நேற்று ஒரு சாலையில் பயணிக்க நேர்ந்தது. நான் அடிக்கடி பயணிக்கும் சாலை. எனினும் ஞாயிறன்று காலை அந்த சாலைக்குச் செல்ல சந்தர்ப்பம் நேரவில்லை. சென்றிருந்தால் என்னால் பத்து ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட பத்து அடிக்கும் மேலான சுற்றளவு கொண்ட ஒரு மரத்தை என்னால் காப்பாற்றியிருக்க முடிந்திருக்கலாம்.
மாநில நெடுஞ்சாலையில் உள்ளது அந்த பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்தின் உள்ளே பத்து அடி சுற்றளவு கொண்ட பத்து ஆண்டு வயது உள்ள ஒரு பெருமரம் இருந்தது. ஞாயிறன்று காலை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மரம் வெட்டும் பணியாளர்களை நியமித்து அந்த மரத்தை முழுமையாக வெட்டியிருக்கிறார்.
ஒரு மரம் வெட்டப்பட்ட பகுதிக்குள் நுழையும் போது பல ஆண்டுகளாக நாம் பார்த்து நம் மனதில் பதிவாகியிருந்த ஒரு காட்சி சட்டென்று இல்லாமல் போய் வெட்ட வெளியாகி நிற்பதன் திகைப்பு சாதாரணமானதல்ல. நான் எனது பணி ஒன்றின் நிமித்தம் திங்கள் கிழமை அன்று அந்த சாலையில் சென்றேன். வெட்டப்பட்ட மரத் துண்டுகளைப் பார்த்தவுடன் ஒரு செயலிழந்த நிலை மனதில் உருவாகி விட்டது. கடந்து சென்றேன். எனது பணியை முடித்தேன். மீண்டும் அந்த பள்ளி அருகில் வந்தேன். அருகில் இருந்த கடைகளில் என்ன நடந்தது என்று விசாரித்தேன். கடைக்காரர்களுக்கு தயக்கம். நான் விசாரிப்பதால் அவர்களுக்கு ஏதோ தவறு நடந்திருக்கும் என்ற ஐயம் ஏற்பட்டது. இருப்பினும் ரொம்ப தயங்கியே விபரம் சொன்னார்கள். அந்த இடத்திலிருந்து தள்ளிப் போய் மேலும் சிலரிடம் விசாரித்தேன். அவர்கள் கண்ட அவர்கள் அறிந்த விபரங்களைச் சொன்னார்கள்.
மனதில் இருந்த வலியைக் கட்டாயமாக அகற்றினேன். தவறு நிகழ்ந்திருக்கிறது. இப்போது அதற்கான நியாயம் மட்டுமே கேட்க முடியும். அதற்குக் காரணமானவர்களை பிழையீடு செலுத்தச் செய்ய மட்டுமே முயற்சி செய்ய முடியும். செயல்படுபவன் செயலில் ஈடுபட்டிருக்கும் போது உணர்ச்சிவசப்படக்கூடாது. மனதைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும். இவை அடிப்படை விதிகள். இதைப் போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது பழகி விடும். எனினும் தவிர்க்க இயலாத அம்சமாக உணர்வு இருக்கும். அதனை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதுவும் பழகி விடும்.
சர்க்கார் என்பது ஆயிரக்கணக்கான மனிதர்கள் வெவ்வேறு விஷயங்களால் வெவ்வேறு கூறுகளால் இணைந்திருக்கும் சூட்சுமமான எந்திரம். அந்த எந்திரத்தின் பகுதியாக தங்களை உணர்வதாலேயே சர்க்கார் ஊழியர்கள் உணரும் வலிமை என ஒன்று உண்டு. எனினும் அந்த எந்திரத்துக்கும் ஊழியர்களுக்கும் பற்பல எல்லைகளும் உண்டு. இந்த புரிதலுடன் தான் சர்க்கார் எந்திரத்தை அணுக வேண்டும்.
பொது விஷயங்களில் எனக்கு இருக்கும் அனுபவம் கொண்டு இந்த விஷயத்தை அணுக சில யுக்திகளைக் கையாள வேண்டும் என முடிவு செய்தேன். நேற்று முக்கியமான சில சொந்த வேலைகள் இருந்தன. அவற்றை செய்து முடிக்க மாலை 7 மணி ஆகி விட்டது. அதன் பின் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். அந்த அலுவலகத்தில் ஒரே ஒருவர் மட்டும் கோப்புகளில் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது தெரியும் என்றாலும் அங்கே ஒரு முறை சென்றேன். நிகழ்ந்ததை அறிந்த அன்றே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று தகவல் கூற முயன்றோம் என்பது முக்கியம். பணி புரிந்தவரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் பணிப் பொறுப்பு மிக்கவர் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். பணிப் பொறுப்பு மிக்கவர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்வார்கள் ; மேலும் பொதுமக்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள். மறுநாள் காலை அலுவலகம் மீண்டும் வரலாம் என்ற முடிவுடன் அங்கிருந்து புறப்பட்டேன்.
