நேற்று காலையிலிருந்தே ஏகப்பட்ட அலைபேசி அழைப்புகள். முக்கியமான சில பணிகள். நேரமேயில்லாமல் சுழன்று கொண்டிருந்தேன். அமெரிக்க நண்பரின் அழைப்புக்குப் பின் தஞ்சாவூர் விவசாயி அழைத்திருந்தார். மேட்டுப் பாத்தி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. நிகழ்ந்துள்ள பணிகளை பார்வையிட வருமாறு கேட்டுக் கொண்டார். என்னுடைய மனம் அந்த கணமே நண்பரின் வயலுக்கு சென்று விட்டது. மாலை 5 மணிக்கு வருவதாகக் கூறினேன். அவ்வாறெனில் மதியம் 2 மணிக்குக் கிளம்ப வேண்டும். பேருந்தில் புறப்பட்டேன். நண்பர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து வயலுக்கு அழைத்துச் சென்றார். ஐந்து மணியை ஒட்டி சென்று விட்டேன். சூரிய வெளிச்சம் இருக்கும் போது வயலைக் காண வேண்டும் என விரும்பினேன். அவ்வாறே நிகழ்ந்தது.
நண்பர் வயலின் களிமண் ‘’கேக்’’ போல இருந்தது . அது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. செதுக்கி வைத்ததைப் போல ஜே.சி.பி யால் எடுத்து வைக்க முடிந்தது. வயல் மட்டத்திலிருந்து இரண்டரை அடி உயரம் எடுத்து மேட்டுப் பாத்தி அமைத்திருந்தார். இயற்கை உரமிடுதல், இயற்கை உரம் தயாரித்தல் ஆகியவை குறித்து சில குறிப்புகளை அளித்தேன். என்னுடைய குறிப்புகளின் பொதுத்தன்மை விவசாயிகள் குறைந்த செலவில் அதிக பலன் பெற வேண்டும் என்பதே. குறைவான செலவு என்பதே அதன் அடிப்படை.
பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, வளைகுடா நாடு ஒன்றிலிருந்து ஒரு வாசகர் அழைத்திருந்தார். நாங்கள் முதல் முறையாக உரையாடுகிறோம். அவருக்கு சொந்தமான வயல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. ‘’காவிரி போற்றுதும்’’ செயல்களை வலைப்பூவில் வாசித்த பின் தனக்கும் தேக்கு பயிரிட ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அதற்கான உதவிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
ஒரு விவசாயி தனக்குப் பொருளியல் பலன் தரும் பயிர் ஒன்றை வளர்க்க விரும்புவது அவரது விருப்பம் என்ற ஒன்று மட்டும் அல்ல. அது ஒரு குறியீடு. அதனைப் பல சக விவசாயிகள் நேரடியாகக் காண்பார்கள். அவர்கள் மனதுக்குப் பட்டால் அதனைத் தாங்களும் மேற்கொள்வார்கள். ஒருவர் பெற்ற பலன் மற்றவர்களுக்கும் கிடைக்கும் விதத்தில் இந்த விஷயம் பரவும். வியாபகம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பரவுதல் என்பது பொருள். வியாபாரம் என்ற சொல்லின் வேர்ச்சொல் அது.
மாலை மயிலாடுதுறை திரும்ப ஒரு பாசஞ்சர் ரயில் இருந்தது. நண்பர் அந்த ரயிலில் ஏற்றி விட்டார். ரயில் ஊரை நெருங்கி விட்டது. இன்னும் இரண்டு நிமிடங்களில் ஜங்ஷன் வந்து விடும் என்ற நிலையில் சிக்னல் விழுவதில் ஏதோ கோளாறு. கணிசமான நேரம் தாமதமாகி விட்டது. என்னுடைய அலைபேசியின் பேட்டரி ஒரு புள்ளி மட்டுமே இருப்பு காட்டிக் கொண்டு இருந்தது. நண்பர் ஒருவரை என்னை ‘’பிக் அப்’’ செய்ய வரச் சொல்லியிருந்தேன். அவரைத் தொடர்பு கொள்ள ஃபோன் ஆன் ஆகியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அடுத்தடுத்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. நல்ல வேலையாக நண்பர் வந்து காத்திருந்தார். ஊரில் நல்ல மழை . எங்கள் குடியிருப்புப் பகுதியில் மழையை ஒட்டி மாலை 5 மணிக்கு மின்வெட்டானது இன்னும் மின்சாரம் வரவில்லை என்று சொன்னார். வீட்டுல் டிராப் செய்து விட்டு சென்றார். அதற்குள் அலைபேசி தனது சக்தியை இழந்திருந்தது. ரொம்ப நேரம் கரண்ட் இல்லாததால் சார்ஜ் செய்யவும் முடியவில்லை. தஞ்சாவூர் நண்பருக்குக் கூட வந்து சேர்ந்த தகவலை கூற முடியாத நிலை.
உணவருந்தி விட்டு உறங்கச் செல்ல இரவு 10 மணி ஆகி விட்டது.