செயல் புரியும் கிராமத்தில் விஜயதசமி அன்று மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்று விரும்பினேன். செயல் துவங்க விஜயதசமி மிக உகந்த நாள். விஜயதசமியில் துவங்கப்பட்ட செயல் முழுமையான வெற்றியை அடையும் என்பது இந்தியாவின் நம்பிக்கை. விஜயதசமி அன்று நடப்பட வேண்டும் என்றால் அதற்கான ஆயத்தங்களை இன்றிலிருந்து துவக்க வேண்டும். நான் எப்போதுமே முதல் அடியை எடுத்து வைத்து விட வேண்டும் என விரும்புபவன். தமிழ்ச் சமூக மனநிலை பொதுவாக எந்த விஷயத்தையும் ஒத்திப் போடுவதை தனது இயல்பாகப் பழகிய ஒன்று. அதற்கு பல சமூகக் காரணங்கள். துல்லியமான திட்டமிடல்களையும் துல்லியமான செயல்பாடுகளையும் சற்று அன்னியமாக உணரும் தன்மை தமிழ்ச் சமூக மனதில் அவர்கள் அறியாமலே பதிவாகி உள்ளது. இன்று நர்சரிக்கு சென்று 110 தேக்கு மரக்கன்றுகளை வாங்கி கிராமத்தில் சென்று சேர்த்தேன். விஜயதசமி அன்று நட உள்ள திடலில் 50 கன்றுகள். அந்த திடலில் எரு நிரப்பிய பணி புரிந்த தொழிலாளி தன்னுடைய தோட்டத்தில் 15 கன்றுகள் நட இடம் உள்ளது ; தனக்கும் தர முடியுமா என்று கேட்டிருந்தார். அவர் கேட்ட எண்ணிக்கையில் கன்றுகளைக் கொடுத்தேன். முன்னர் தேக்கு நட்டு நல்ல முறையில் பராமரித்து வரும் விவசாயி மேலும் 15 கன்றுகள் கேட்டிருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று அவரிடம் கொடுத்தேன். அஞ்சல் அட்டையைப் பார்த்து ஃபோன் செய்த ஒருவருக்கு 20 கன்றுகளும் அவரது நண்பர்கள் இருவருக்கு தலா 5 கன்றுகளும் தந்தேன். நான் மரக்கன்றுகள் தருவதைக் கண்டவர்கள் ஆர்வமாக தங்களுக்கும் அஞ்சல் அட்டை வந்தது ; எப்போது தங்களுக்கு கன்று கிடைக்கும் என்று கேட்டார்கள். பணி இப்போது தான் தொடங்கியுள்ளது ; நான் தினமும் இங்குதான் இருப்பேன். உங்கள் அனைவருக்கும் தருவேன். நடும் முறைகள் குறித்து சில புரிதல்களை உருவாக்கி விட்டு தருகிறேன் என உறுதி அளித்தேன்.
விவசாயிகளுக்கு தங்கள் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற ஆவலும் விருப்பமும் உள்ளது. அவர்களுக்கு லாபகரமான விஷயங்களைப் பரிந்துரைக்கக் கூடியவர்களே இப்போதைய தேவை.
விவசாயிகள் பேராற்றல் கொண்டவர்கள். அவர்கள் சாதுர்யமாக செயல்படுவார்கள் என்றால் அவர்களால் பெரும் மாற்றத்தை நிகழ்த்த முடியும்.
மரக்கன்றுகளை வழங்கியதும் அவர்களுக்கு உரியதை அவர்களிடம் சென்று சேர்த்து விட்டேன் என்ற நிறைவு ஏற்பட்டது.