Tuesday 6 September 2022

ஸ்நானம்

இன்று மாலை காவிரியில் ஸ்நானம் செய்தேன். 

நதி கணந்தோறும் புதியதாக இருக்கிறது. நதியில் மூழ்கும் போது நாமும் புதிதாகிறோம். காலை ஸ்நானம் ஒரு விதம். நதி நம்முடன் பேசும் பொழுது. மாலை ஸ்நானம் நதியை நாம் மேலும் அணுக்கமாக உணரும் பொழுது. நதியின் சான்னியத்தில் இருப்பது பெரும் அகமகிழ்வை உண்டாக்குகிறது.  

எனது பள்ளித்தோழர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் மகாதேவன். அவரது வீடு காவிரியிலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது. சென்னையில் பணிபுரிந்து விட்டு இப்போது ஊரில் வீட்டிலிருந்து பணி புரிகிறார். இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். தகவல் தொழில்நுட்ப பணி புரிவதால் நாளின் பெரும்பகுதி வேலையில் மூழ்கியிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார். அடிப்படையில் நான் லௌகிக நியதிகள் தெரிந்தவன். ஒருவருடைய உத்யோகத்துக்கு முடிந்தால் உதவியாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தொந்தரவாய் இருக்கக் கூடாது என்று எண்ணுபவன். எனவே அவர் வீட்டுக்கு ரொம்ப நாளாக செல்லவே இல்லை. சில நாட்களுக்கு முன்னால் அவரைச் சென்று சந்தித்து அவருடன் கொஞ்ச நேரம் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அங்கு சென்று அவர் என்ன செய்கிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது ஏதும் பேசிக் கொண்டிருந்தேன். 

மீட்டிங் மீட்டிங் என்று மீட்டிங்கில் இருந்தார். அவருடைய புத்தக கலெக்‌ஷனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு புத்தகங்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருப்பேன். 

மகாதேவன் என்னிடம், ‘’பிரபு ! புத்தகம் எடுத்துப் படிங்க . வீட்டுக்கு எடுத்துட்டு போய் படிச்சுட்டு கொண்டு வந்து தர்ரதுன்னாலும் கொடுங்க. ‘’ என்றார். 

அடிப்படையில் நான் என்னுடைய புத்தகங்களை இரவல் தர விரும்பாதவன். அவ்வாறெனில் அடுத்தவர்களிடமும் அதே நியதியின் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். என்னிடம் உள்ள புத்தகங்களிலேயே இன்னும் வாசிக்காத சில புத்தகங்கள் உள்ளன. இதில் ஏன் இரவல் வாங்கி வாசிக்க வேண்டும்? 

சில நாட்களாக அவரைச் சந்தித்ததில் அவர் என்ன பணி செய்கிறார் என்பதை எனக்குத் தெரிந்த விதத்தில் ஓரளவு புரிந்து கொண்டு அவரிடம் கேட்டேன். ’’மகாதேவன் ! நீங்க நீங்க மீட்டிங் மீட்டிங்னு பேசுறீங்களே அது என் காதுல விழுது. ஆணும் பெண்ணுமா பத்துக்கும் மேலான குரல் கேக்குது. அதுல உங்களோட குரல் மட்டும் தான் ‘அட்டெண்டிவ்’’ஆ இருக்கு. ஒரு சில பெண்கள் ஆர்வமா பதில் சொல்றாங்க. மத்த எல்லாரும் ஆர்வமே இல்லாம விருப்பமே இல்லாம பதில் சொல்றாங்க. அது அவங்க குரல்லயே தெரியுது’’ என்றேன். நாங்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக் கொண்டோம். என்னை அவர் ஏன் பரிதாபமாக பார்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா என்று எண்ணினேன். வேறொரு சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்ளலாம் என விட்டு விட்டேன். அவர் மீட்டிங் பேசிக் கொண்டிருக்கும் போது நான் புத்தகங்களைப் பார்ப்பேன். அவருடைய அணி உறுப்பினர்கள் பெயர் சொல்லிக் கூப்பிடப் படும் போது அந்த உலகத்துக்குள் மானசீகமாக நானும் செல்வேன். ஆனால் மகாதேவன் தினமும் சோர்வாக இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். 

‘’எந்த சூழ்நிலைக்கும் நீங்க எமோஷனலா ரியாக்ட் செய்யாதீங்க. நாம எமோஷனல் ஆனா அந்த விஷயம் ஒரு ஸ்டெப் பின்னாடி போகுமே தவிர முன்னாடி போகாது. இதை இருபது வயசா இருக்கற ஒருத்தர் கிட்ட சொல்ல முடியாது. உங்களுக்கு 43 வயசு. அதனால சொல்றன்’’ 

மகாதேவன் அமைதியாக இருந்தார். 

‘’ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இந்த சூழ்நிலைலயே இருக்கீங்க. உங்களுக்கு தினமும் மனமாற்றம் தேவை. நான் ஒரு விஷயம் சஜெஸ்ட் செய்றன். கேப்பீங்களா?’’

