Saturday 3 September 2022

விரதம்

சில செயல்களைத் தொடங்க இருக்கிறேன். சில செயல்களை மேலும் தீவிரமாக்க இருக்கிறேன். சில விஷயங்களில் ஆழம் கொள்ள விரும்புகிறேன்.  

நமது மரபு நமது விருப்பங்களை பிரக்ஞைபூர்வமாக நேருக்கு நேராக நோக்கச் சொல்கிறது. நம்மை நமது விருப்பங்களைப் புரிந்து கொள்ள அது மிகவும் உதவிகரமானது.

எதைத் தொடங்க இருக்கிறோமோ எதில் தீவிரம் கொள்ள விரும்புகிறோமோ எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அதற்கு நம்மை முழுமையாக அளிக்க வேண்டியது அவசியம். நம்முடைய நேரத்தை நம்முடைய எண்ணங்களை நமது கணத்தையும் அதற்காக அளிக்க வேண்டியது முக்கியம். எவ்விதமான சிதறலும் இன்றி மனதை ஒருமுகப்படுத்திக் கொள்வது முக்கியமாக தேவைப்படுவது. 

இந்திய மரபு பரிந்துரைக்கும் விரதம் என்பது ஒரு முக்கியமான உபகரணம். வாரத்துக்கு ஏதேனும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என்பது இந்தியா முழுதும் உள்ள நடைமுறை. அவ்வாறெனில் வருடத்துக்கு 52 நாட்கள். நான் விரதம் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் எண்ணியபடி என்னால் முழுமையாக விரதம் இருக்க முடியாது போகும். எனது வாழ்க்கைமுறை எனது தொழில் எனது தவிர்க்க முடியாத அப்போதைய சூழ்நிலைகள் என பல காரணிகள். பசியைப் பொறுத்துக் கொள்வது என்பது எனக்கு மிகவும் கடினமானது. பல திசைகளில் சிதறிப் பரவும் இயல்பு கொண்ட எனது மனத்தை பசி மேலும் மேலும் சிதறச் செய்து விடும். 

விரதம் இருப்பது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருப்பது என்பது விரதத்துக்கு வலுவூட்டும். ஆனால் நான் தினமும் பலரைச் சந்திப்பவன். அவர்கள் உபசரிக்கும் போது அதனை மறுக்கும் நிலை வரும் போது விரதம் இருப்பதைக் கூறும் நிலை ஏற்படும். அது குறித்து அவர்கள் கூறும் சொற்கள் பசியுடன் இருக்கும் நிலையில் விரதத்தில் தாக்கம் ஏற்படுத்தும். என்னுடைய இயல்பு என்பது மேலும் மேலும் என பல செயல்களில் ஈடுபடுவது. ஏதோ ஒன்றை கற்பனை செய்து கொண்டே இருப்பது. அவ்வாறான ஒரு இயல்பு உணவின் மேல் தீவிரமான ஆர்வம் கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்ல வேண்டிய ஒரு பருவம் வந்து விட்டதாக உணர்கிறேன். 

நாற்பது நாட்களுக்கு ஒரு விரதத்தைத் துவக்க உள்ளேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்பது என்றும் பகல் பொழுது முழுவதையும் முழுமையாக செயல்களுக்காக வழங்குவது என்றும் முடிவு செய்துள்ளேன். இந்த விரதம் எனக்கு பலவிதங்களில் உதவியாக இருக்கும் என்று என்னுடைய உள்ளுணர்வு இந்த கணம் கூறுகிறது. 

திருவாசகத்தில் ‘’யாத்திரைப் பத்து’’ என்ற பகுதி உள்ளது. ஜீவன்கள் சில சிவனைக் காண யாத்திரை செல்ல வேண்டும் என்று கிளம்பும். அந்த ஜீவன்கள் அனைத்துமே எல்லைக்குட்பட்டவை. மிக மிகக் குறைந்த சக்தி கொண்டவை. அப்போது சில ஜீவன்கள் சிவன் வாழும் லோகம் எங்கோ உள்ளது ; நம்முடைய குறைந்த சக்தியைக் கொண்டு அங்கு நம்மால் போக முடியுமா என்று அகத்துயருடன் ஐயம் எழுப்பும். அதற்கு ஒரு ஜீவன் விடை அளிக்கும் : ‘’நாம் சக்தி குறைந்தவர்கள் தான். ஆனால் நாம் சென்றடைய நினைக்கும் சிவன் அளப்பரிய சக்தி கொண்டவன். கருணையின் கடல் அவன். தடைகளுடன் இயலாமைகளுடன் நாம் பயணித்து வருகிறோம் என்பதை அவன் அறிவான். நம் நோக்கம் மீது கருணை கொண்டு நம்மை நோக்கி அவன் வருவான். அல்லது அவனை வந்தடைய தேவையான சக்தியை அவனே கொடுப்பான்’’ . 

எல்லையற்ற பரம்பொருளின் கருணை துணை நிற்கும் என்ற நம்பிக்கையுடன் எனது விரதத்தைத் துவங்குகிறேன்.