Monday, 13 June 2022

திங்கள் வலித்த கால்

களம் புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

-புறநானூறு

திணை : தும்பை \  துறை : தானை மறம்
அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது 

{ போர்க்களத்துக்கு விரைந்து செல்லும் வீரர்களே ! கொஞ்சம் சிந்தியுங்கள். எங்கள் படையில் ஒரு மாவீரன் இருக்கிறான். ஒரு நாளைக்கு எட்டு தேர்களை அனாயாசமாக நிர்மாணிக்கும் தச்சன், ஒரு மாத காலம் முயன்று மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு ஒரு தேர்ச்சக்கரத்தை உண்டாக்கினால் அது எத்தனை வலிமையும் ஆற்றலும் வேகமும் கொண்டிருக்குமோ அத்தகைய திறன் படைத்த மாவீரன் எங்கள் பக்கம் இருக்கிறான்.}

***

நேற்று ஒரு நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர் உள்ளூர்க்காரர். வெளியூரில் ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார். அவர் ஃபோனை எடுத்ததும் ‘’நாம கடைசியா மார்ச் 12ம் தேதி பேசினோம். இன்னையோட சரியா 3 மாசம் ஆகுது’’ என்றார். அவர் தன் கையிலிருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது என்று கேட்டிருந்தார். நான் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்ய சொல்லியிருந்தேன். கொஞ்சம் கூட வந்து உதவுமாறு கேட்டிருந்தார். ‘’அமௌண்ட் டெபாசிட் செய்யணும்னு சொன்னீங்க’’ என்றேன். ‘’டெபாசிட் செஞ்சு மூணு மாசம் ஆகுது’’ . ‘’எதுல செஞ்சீங்க?’’ . ‘’நீங்க சொன்ன மாதிரி போஸ்ட் ஆஃபிஸ்ல தான்’’. ‘’அப்படியா! ரொம்ப சந்தோஷம். ‘’ ‘’உங்களுக்கு சந்தோஷம். ஆனா நீங்க கூட வரலன்னு எனக்கு வருத்தம்’’. நண்பர் சற்று சாந்தமாகட்டும் என்று பொதுவாக சில விசாரணைகளை செய்து விட்டு ஃபோனை வைத்து விட்டேன். அவர் சொன்ன பிறகு தான் யோசித்துப் பார்த்தேன். அந்த நண்பருடன் பேசி மூன்று மாதம் ஆகி விட்டது என. பின்னர் அந்த நண்பருக்கு ஃபோன் செய்து , ‘’ஐ யாம் சாரி ! ஒரு விவசாயிக்காக அவரோட ஃபீல்டுல கொஞ்சம் ஒர்க் பண்ணி கொடுத்தேன். அந்த ஒர்க்ல முழுமையா இன்வால்வ் ஆயிட்டதால நாட்கள் போனதே தெரியலை. நீங்க சொல்லி தான் மூணு மாசம்  ஆச்சுன்னு தெரியுது. ‘’ நண்பரும் விவசாயி. எனவே அது என்ன ஒர்க் என்று கேட்டார். நான் அவருக்கு விளக்கினேன். 

எனது நண்பர் ஒருவர் கட்டுமானப் பொறியாளர். அவரது அலுவலகத்தில் தான் நாளின் பெரும்பொழுது இருப்பேன். அவரது ஊழியர் ஃபோன் செய்தார். ‘’சார் ! என்ன சார் ஆஃபிஸ் பக்கமே வர மாட்டேங்கறீங்க. நீங்க இங்க வந்து இருபது நாள் ஆகுது. சார் விசாரிக்க சொன்னாரு. ஏதும் வருத்தமா சார் ?’’ ‘’நோ நோ . அதெல்லாம் இல்லை. நான் உங்க ஆஃபிஸ் வந்து இருபது நாளா ஆகுது?’’ ‘’ஆமாம் சார் . அதனால தான் ஃபோன் செஞ்சேன். ‘’ ‘’சரி இன்னைக்கு சாயந்திரம் வர்ரேன்.’’ 

இன்னும் பல உள்ளூர் வெளியூர் நண்பர்கள் உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். நான் சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசி மட்டுமே வைத்திருக்கிறேன் என்பதால் நண்பர்கள் பலருக்கு என் மேல் அதிருப்தி. உண்மையில் நான் மானசீகமாக தொலைபேசியின் மனநிலையில் இருப்பவன். தொலைபேசி எளியது ; வசதியானது ; சுதந்திரமானது என்பது எனது எண்ணம் அபிப்ராயம் அனுபவம் என அனைத்தும். அதனை சொன்னால் என்னை ’’பலியிட்டு’’ விடுவார்கள் என்பதால் சொல்லாமல் இருக்கிறேன். 

3 ஏக்கர் நிலம் உடைய விவசாயி என்னிடம் ‘’உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். நீங்கள் என்ன செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை முழுமையாக எனது வயலில் செய்யுங்கள். நீங்கள் சொல்வதில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே கேட்டு செய்கிறேன்’’ என உறுதி கொடுத்தார். அதனால் அவரது பணியை முழு கவனத்துடன் செய்ய வேண்டியதாயிற்று. இது ஒரு மாதிரி வயல் என்பதால் கடந்த மூன்று மாதமாக முழு மூச்சாக இதில் ஈடுபட்டிருந்தேன். 

அந்த பணி 90 % நிறைவு பெற்றுள்ளது. இந்த வாரம் மீதிப் பணிகளும் முடியும். இந்த நிலையில் வழக்கமான நிலைக்குத் திரும்பும் போது ஆளாளுக்கு ‘’டின்’’ கட்டுகிறார்கள். 

புறநானூற்றில் வரும் ஔவையின் பாடல் தான் நினைவுக்கு வந்தது. ‘’ ஒரு நாளைக்கு எட்டு தேர்களை அனாயாசமாக செய்யும் தச்சன் ஒரு மாதம் முழுக்க முயன்று ஒரு தேர்ச்சக்கரத்தை உருவாக்கினால் அது எத்தனை வலிமையும் வேகமும் கொண்டிருக்குமோ அத்தனை வலிமையும் வேகமும் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி. ‘’ என்கிறார் ஔவை. திங்கள் வலித்த கால் என்கிறார். திங்கள் என்றால் மாதம். கால் என்றால் சக்கரம். 

3 ஏக்கர் பணியும் அவ்வாறானது தான் என நான் நினைத்துக் கொண்டேன்.