‘’சொல்லுங்க பிரபு’’ 

‘’காவேரில தண்ணி முழுசா போய்ட்டு இருக்கு. வீட்டுலேந்து கூப்பிடு தூரத்துல ஆறு. தினமும் காலையிலயும் சாயந்திரமும் பதினைஞ்சு பதினைஞ்சு நிமிஷம் ஆத்துல குளிங்க.’’

நண்பர் அமைதியாக கேட்டுக் கொண்டார். எதனையோ உணர்ந்தவர் போல் தீவிரம் கொண்டார். ‘’அப்படியா சொல்றீங்க’’

’’ஓடும் நதி என்பது எப்போதும் அசைவிலேயே இருப்பது. அந்த அசைவு நம்மகிட்ட இருக்கற வேண்டாத எல்லாத்தையும் அசைச்சு அசைச்சு நீக்கிடும். நாம ஒரு தடவை இறங்குன நதியில திரும்ப இறங்க முடியாது தெரியுமா? அது கணந்தோறும் மாறிக்கிட்டே இருக்கு. நாம ஸ்தூலமா பாக்கற வாழ்க்கை அல்லது கடவுள் தான் நதி’’

விஷயம் ரொம்ப மிஸ்டிக்கலான இடத்துக்கு சென்று விட்டதாக இருவரும் உணர்ந்தோம். 

‘’நாம ரேஷனலா இருக்கறதா நினைக்கிறோம். ஆனா அப்படியும் இல்ல. பத்து வயசு கொழந்தைங்க நதியைப் பாத்தா குளிக்கணும் நினைச்சு ஆத்துல குதிச்சு கும்மாளம் போடுது. நம்ம மனசை குழந்தைங்க மனசாவே வச்சுக்கலாம். நதியைப் பாக்கும் போதாவது.’’

நான் புறப்பட்டேன். ‘’பிரபு ! ஏதாவது புக் எடுத்துட்டு போங்க’’ 

’’சரி நான் ஒரு புக் எடுத்துக்கறன். ஆனா இப்ப எதிர இருக்கற நூற்றுக் கணக்கான புத்தகங்கள்ல எந்த புக் என் கைக்கு வரப்போகுதுங்கறதுல ஒரு மிஸ்ட்டிக்கல் எலிமெண்ட் இருக்கு. அது என்னன்னு பாத்துடுவோம்.’’

நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் புத்தகங்களைக் கண்கள் கடந்து கொண்டிருந்தன. 

தி. ஜானகிராமன் சிறுகதைகள் தொகுதி - 1 என்ற புத்தகம் இரண்டு பிரதிகள் இருந்தன. ‘’என்ன மகா இது ஒரே புக் ரெண்டு காப்பி இருக்கு. நான் இதை எடுத்துக்கறன்’’

கையில் எடுத்துக் கொண்டு சொன்னேன். ‘’இந்த புக்கை எடுத்தது ஒரு சிவில் எஞ்சினியர் . உங்க கலெக்‌ஷன்ல ஒரு புக்கும் குறையலை. ஆனா எனக்கும் ஒரு காப்பி வந்திடுச்சு. ‘’ 

தி.ஜா நூலை கையில் வைத்திருப்பதே மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிக மிக நெருங்கிய நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் தீவிரமான தி. ஜானகிராமனின் ரசிகன். தி. ஜா குறித்து பேசும் பொதெல்லாம் மிக உணர்ச்சிகரமாகி விடுவான். அவனை அந்த கணம் நினைத்தேன். 

புத்தகத்தினுள் சென்று அந்த தொகுப்பின் முதல் சிறுகதையின் தலைப்பைப் பார்த்தேன் . ‘’கங்கா ஸ்நானம்’’. 

மகாவிடம் காண்பித்தேன். அவருக்கு ஆச்சர்யம். 

’’தகவல் உங்களுக்கு வந்திருக்கு மகா. காவேரி மாதா உங்களைப் பாக்கணும்னு நினைக்கறா’’ 

மகா கண் கலங்கி விட்டார். 

நான் விடைபெற்று வீட்டுக்கு வந்தேன். ‘’ஸ்நானம்’’ என்று தலைப்பிட்டு ஒரு பதிவை எழுத வேண்டும் என்று எழுத அமர்ந்தேன். தி. ஜா தீவிர ரசிகனான என் மிக மிக நெருங்கிய நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒலி எழுப்பிக் கொண்டு என் அலைபேசியில் வந்தமர்ந்தது. 

நேற்று தளத்தில் பதிவிட்ட நினைவு கவிதையிலிருந்து 

’’அந்திப் பொழுதில்
அந்திப் பொழுதைத் 
தொழுகிறான்
ஓர் எளிய மனிதன்’’

என்ற எனது கவிதை வரிகளை எனக்கு அனுப்பியிருந்தான்.