ஊருக்குப் பக்கத்தில் ஒரு கிராமம். ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு சிறு விவசாயி தனது நிதிப் பற்றாக்குறையின் காரணமாக தனது வயலில் நேரடியாக நெல்லை விதைக்க முடிவு செய்திருக்கிறார். வழக்கமாக விதைநெல்லை நாற்றங்காலில் இட்டு நாற்றுகளாக்கி பின்னர் அந்த நாற்றுக்களை நெல்வயலில் நடவு செய்வார்கள். இந்த முறையில் நடவு செய்ய அவரிடம் பணவசதி இல்லை. எனவே வயலில் நேரடியாக விதைநெல்லை விதைத்து விடலாம் என முடிவு செய்தார். அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நேரடியாக விதை தெளிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அவ்வாறு ஈடுபட்ட அவர்களை ஒரு வன்முறைக் கும்பல் தாக்கியிருக்கிறது. நேரடி விதைப்பு முறையில் நெல்லை விதைக்கக் கூடாது என்று கூறி அந்த வன்முறைக் கும்பல் தாக்கியிருக்கிறது. இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. இந்த விவசாயியுடன் சேர்ந்து இன்னும் ஐந்து விவசாயிகளும் இவ்வாறு விதைத்திருக்கின்றனர். அவர்களுக்கும் அதே வன்முறைக் கும்பல் இடையூறு செய்திருக்கிறது. பத்திரிக்கைகளில் வெளியான செய்தியைப் பார்த்த பின் நான் அந்த கிராமத்துக்குச் சென்றேன். சம்பந்தப்பட்ட விவசாயியைச் சந்தித்தேன்.
இந்த விஷயத்தை நான் நோக்கும் விதத்தை அவருக்குச் சொன்னேன். இந்திய அரசியல் சாசனம் தன் குடிகள் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நீதி பெறுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு விவசாயி தன்னுடைய வயலில் நெல் விதைப்பது என்பது அவருடைய பொருளாதார உரிமை. அதில் தலையிட்டு வன்முறையில் ஈடுபடுவது என்பது அவரது சமூக பொருளாதார உரிமையைப் பறிக்கும் செயல். அந்த அடிப்படையில் அந்த வன்முறைச் செயல் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே அந்த விவசாயி இந்த விஷயத்தை மாநில மனித உரிமைக் கமிஷன் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னேன். தனது வயலில் தனது விதைப்பு நடவடிக்கையை தடுத்த வன்முறைக் கும்பல் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூறி அந்த விவசாயி இந்த விஷயத்தை மாநில மனித உரிமைக் கமிஷன் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை சற்று கால அவகாசம் கொடுத்து கவனித்து அதன் பின் தேவையெனில் அதனை தேசிய மனித உரிமை கமிஷனுக்கும் கொண்டு செல்ல அவர் உத்தேசித்திருக்கிறார்.