Friday 30 September 2022

பொன்னியின் செல்வன்

 

என்னுடைய பத்து வயதில் முதல் முறையாக ‘’பொன்னியின் செல்வன்’’ வாசித்தேன். எனது உறவினர் ஒருவர் கல்கியில் வெளியான ஐந்து பாகங்களையும் பைண்டு செய்து தொகுத்து வைத்திருந்தார். ஐந்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு விடுமுறை என்று ஞாபகம். ‘’ஆதியும் அந்தமும் இல்லாத காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் பயணிக்க வாசகர்களை அழைக்கிறோம்’’ என்ற அழைப்போடு துவங்கும் அந்த நீள்கதையை வாசிக்கத் தொடங்கினேன். வீர நாராயண ஏரிக்கரை, குதிரையில் பயணிக்கும் வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன் , திருப்புறம்பியம் போர், விஜயாலய சோழன் என விரிந்து கொண்டே செல்கையில் சோழ மன்னர்களின் வரலாறும் சாதனைகளும் கல்கியின் சொற்களில் நம்முள் நிறைந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் படிக்கும் வகுப்பு உயர்ந்து கொண்டே இருக்க அந்த ஆண்டுகளின் காலாண்டு , அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளின் விடுமுறைகளில் ‘’பொன்னியின் செல்வன்’’ வாசிப்பது என்பது பழக்கமாகிப் போனது. குறைந்தது முப்பது முறையாவது அந்த நாவலை வாசித்திருப்பேன். 

அனேகமாக தமிழில் மிக அதிகம் வாசிக்கப்பட்ட எழுத்தாளராக கல்கியே இருக்கக் கூடும். மிகக் குறைவான வாசிப்புப் பழக்கம் கொண்ட தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளர் கோடிக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்படுவது என்பது உண்மையில் பெருவியப்பே. 

ஊருக்கு மிக அருகில் இருக்கும் மணல்மேடு என்ற கிராமமே கல்கியின் சொந்த ஊர். அவர் மயிலாடுதுறை முனிசிபல் பள்ளியில் பயின்றவர். சில ஆண்டுகளுக்கு முன்னால் மணல்மேடு அருகில் உள்ள புத்தமங்கலம் அக்ரஹாரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்று சில மணி நேரம் இருந்தேன். அவருடைய உறவினர்கள் சிலர் அந்த வீதியில் இருந்தார்கள். அவர்களுடன் கல்கி குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். 

தமிழ்நாட்டின் வரலாற்றில் கல்கி அவர்களின் இடம் தனித்துவமானது.