பொது விஷயங்களில் நாம் நினைத்தது நினைத்த படி நடக்காது. இது அடிப்படை விதி. அதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாம் நினைத்தது நடக்காமல் போகக் கூடும் என்பதற்காக எந்த செயலையும் முன்னெடுக்காமல் இருந்து விடக் கூடாது. இப்போது நடக்காமல் போனாலும் இன்னும் சில நாட்களிலோ பல நாட்களிலோ நடக்கக் கூடும். அதனால் எதற்கும் தயார் என்ற மனோநிலை முக்கியமானது.
இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மரத்தை வெட்ட வருவாய் கோட்டாட்சியர் அனுமதி பெறப்பட்டதா என்று கேட்டேன். அவ்வாறான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று சொன்னார்கள். அந்த பகுதியின் கிராம நிர்வாக அலுவலருக்கு ஃபோன் செய்து இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளதாக அலுவலகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது ; அவர் அறிந்திருக்கிறாரா என வினவினார்கள். அவருக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஃபோன் அழைப்பு மூலம் தான் தெரிய வந்தது என்பதை அவர்கள் உரையாடல் மூலம் புரிந்து கொண்டேன். இந்த விஷயத்துக்கான யுக்தியையும் அப்போதே வகுத்து விட்டேன். கிராம நிர்வாக அதிகாரியிடம் பேசிய பின் நீங்கள் யார் என அலுவலகத்தில் கேட்டார்கள். என்னுடைய பெயரைச் சொல்லி விட்டு ‘’Common Man'' என அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
வழக்கமாக அனைவரும் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பு உருவாகும். அது சரியானது தான். ஆனால் எவ்விதம் கொண்டு செல்வது என்பதில் என்னிடம் ஒரு மாற்று வழி இருந்தது. அதனைப் பயன்படுத்தினேன். அதாவது இந்த விஷயம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவரும் விசாரித்து மேலதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டியவர் கிராம நிர்வாக அதிகாரி. யாருக்கு மனு அனுப்பப்பட்டாலும் அவை அவருக்குத்தான் அனுப்பப்படும். எனவே என்னுடைய புகாரை கிராம நிர்வாக அதிகாரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பினேன். அந்த புகாரில் வெட்டப்பட்ட மரத்தின் சுற்றளவு பத்து அடி என்பதையும் சாமானியக் கணக்கீட்டின் படி வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூபாய் இருபத்து ஐயாயிரத்துக்கு மேல் இருக்கும் என்பதையும் தெரிவித்து மேலும் வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படங்களையும் மனுவுடன் இணைத்திருந்தேன். என்னுடைய மனுவே சம்பவத்தை முழுமையாக விளக்கக் கூடிய ஆவணம். சம்பவம் நடந்த இரண்டாவது நாளில் மனு கிராம நிர்வாக அதிகாரிக்கு அனுப்பப்பட்டு மூன்றாவது நாளில் அவர் கையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவின் நகல் முதலமைச்சரின் தனிப்பிரிவு, வருவாய்த்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, கல்வி மாவட்ட அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர் , வருவாய் வட்டாட்சியர் என பத்து பேருக்கு நகலாக அனுப்பட்டுள்ளது என்பது கிராம நிர்வாக அதிகாரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்தல் என்பதில் கிராம நிர்வாக அதிகாரி உண்மையின் பக்கம் நின்றிட நகலாக மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் உதவும் என நான் யூகித்தேன். அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டுள்ளதால் நியாயமான வழிமுறைகள் பின்பற்றப் படும் என எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்க்கக் கூடும்.
மனுக்களை அனுப்புவதற்கு முன்னால் இந்த விஷயத்தை மத்திய அரசின் புகார் பிரிவான சி.பி.கி.ரா.ம்.ஸ் ல் மனு இணையம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
மரத்தின் மதிப்பு அரசாங்கத்துக்கு செலுத்தப்பட வேண்டும் என்பது விதி. மேலும் அந்த தொகையில் சூழ்நிலையைப் பொறுத்து ஒரு மடங்கிலிருந்து நாற்பது மடங்கு வரை அபராதமாக செலுத்தப்பட வேண்டும் என்பதும் விதியின் முக்கியமான அடுத்த பகுதி. பொதுவாக மரத்தின் மதிப்பில் ஒரு மடங்கு மட்டுமே அபராதமாக விதிக்கப்படுவது என்பது நடைமுறையில் உள்ள பழக்கம். இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி ஒரு மடங்குக்கு அதிகமான அளவில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.
அபராதம் செலுத்துவதால் குற்றம் குறைந்து விடுமா என்பது மிக அதிகமாக கேட்கப்படும் கேள்வி. பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுபவர்கள் பொருளியல் ஆதாயத்துக்காகவே செய்கின்றனர். பொது இடத்தில் உள்ள மரத்தை வெட்டுவதால் மரத்தின் மதிப்பைத் தாண்டி பல மடங்கு அபராதம் செலுத்த நேரும் எனில் அச்செய்கை நஷ்டம் விளைவிக்கக் கூடிய ஒன்றாக மாறும். நஷ்டம் விளைவிக்கும் ஒரு செய்லை யாரும் தேடிப் போய் செய்ய மாட்டார்கள்.