செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு விவசாயிக்கும் அனுப்பும் அஞ்சல் அட்டைக் கடிதத்தின் மாதிரி வடிவத்தை கீழே கொடுத்துள்ளேன்.
-----------------
மதிப்பிற்குரிய விவசாயி திரு. _______________ அவர்களுக்கு,
வணக்கம்.
நமது கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் 20 தேக்கு மரக் கன்றுகளை வழங்க உத்தேசித்துள்ளோம்.
நமது நாட்டின் குடியரசு தினத்தை ஒட்டி நம் கிராமத்தினருக்கு வழங்கிய நந்தியாவட்டை மரக்கன்றுகளை கிராம மக்கள் நல்ல முறையில் வளர்த்து வருவதால் அவர்களுக்கு மேலும் தேக்கு மரக் கன்றுகள் வழங்க விருப்பம் கொண்டுள்ளோம்.
முறையான பராமரிப்புடன் வளர்க்கப்படும் ஒரு தேக்கு மரக் கன்று 15 ஆண்டுகளில் ரூபாய் ஒரு இலட்சம் விலை போகக் கூடும். ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் 20 கன்றுகள் 15 ஆண்டுகளில் ரூ. 20,00,000 வருமானமளிக்கும்.
தேக்கு மரக் கன்றுகளைப் பெற்று பயனடைய விரும்பும் விவசாயிகள் ********** என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
நன்றி!
’’காவிரி போற்றுதும்’’
----------------------
இந்த வடிவில் அஞ்சல் அட்டைக் கடிதங்களை ஒரு நாளைக்கு 20 என்ற கணக்கில் எழுதி அனுப்பி வருகிறேன். அஞ்சல் அட்டைகள் சென்றடையும் விவசாயிகள் தங்கள் வீட்டாருடனும் அண்டை வீட்டாருடனும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் இது தொடர்பாக ஒரு உரையாடலை மேற்கொள்வார்கள். அது மரக்கன்றுகள் குறித்த விஷயத்தை அவர்கள் மனதில் நிலை நிறுத்த அடித்தளமாய் அமையக் கூடும். சில வாரங்களில் கிராமத்தில் மெல்ல இது குறித்த பேச்சு உருவாகும். எத்தனை பேர் தொடர்பு கொள்கிறார்கள் என்பதன் மூலம் அவர்களுடைய ஆர்வத்தையும் நம்மால் அளவிட்டுக் கொள்ள முடியும். அடுத்தடுத்த படிகளை மேற்கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.