ’’சிவில் இன்ஜினியர்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விஷயத்தை எடுத்துச் சொல்லி புத்தகங்களை வழங்கினேன். புறப்படும் நேரத்தில் ‘’என்னை நினைவிருக்கிறதா ?’’ என்று கேட்டேன். அவர் நினைவுபடுத்த முயன்றார். அப்பா பெயரைச் சொன்னேன். அவருக்கு நினைவு வந்து விட்டது. அப்பா இப்போதும் அவருடைய சலூனில் தான் முடி வெட்டிக் கொள்கிறார். ’’சைக்கிள்ல சின்ன பையனா வருவீங்க தம்பி ‘’ என்றார். அவருக்கு நான் ‘’சலூன் நூலகங்கள்’’ விஷயத்தை முன்னெடுப்பது குறித்து மிகுந்த சந்தோஷம். விடை பெற்றுக் கொண்டோம். 

மாரத்தான் ஓட்டத்துக்கான அடிப்படை பயிற்சிகளில் ஒன்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடந்து செல்வது. கால்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்க அது உதவும். இன்று காலை ஷேவ் செய்து கொள்ள சலூனுக்கு நடந்து சென்றேன். பழைய கடைக்காரருக்குப் பின் ஒரு சலூனுக்கு வாடிக்கையாகச் செல்வேன். அவர் கடைக்கு பத்து ஆண்டுகள் சென்றிருப்பேன். அவர் சிங்கப்பூர் சென்று விட்டார். அதன் பின்னர் ஒரு சலூனுக்கு சென்றேன். அது ஒரு ஏழு ஆண்டுகள் இருக்கும். இப்போது செல்லும் சலூன் எட்டு ஆண்டுகள். இன்று நடந்து செல்லும் போது சிறுவனாயிருந்த போது செல்லும் சலூனின் வழியாக நடந்து கொண்டிருந்தேன். அவர் கடை சிறிய கடை. வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. அவர் கடைக்கு சென்றேன். ஷேவிங். நேர்த்தியாக பணியை மேற்கொண்டார். ‘’ உங்களுக்கு வேலை செஞ்சு 25 வருஷம் இருக்குமா?’’ என்றார். யோசித்துப் பார்த்து விட்டு இருக்கும் என்றேன். 

அவர் கடையில் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக வழங்கிய நூல்கள் இருந்தன. வாடிக்கையாளர்கள் புத்தகங்களை எடுத்து வாசிக்கிறார்களா என்று கேட்டேன். பலர் ஆர்வமாக வாசிக்கிறார்கள் என்று சொன்னார். அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களுக்கும் மேலும் சில நூல்களை வழங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். 

பின்குறிப்பு :

அடிக்கடி என்னை வரிசையில் பின் தள்ளி விட்டு முன்னால் சென்று ஷேவ் செய்து கொள்ளும் மளிகைக் கடைக்காரருக்கு பல ஆண்டுகள் கழித்து அவருடைய இல்லத்தை நான் தான் ஒப்பந்த அடிப்படையில் நிர்மாணித்துக் கொடுத்தேன். கட்டுமானத்தில் அவருக்கு மிகவும் திருப்தி. நிறைவுத் தொகையை வழங்க வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய இல்ல கட்டுமானப் பணி துவங்கியதிலிருந்து அவரிடம் கூறாதிருந்த சலூனில் நடந்த நிகழ்ச்சியை அவருக்கு நினைவு படுத்தினேன்.   அவர் ஆச்சர்யப்பட்டார்.