Wednesday 22 June 2022

போர்த்தொழில் பழகு

எல்லா சிறுவர்களையும் போல நானும் சிறுவனாயிருந்த போது ஒரு ராணுவ வீரனாக வேண்டும் என்று விரும்பினேன். 

1990ஐ ஒட்டிய ஆண்டு. வி.பி. சிங் நாட்டின் பிரதமராயிருந்த நேரம். காஷ்மீர் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இஸ்ரேல் மாணவர்களை கடத்தி வைத்திருந்த இடத்தில் மாணவர்களை ஒரு அறையில் கை கால்களை கட்டாமல் அறையில் பூட்டி வைத்திருக்கின்றனர். அங்கே காவலுக்கு இருந்த பயங்கரவாதி தனது துப்பாக்கியை அந்த அறையில் வைத்து விட்டு எங்கோ வெளியே சென்ற நேரத்தில் இஸ்ரேல் மாணவர்கள் அந்த துப்பாக்கியை எடுத்து இயக்கி பயங்கரவாதிகளைத் தாக்கி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பினர் என்ற செய்தி நாடெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. இஸ்ரேலில் எல்லா மாணவர்களும் கட்டாயம் அடிப்படை இராணுவப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் ; மேலும் கட்டாயமாக நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியை ஓராண்டுக்கு மேற்கொள்ள வேண்டும். இஸ்ரேல் மாணவர்கள் பெற்ற பயிற்சி பயங்கரவாதிகளை வீழ்த்துவதில் அவர்களுக்கு உதவியிருக்கிறது. இந்த செய்தியை செய்தித்தாள்களில் படித்த போது நம் நாட்டிலும் அவ்வாறான ஒரு ஏற்பாடு இருந்தால் நலமாக இருக்கும் என எண்ணியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  

பூனாவில் தேசிய பாதுகாப்பு அகாடெமி என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் படித்த மாணவர்கள் அதில் சேர விண்ணப்பிக்கலாம். ‘’எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’’ என்ற செய்தித்தாளில் தான் அதற்கான அறிவிப்பு வெளியாகும். நான் தவறாமல் அதனை வாராவாரம் வாங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று காண்பேன். வந்த போது விண்ணப்பித்தேன். ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, அறிவியல் ஆகிய நான்கு தாள்களில் தேர்வு எழுத வேண்டும். சென்னையில் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை மதுரை என இரு இடங்கள் தேர்வு மையங்கள். அந்த தேர்வை 1000 பேர் சென்னையில் எழுதியிருப்போம். அதில் நானும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்னொருவரும் மட்டுமே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். மற்ற அனைவருமே தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இராணுவத்தில் பணி புரிபவர்களின் வாரிசுகள். இரண்டு நாட்கள் அந்த தேர்வு நடந்ததாக ஞாபகம். காலை மதியம் என இரு பிரிவுகளாக நடப்பதால் தேர்வு எழுதும் அனைவருமே ஒரே இடத்தில் காத்திருப்போம். அப்போது தான் அதனை அறிந்தேன். 

தமிழ்நாட்டுப் பள்ளிகளோ கல்லூரிகளோ தேசிய பாதுகாப்பு அகாடெமி, தேசிய கடற்படை அகாடெமி போன்ற கல்வி மையங்களுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. அவை குறித்த தகவல்கள் கூட தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை. 

தேசிய பாதுகாப்பு அகாடெமி பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு நான்கு ஆண்டு பயிற்சி அளித்து இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக உருவாக்கும் பணியை மேற்கொள்கிறது. சென்னையிலும் ஊட்டியிலும் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடெமிகள் இளநிலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தேர்வு வைத்து தேர்வு செய்து பயிற்சி கொடுத்து இராணுவ அதிகாரிகளாக உருவாக்குகிறது. உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் இவை. 

இஸ்ரேலைப் போல நம் நாட்டிலும் அடிப்படை இராணுவப் பயிற்சி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.