’’காவிரி போற்றுதும்’’ முன்னெடுக்கும் பணிகளை கவனிப்பவர்கள் அதன் குவிமையம் எதை நோக்கி என அறிய முற்படுவதுண்டு. ‘’காவிரி போற்றுதும்’’ மரங்கள் அதிக அளவில் கிராமங்களில் வளர்க்கப் பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்கிறது. கிராம மக்களுக்கு மழைக்காலத்தில் உணவளித்திருக்கிறது. தடுப்பூசி விழிப்புணர்வுக்காக செயலாற்றியிருக்கிறது. குடியரசு தினத்தன்று ஒரு கிராமத்தில் எல்லா வீடுகளும் ஒரு மரக்கன்று நட்டு அன்று மாலை ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு அழைப்பு விடுத்து அதனை முழுமையாக ஒருங்கிணைத்தது. மாவட்டம் முழுக்க எல்லா முடி திருத்தும் நிலையங்களுக்கும் நூல்களை அன்பளிப்பாக அளித்து ‘’சலூன் நூலகங்களை’’ உருவாக்கியது. இதைப் போன்ற மேலும் சில சிறு பணிகளை நடத்தியது.
ஒரே வரியில் கூற வேண்டும் எனில் அதனை ‘’மக்களை இணைத்தல்’’ என்று கூறி விடலாம். ‘’காவிரி போற்றுதும்’’ இந்திய மக்களை உலகின் மாபெரும் பண்பாடொன்றின் சொந்தக்காரர்களாகப் பார்க்கிறது. அவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கலாம் ; பள்ளிக்கூடமே போகாதவர்களாக இருக்கலாம் ; பெரும் நிலச்சுவான்தாராக இருக்கலாம் ; விவசாயக் கூலிகளாக இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்கள் உலகின் ஆகச் சிறந்த பண்பாட்டின் உரிமையாளர்கள்.
அவர்கள் எப்போதெல்லாம் இணைக்கப்பட்டிருக்கிறார்களோ அப்போதெல்லாம் மானுடம் கண்டதில் ஆகச் சிறந்த வாழ்க்கைகள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. அடித்தட்டு மக்களின் தலைவனாக எழுந்தவர் சந்திர குப்த மௌரியர். விவசாயக் குடிகளின் மேம்பாட்டையும் ஆலயப் பணிகளையும் தம் அரசின் சிரம் மேல் கொண்டிருந்த அரசு பிற்காலச் சோழர்களுடையது. ஆநிரை புரக்கும் மக்கள் தம் பண்பாடு காக்க எழுப்பிய அரசே விஜயநகரப் பேரரசு. மலைக்குடிகளின் துணையோடு ஒரு பேரரசு மராத்தியர்களால் உருவாக்கப்பட்டது.
’’மக்களை இணைத்தல்’’ என்பதையே அரசியல் செயல்பாடாகக் கொண்டிருந்தது இந்தியா. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள நேர்ந்த போது ‘’பிரித்து ஆள்தல்’’ என்னும் முறைக்குச் சென்று நம் வளத்தைச் சுரண்டினர். அவர்கள் நாட்டை விட்டு நீங்கிய பின்னும் அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களை அவர்களுக்குப் பின்னால் நாட்டை ஆண்டவர்கள் கைக்கொண்டனர் என்பது நம் துயரம்.
’’சிட்டுக் குருவிகளுக்கு வல்லூறுகளை எதிர்க்கும் ஆற்றலைத் தருவேன்’’ என்றார் குரு கோவிந்த் சிங். எளிய மக்கள் எழுச்சி பெறுவதை ஆன்மீகமான ஒன்றாகக் காண்கிறது இந்திய மரபு. இந்திய ஆன்மீகம் பொருளியல் எழுச்சியை ஆன்ம எழுச்சியின் முதற்படியாகக் காண்கிறது. அவ்வகையில் ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளின் பொருளியல் விடுதலையை சமூக எழுச்சியின் அடிப்படையாகக் காண்கிறது. அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கிறது.
உலகின் தேவைக்கு ஆண்டொன்றுக்கு 2.5 மில்லியன் கன மீட்டர் தேக்கு தேவைப்படுகிறது. நம் நாடு தன் தேவைக்கு தேக்கு மரத்தை மியன்மார்ரிலிருந்தும் ஆஃப்ரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்கிறது. காவிரி டெல்டா பிராந்தியத்தில் தேக்கு மிக நன்றாக வளரக் கூடிய மரம் என்பதால் ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளை தங்கள் நெல்வயலில் சில தேக்கு மரக்கன்றுகளையாவது வளர்க்குமாறு கேட்டுக் கொள்கிறது.
தேக்கு - அதிகமாக கேட்கப்பட்ட வினாக்கள்
1. ‘’காவிரி போற்றுதும்’’ ஏன் தேக்கு மரத்துக்கு முக்கியத்துவம் தருகிறது?
‘’Seeing is believing'' என்று கூறுவார்கள். கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு தேக்கு மரத்தின் தேவை எவ்வாறு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது என்பது தெரியும். சற்று முயன்றால் நம் கிராமங்களில் தேக்கின் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். அதன் பொருளியல் பலன் முழுமையாக விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
2. ‘’காவிரி போற்றுதும்’’ அறிந்திருப்பதை விவசாயிகள் அறிய மாட்டார்களா?
