ஒரு புலரியின் முன்
பனித்துளிகளை ஏந்தி முன் நகரும்
இளநதியின் முன்
பட்சிகள்
குதூகலித்து ஒலியெழுப்பி பறந்து ஆடும்
ஒரு விருட்சத்தின் முன்
ஒரு சின்னஞ்சிறு தீச்சுடரின் முன்
நிற்பதைப் போல
உன் முன் நிற்கிறேன்
உன் கருணை
என்னைத் தழுவட்டும்
உன் பிரியங்கள்
என்னைச் சூழ்ந்து கொள்ளட்டும்
உன் அன்பு
என்னில் முழுதாக நிறையட்டும்
***
சமகாலத் தமிழ் நாவல் பரப்பில் அதிகாலையின் வெள்ளிமீன் எனத்
தயக்கமின்றி சொல்லக் கூடிய நாவல் அஜிதனின் ‘’மைத்ரி’’. அமைப்பிலும் உள்ளடக்கத்திலும்
தரிசனத்திலும் முற்றிலும் ஒரு குறுங்காவியம் எனச் சொல்லத்தக்க நாவல். இந்த நாவலை வாசித்த
போது ஒவ்வொரு விதத்தில் எனக்கு இந்தியாவின் பெரும் நாவலாசிரியர்களான தாரா சங்கரும்,
விபூதி பூஷணும் கிரிராஜ் கிஷோரும் நினைவில் எழுந்து கொண்டே இருந்தார்கள். நாவலை வாசித்து
முடித்ததும் அது ஏன் என்பதை புறவயமாக வகுத்துக் கொள்ள முயன்றேன். மூவருமே இலக்கிய ஆசான்கள்.
மூவருமே தங்கள் செவ்வியல் படைப்புகள் மூலம் இலக்கியத்தில் நிலை பெற்றவர்கள். மைத்ரியின்
ஆசிரியர் தனது முதல் நாவலை எழுதியிருக்கிறார். அவ்வாறெனில் அவர்களின் பொது அம்சம் என்ன?
வேறுவிதமாக யோசித்துப் பார்க்கலாம். ஆசான்கள் மூவரும் சமவெளியை எழுதியவர்கள். அஜிதன்
மலை உருகி நதியாகும் தோற்றுமுகத்தை எழுதியவர். தோற்றுமுகத்துக்கும் சமவெளிக்கும் தொடர்பாயிருப்பது
நதி. அஜிதனுக்கும் ஆசான்களுக்கும் பொதுவாயிருப்பது கூட அந்த நதியின் பிரவாகம் தான்
என எண்ணிக் கொண்டேன்.
ஹரன் தீயெனப் பற்றியெழும் ரஜோ குணத்தைக் குறிப்பவன். தன்னுள்
வரும் எதனையும் அந்த தீயால் அணுகுபவன். நீறு பூத்த நெருப்பாக அதனை அகத்தில் பேணுபவன்.
அவ்வாறு பேணுதலை தனது தனி இயல்பாக புரிந்து கொண்டிருப்பவன். இயற்கையின் அறிய முடியாத
விதிகளில் ஏதோ ஒன்றால் அவன் உணரும் நிறைவின்மை அவனை அவனுடைய நிலையிலிருந்து வேறெங்கோ
நகர்த்துகிறது. அந்த நகர்வு அவனுக்கு நடந்தது இயற்கை அவன் மீது கொண்ட பிரியத்தால்.
உலகத்தை உலகியலை மூன்று குணங்களாகப் புரிந்து கொள்கிறான் ஹரன்.
ஜீவிதம் இந்த மூன்று குணங்களின் மோதலின் விளைவாக நிகழ்ந்து கொண்டிருக்கையில் இவற்றுக்கு
அப்பால் – மிக அப்பால் – இருக்கும் தூயவெளியின் மென்மையான கரம் ஹரனைப் பற்றுகிறது.
கட்வாலி பிராந்தியத்தின் நிலக்காட்சிகளும் அந்த பிராந்தியத்தின் தொல்கதைகளும் நாவலில்
குறிப்புணர்த்துவது அதனையே. தேவதாரு மரங்கள் மேகங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் உலகம்
ஒன்று. தேவதாரு மரங்கள் வேரூன்றியிருக்கும் நிலம் இரண்டாவது. அதற்குக் கீழ் இருக்கும்
பாதாளங்களின் உலகம் மூன்றாவது.
பேரன்பாய் பெருங்கருணையாய் தனது இருப்பைக் கொண்டிருக்கிறாள்
மைத்ரி. ஒரு மரத்துண்டை பாகீரதி தன்னுடன் அழைத்துச் செல்வதைப் போல – ஒரு கூழாங்கல்லுக்கு
பாகீரதி தனது குளிர்ச்சியை அளிப்பது போல மைத்ரி ஹரன் உறவு அமைகிறது.
நிலக்காட்சிகளின் வர்ணனையும் கட்வாலி பிராந்தியத்தின் உணவு,
உடை , உறையுள் ஆகியவற்றை துல்லியமாக விவரிப்பதும் அந்த நிலத்தின் – மக்களின் பண்பாட்டு
வெளியை நாவலில் முழுமையாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
சமூகப் பொருளியல் நிலை சார்ந்த – தனி மனித அகங்காரம் சார்ந்த
வலிகள் மட்டுமே மிக அதிகமாகப் பேசப்பட்டிருக்கும் தமிழ்ச் சூழலில் ‘’மைத்ரி’’ நாவலில்
பேசப்படும் ‘’வலி’’ தமிழ் நாவல் பரப்பில் ஒரு முக்கியமான அடியெடுப்பைக் குறிக்கிறது.
ஹரன் முழுகி எழும் வென்னீர் ஊற்றும் இரு குழந்தைகள் மூழ்கி
எழும் குளிர் நிறைந்த நதிப் பிரவாகமும் இந்த நாவலின் தரிசனத்தை குறிப்புணர்த்தி விடுகின்றன.
***