Sunday 2 October 2022

அடிபணிதல்

 

நேற்று செயல் புரியும் கிராமத்துக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு விவசாயிக்குச் சொந்தமான  திடல் ஒன்றில் 50 தேக்கு மரக்கன்றுகளை விஜயதசமி அன்று நட உள்ளோம். அந்த விவசாயி அந்த திடலை ஜே.சி.பி வாகனம் கொண்டு சீரமைத்து 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழிகளை அமைத்திருந்தார். ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும் மையத்திலிருந்து மையம் வரை பன்னிரண்டு அடி தூரம் இருக்கும் வகையில் அளந்து கொடுத்திருந்தேன். சொன்னவாறே விவசாயி செய்திருந்தார். அந்த குழிகளில் மக்கிய சாண உரம் முழுவதுமாக நிரப்ப வேண்டும். இன்று இரு பணியாளர்கள் அந்த பணியை மேற்கொண்டனர். என்ன பணி நிகழ்ந்துள்ளது எனக் காண காலையில் ஒருமுறை சென்றிருந்தேன். கூறுவதற்கு எளிதாக இருக்கும் பணிகளாயினும் நாம் எண்ணியவாறு நிகழ்கிறதா என அவ்வப்போது பார்வையிடுவது அவசியம். பிழைகள் நிகழ்ந்தால் அவற்றை உடனே திருத்திக் கொள்ள பார்வையிடுதல் உதவும் ; எல்லாம் சரியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் பணியாளர்கள் வேலையை முடித்த பின் பார்த்தால் அதை சரி செய்யவும் முடியாது ; அது நம் மன உறுதியைக் குறைக்கவும் கூடும். மக்கிய சாண எருவை குழியின் முழுக் கொள்ளளவுக்கும் கொட்டும் படி கொட்டிக் காண்பித்தேன். பின்னர் கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டேன். மாலை எனது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரை அழைத்துக் கொண்டு கிராமத்துக்குச் சென்றேன். பணியை முழுமையாக நிறைவு செய்து விட்டு பணியாளர்கள் வீடு திரும்பியிருந்தனர். அப்போது அங்கே இருந்த பக்கத்து திடலின் உரிமையாளரான விவசாயி தனது வயலுக்கு தேக்கு மரக் கன்றுகள் வேண்டும் என்று சொன்னார். இந்த விவசாயியின் திடலில் குழிகள் எடுக்கப்பட்டுள்ளதைப் போல குழி எடுத்து மக்கிய சாண எருவை நிரப்பச் சொன்னேன். உண்மையில் விவசாயிகள் குழி எடுப்பதற்கும் சாண எருவை நிரப்புவதற்கும் செய்யும் செலவு கணிசமானது. அதனுடன் ஒப்பிட்டால் நாம் அளிக்கும் மரக்கன்றுகளின் விலை மிகச் சிறியது. ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளுடன் உடனிருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக உரைக்கவே மரக்கன்றுகளை வழங்குகிறது. அதன் மூலம் ஒரு சிறிய எளிய துவக்கத்தை நாம் உருவாக்குகிறோம். மரம் நடும் முறையை விவசாயிகள் மனதில் பதிய வைக்கிறோம். முன்னர் ஒரு விவசாயிக்கு 50 மரக்கன்றுகளை ஒரு விவசாயிக்கு அளித்திருந்தோம். அவருடைய புஞ்சை நிலத்தை நண்பரை அழைத்துச் சென்று காட்டினேன். அந்த விவசாயி மிகவும் மகிழ்ந்து என் மீதான அவரது அன்பு குறித்து நண்பருக்குச் சொன்னார். அவரது நற்சொற்கள் அவரது பெருந்தன்மையின் அடையாளம். இயற்கையின் கரங்களில் அடியேன் எளிய சிறிய கருவி மட்டுமே. மேலும் சிலரைச் சந்தித்தோம். அவர்களும் என் மீதான தங்கள் பிரியத்தை நண்பரிடம் தெரிவித்தனர். 

மானுடத்தின் மீது எந்நிலையிலும் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்த மகாத்மா காந்தியின் ஜெயந்தி அன்று ’’காவிரி போற்றுதும்’’ அவருடைய அடிபணிகிறது.