இது ஆழ்ந்து யோசிக்க வேண்டிய கேள்வி. விவசாயத்தின் வரலாறுடன் சமூக வரலாறுடன் இணைந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது. இந்திய நிலத்தில் வேளாண் குடிகளே பேரரசுகள் உருவாக காரணமாக இருந்துள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தங்கள் நிலத்தில் விளைந்த வேளாண் விளைபொருட்களையே அரசுக்கு வரியாக வேளாண் குடிகள் செலுத்தினர். கிராமங்கள் தங்கள் தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்ளும் சுயசார்பு தனமையுடன் விளங்கின. ஆங்கிலேயர்கள் நிலவரியை பணமாக செலுத்த வேண்டும் என்ற முறையை உருவாக்கினர். விவசாயிகளின் வீழ்ச்சி அங்கிருந்து துவங்குகிறது.
பொருத்தமில்லாத ஈவிரக்கமற்ற பிரிட்டிஷ் முறைகள் இந்திய விவசாயிகளின் மனோதிடத்தை வீழ்த்தின. அவர்கள் வறிய நிலைக்குச் சென்றனர். சுதந்திரத்துக்குப் பின் வந்த அரசுகளும் அரசின் இயங்குமுறை குறித்து ஐரோப்பிய மனநிலையே கொண்டிருந்தன.
நாட்டின் தேவை, உலகச் சூழல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு விவசாயத்தை லாபகரமான தொழிலாகச் செய்யும் நிலை விவசாயிகளிடம் வந்து சேரவே இல்லை. செயற்கை உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் எப்போதும் நம்பியிருக்கும் நிலையிலேயே விவசாயிகள் இருக்க நேர்ந்தது.
3. இது நம்புவதற்கு கடினமாக இருக்கிறதே?
நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதில் வேறு சில கூறுகளும் உள்ளன. நாம் பொதுவாக சொன்னாலும் விவசாய நிலம் என்பது நாடெங்கும் ஒரே விதமானது இல்லை. பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயமும் உண்டு. ஆற்றுப்பாசனத்தை நம்பும் விவசாயம் உண்டு. ஏரிப்பாசனம் உண்டு. கடலை ஒட்டியிருக்கும் பகுதிகள் உண்டு. நாம் கூறுவது அந்தத்த பிராந்தியங்களைப் பொறுத்து சிற்சில மாறுதல்களுடன் உண்மை.
4. ''காவிரி போற்றுதும்’’ விவசாயிகளை தேக்கு வளர்க்க சொல்வதால் மாற்றம் உண்டாகுமா?
நிச்சயம் உண்டாகும். பலவிதங்களில் உண்டாகும். முதன்மையாக நாம் அவர்கள் இத்தனை ஆண்டுகள் எதனை தவற விட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். அவ்வாறு கொண்டு வரப்படும் போது அது குறித்து யோசித்து நாம் சொல்வது உண்மை என அவர்கள் உணர்கிறார்கள். இது முதல் படி. அடுத்து, விவசாயிகளின் பொருளியல் விடுதலையை ‘’காவிரி போற்றுதும்’’ ஏன் முக்கியமாக நினைக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் விவசாய முறைகளில் வழக்கமாகச் செய்யப்படும் பூச்சிக்கொல்லி , ரசாயன உரம் போன்ற செலவுகளை எவ்விதம் குறைப்பது என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது.
விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான முழு விளைநிலத்திலும் தேக்கு பயிரிட வேண்டும் என்பது இல்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் 5 சதவீத பரப்பினை ஒதுக்கி அதில் தேக்கு நடலாம். மீதம் உள்ள 95 சதவீத நிலத்தில் தாங்கள் வழக்கமாக செய்யும் பயிரை செய்து கொள்ளலாம்.
5. எல்லா நிலத்திலும் தேக்கு வளருமா?
காவிரி வடிநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேக்கு வளரும். மண் தன்மை சற்று மாறியிருக்கும் பகுதிகளில் குறைந்தபட்சமாக சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால் போதுமானது.
6. விவசாயிகள் இதனை வரவேற்கிறார்களா?
முதலில் விஷயத்தை எடுத்துச் சொல்லும் போது கவனமாகக் கேட்கிறார்கள். நடப்பட்டுள்ள இடங்களை சுட்டிக் காட்டி கூறும் போது நம்பிக்கையுடன் முன்வருகிறார்கள்.
7. விவசாயிகள் தேக்கு நடுவதில் பொதுவாக செய்யும் தவறுகள் என்ன?
ஒரு தேக்கு கன்று நட இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழி எடுக்கப்பட்டு அதில் மக்கிய சாண எரு இடப்பட வேண்டும். இது கன்றின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு மிக முக்கியம். முதல் ஒரு மாதம் தினமும் ஒரு முறையும் அடுத்த ஒரு மாதம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். அதன் பின்னர் குறைந்தபட்சம் வாரம் இரு நாட்கள் தண்ணீர் விட வேண்டும்.
இவ்வளவு கவனம் செலுத்த வேண்டிய இடத்தில் மரம் தானாக வளரும் என விவசாயிகள் இருந்து விடுகிறார்கள்.
‘’காவிரி போற்றுதும்’’ இந்த விஷயத்தில் விவசாயிகளிடம் விழிப்புணர்வை உண்டாக்குகிறது.