Saturday 2 July 2022

இடம் பொருள் மரம்

இன்று காலை அலைபேசியில் ஒரு அழைப்பு. எண்ணைப் பார்த்தால் வெளிநாட்டு அழைப்பு என்று தோன்றியது. வெளிநாடுகளிலிருந்து வாசகர்கள் கணிசமாக இப்போது அழைக்கிறார்கள். யாராக இருக்கும் என்று யோசித்தவாறு ஃபோனை எடுத்தேன். எனது வாசகரும் வகுப்புத் தோழருமான நண்பர் அழைத்திருந்தார். இந்தியாவில் சில ஆண்டுகள் பணியாற்றி விட்டு பின்னர் பல ஆண்டுகள் ஜப்பானில் பணி புரிந்தார். ஜப்பான் அவருக்கு மிகவும் பிடித்த நாடு. இருப்பினும் அங்கிருந்து அமெரிக்கா செல்ல நேர்ந்தது. அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிகிறார். பால்ய சினேகிதர்கள் என்றாலும் காலம் எங்கள் இருவரையுமே மாற்றி அமைத்திருக்கிறது. அனுபவம் எங்கள் இருவரையும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அவரது அழைப்பு பெரும் மகிழ்ச்சி தந்தது. 

நண்பன் தான் முதலில் ஆரம்பித்தான். நலம் விசாரித்த பின் நண்பன் ‘’என்ன செஞ்சுகிட்டு இருக்க?’’ என்றான். நான் செய்து கொண்டிருக்கும் ஏகப்பட்ட வேலைகள் முண்டியடித்துக் கொண்டு என் மனதில் வந்து நின்றன. எதை முதலில் சொல்வது என்று யோசித்தேன். ‘’ நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கன்னு நான் சொல்லட்டுமா? ஒவ்வொரு நாளும் உன்னோட பிளாக்-ஐ வாசிக்கறேன்’’ என்றான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 

‘’பிரபு! நான் ஒரு விஷயம் முடிவு செஞ்சிருக்கன். அதை நீதான் முன்னால இருந்து செஞ்சு கொடுக்கணும். ‘’

’’ 3 ஏக்கர் விவசாய நிலம் வேணும். நல்ல இடமா பாரு. கிரயம் பண்ணிடுவோம். அதுல 1000 தேக்கு மரம் வளர்க்கணும். ஏற்பாடு செஞ்சுட்டு சொல்லு. பணத்தை ஒரே பேமெண்ட்டா அனுப்பி வச்சுடறன்.’’

எனது மனம் நெகிழ்ந்து விட்டது. எத்தனையோ கண்டங்கள் கடல்கள் தாண்டி அவன் இருக்கிறான். ‘’காவிரி போற்றுதும்’’ சாதித்தது என்ன என்ற கேள்வி எனக்கு அவ்வப்போது எழும். நாம் நிச்சயமாக ஏதோ ஒன்றை சாதிக்கிறோம் என்ற தெம்பை இந்த அழைப்பு கொடுத்தது.