Wednesday 15 June 2022

கதை சொல்லச் சொன்னால்

எங்கள் தெருவில் ஒரு மூன்று வயது சிறுவன் இருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் அவன் வீட்டில் ரொம்ப படுத்தினால் இங்கே எங்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இங்கே வளர்ந்து நிறைந்திருக்கும் பூச்செடியின் இலைகளை கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டுவது அவனது விருப்பச் செயல்களில் ஒன்று. அதனை செய்து கொண்டிருப்பான். அது அலுத்த பின் ‘’டார்ச் லைட்’’ வேண்டும் என்பான். அதில் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு ‘’கதை சொல் . கதை சொல்’’ என என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வான். நான் பெரும்பாலும் சிறுவர்களின் கதையைக் கூறுவேன். துருவன் கதை. பீமன் கதை. அர்ஜூனன் கதை. இதிகாச மாந்தர்களின் கதையை குழந்தைகள் மிக விரும்பிக் கேட்கின்றன என்பது எனது நேரடி அனுபவம். 

’’கதை சொல்லு. கதை சொல்லு.’’

நான் எந்த கதை சொல்வது என்று யோசித்தேன். ஒருமுறை சொன்ன கதையை திரும்ப கூறமாட்டேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கதையை சொல்லவே நான் முயற்சி செய்வேன். முதல் கதையில் உள்ள கதாபாத்திரங்கள் இரண்டாம் கதையில் வரலாம் ; உதாரணமாக முதல் நாள் பீமன் கதை சொல்லியிருந்தால் அடுத்த நாள் அர்ஜூன் கதை சொல்லும் போது பீமன் துணைக் கதாபாத்திரமாக வருவான். 

ஒரு பீடிகையுடன் துவக்கினேன். 

‘’உனக்கு மனுஷ தலை மனுஷ உடம்பு இருக்கறவங்கள தெரியும். மனுஷ உடம்பு வேற பிராணிகளோட தலை உள்ளவங்களை உனக்குத் தெரியுமா?’’

அவன் யோசித்துப் பார்த்தான். சட்டென அவன் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பதால் மௌனமாக இருந்தான். 

‘’நல்லா யோசிச்சுப் பாரு. அப்படி இருக்கற ஒருத்தர் உனக்கு பிடிச்ச சாமி’’

‘’யாரு ? எந்த அம்மாச்சி?’’

‘’பிரகலாதன் கும்பிடுவானே’’

‘’நரசிம்மர்’’

தான் பதில் சொல்லி விட்டதால் சிறு வெட்கம். 

‘’கரெக்ட். குட்டி உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கே. எப்படிடா செல்லம் சின்ன வயசுலயே இவ்வளவு ஜீனியஸா இருக்க’’

பாராட்டியதும் மேலும் வெட்கம். 

‘’நரசிம்மர் எப்படி இருப்பாரு சொல்லு.’’

‘’சிங்கத்தலை’’

’’வெரிகுட், உடம்பு ?’’

‘’மனுஷ உடம்பு’’

‘’உனக்கு அந்த மாதிரி இருக்கற அம்மாச்சி எத்தனை பேரைத் தெரியும்?’’

அவன் யோசித்தான். அவனுக்கு விபரம் புலப்படவில்லை. 

‘’நரசிம்மர் மாதிரி அம்மாச்சி யார் யாருன்னு நான் சொல்றன். குதிரைத்தலையும் மனுஷ உடம்பும் இருந்தா அது ஹயக்ரீவர். பறவையோட தலையும் மனுஷ உடம்பும் இருந்தா அது கருடன். பன்றியோட தலையும் மனுஷ உடம்பும் இருந்தா வராகர். ‘’

அவன் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்தான். 

’’ஹயக்ரீவர் எப்படி இருப்பாரு?’’

‘’குதிரைத் தலையோட’’

’’பறவைத் தலையோட இருக்கறது யாரு?’’

அவனுக்கு மறந்து விட்டது. 

‘’உன்ன கதை சொல்ல சொன்னா ஏன் என்னென்னமோ சொல்ற?’’ என்றான். 

அவன் சினத்தை ஆற்றி அவனுக்கு அனுமன் குழந்தையாய் இருந்த போது சூரியனை சிவப்புப் பழம் என எண்ணி உண்ணப் பாய்ந்ததையும் சூரியன் பிரம்மனிடம் ஓடிச் சென்று தப்பியதையும் கதையாகச் சொன்னேன்.