இயக்கத்தை சிருஷ்டி, ஸ்திதி, சம்ஸ்காரம் என்ற மூன்று நிலைகளாகக் கூறுகிறது இந்திய மரபு. எல்லா விதமான இயக்கங்களும் இந்த மூன்று நிலைகளுக்கு உட்பட்டவையே. செயலின் எல்லா விளைவுகளும் இந்த மூன்று நிலைகளின் பாற்பட்டவையே.
தோராயமாக பத்து ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய தொழில் சார்ந்து ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். தொடர்ந்து பல தடைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. ஆறு நாட்கள் உணவு உண்ணாமல் நீர் மட்டும் அருந்தி ஒரு விரதம் இருப்பது என. ஒருநாள் ஒருவேளை கூட விரதமிருந்து பழக்கமில்லாதவன் நான். இருப்பினும் அந்த விரதத்தை மேற்கொண்டேன். ஐப்பசி மாதம் தீபாவளிக்கு மறுநாளிலிருந்து துவங்கும் கந்த சஷ்டி விரதம் அது. தீபாவளிக்கு மறுநாள் துவங்கி சூரபத்மனை முருகன் வதம் செய்யும் சஷ்டி மாலை அன்று நிறைவாகும் விரதம் அது. அந்த விரதம் என்னுடைய சில அக மற்றும் புறத் தடைகளைத் தகர்க்க பெருமளவில் உதவியது.
விரதங்கள் ஒரு நாளின் வழக்கமான போக்கை மாற்றியமைப்பதில் பெருமளவு உதவுகின்றன. வழக்கமான ஒரு நாளில் நம் வயிறு உணவை அடிப்படையாய்க் கொண்டே நேரத்தை வகுக்கிறது. உணவு ருசியுடன் இணைந்திருக்கிறது. உணவு - நேரம் - ருசி ஆகிய மூன்றும் இணையும் போது நமது பழக்கம் உருவாகி விடுகிறது. அந்த பழக்கத்தை நாம் எல்லா நாளும் பிரக்ஞைபூர்வமாக உணர்வதில்லை. நம்மை அறியாமலே அதில் முழுமையாக பழகி விடுகிறோம். விரதங்கள் அந்த பழக்கங்களில் ஒரு உடைவை உண்டாக்குகின்றன. ஒரு இடைவெளியை ஏற்படுத்துகின்றன. அந்த இடைவெளி மூலம் அதனை அறியும் போது அதன் மூலம் நாம் வெளியேறிச் செல்ல ஒரு வாய்ப்பு உண்டாகிறது.
நிறைய பணிகள் இருக்கின்றன. நிறைய செயல்கள் செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறான நிலையில் எண்ணியதை எண்ணியவாறு எய்த பெரும் ஆற்றல் தேவையாயிருக்கிறது. அந்த ஆற்றலை ஈட்ட விரதங்கள் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய புராண மரபு விரதங்களைக் குறித்தும் தவங்களைக் குறித்தும் எண்ணற்ற கதைகளை முன்வைக்கிறது. சமணமும் பௌத்தமும் விரதங்களை தங்கள் நடைமுறைகளில் மிக முக்கியமாக முன்வைக்கின்றன.
ஒரு நாள் என்பதை எனக்குத் திருப்தியான முறையில் அமைத்துக் கொள்ள நான் எண்ணும் வேகத்தில் எனது செயல்களை ஆற்ற ஒரு விரதத்தைத் துவக்குகிறேன். பாரதம் கர்மபூமி. இந்த மண்ணில் உயிர்கள் பிறப்பெடுப்பது செயல் செய்து செயலின் நிறைவை எய்தி விடுதலை கொள்ளவே என்னும் நம்பிக்கை இந்நாட்டில் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது.
என்னுடைய மனம் படைப்பூக்கம் கொண்டது. ஒரு விதையைக் காண்கையில் விருட்சத்தை உணர்வது. அத்தகைய மனத்தை விரதத்தில் நிலை நிறுத்துவுது என்பது சற்று கடினமான ஒன்றே. எனினும் இந்த நகர்வு இப்போது அவசியமான ஒன்று என்று படுகிறது.
இன்று தொடங்கி தீபாவளி வரை ஒரு நாளைக்கு இரவு ஒரு வேளை மட்டும் உணவு அருந்துவது என்றும் அதன் பின் வரும் ஆறு நாட்கள் நீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பது என்றும் எண்ணம் கொண்டுள்ளேன்.
அதிகாலை எழுதல், நாளின் பொழுதில் இயன்ற அளவு மௌனமாயிருத்தல், மூன்று வேளைகளிலும் இறை வணக்கம் செய்தல், தீபம் ஏற்றுதல், சக உயிர்களுக்கு சிறு அளவேனும் விரத நாட்களில் உணவளித்தல், பகவத் கீதை வாசித்தல், இறை நாமம் உச்சரித்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என விருப்பம்.
இந்த நாட்களில் நான் உண்ணும் உணவை நானே சமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் விரும்புகிறேன்.