Monday, 3 October 2022

இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் செல்வார். வீட்டு வாசலிலிருந்து நான்கடி தொலைவில் நின்று அம்மா அம்மா என்று கூப்பிடுவார். பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்குக் கூட கூப்பிடுவது கேட்டு யார் என்று பார்க்க வந்து விடுவார்கள். இவர் கூப்பிடும் வீட்டிலிருந்து அவ்வளவு சாமானியமாக யாரும் வந்து விட மாட்டார்கள். அவர்கள் வீட்டில் டி.வி ஓடும் சத்தம் அமைப்பாளருக்குத் தெளிவாகக் கேட்கும். அந்த சத்தத்தால்தான் தான் அழைப்பது கேட்காமல் இருக்கிறது என  மனம் தளராமல் திரும்ப திரும்ப அழைத்து உள்ளே இருப்பவர்களை வெளியே கொண்டு வந்து விடுவார்.  

கிராமத்து மக்களுக்கு அமைப்பாளரின் முகம் மிகவும் பரிச்சயமான ஒன்று. அவர் அவர்களால் அரசாங்க ஊழியர் என்றே நினைக்கப்படுகிறார். எனினும் அமைப்பாளர் ஒவ்வொரு முறையும் தனது பெயரைச் சொல்லி தான் ஒரு கட்டிடப் பொறியாளர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். எனினும் மக்கள் மனதில் அது ஏறுவதில்லை. அவர்களுக்கு அவர் அரசாங்க ஊழியரே. அரளி மரக்கன்றுகள் தருபவர். நந்தியாவட்டை கன்றுகள் தருபவர். 

ஒவ்வொரு வீடாகச் செல்லும் போது அமைப்பாளர் எல்லா வீடுகளுக்கும் சென்று விடுவார். ஆனால் மொத்த வீடுகளில் 50 சதவீதத்தினரே வீட்டில் இருப்பார்கள். சிலர் திருமணங்களுக்குச் சென்றிருப்பார்கள். சிலர் ஊருக்குச் சென்றிருப்பார்கள். சிலர் கடைவீதியில் பொருட்கள் வாங்க சென்றிருப்பார்கள். சில வீடுகளில் ஆணகள் தான் வீடு தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள். அவர்கள் வெளியூர் சென்றிருப்பார்கள். சில வீடுகளில் பெண்கள் முடிவு எடுப்பார்கள். அவர்கள் வர நான்கு நாள் ஆகும். சில வீடுகளில் முடிவுகளில் அண்ணன்களாலும் பல வீடுகளில் அப்பாக்களாலும் முடிவுகள் எடுக்கப்படும். 

ஒவ்வொரு வீடாகச் சென்றாலும் முழுமையாக நினைத்ததைச் செய்ய முடியவில்லையே என அமைப்பாளர் நினைப்பார். இதை விட எளிய முறை கிடையாது என்பதால் தனது நுண் அமைப்புக்கு இதுவே வழிமுறை என முடிவு செய்து கொள்வார். ஆபிரகான் லிங்கன் ஒருமுறை கூறினாராம் : I walk slowly but I never walk backward என்று. அமைப்பாளர் ஒவ்வொரு முறையும் கிராமத்து மக்களின் வீட்டு வாசலில் இருந்து கூப்பிடும் போது ஆபிரகாம் லிங்கன் சொன்னதை நினைத்துக் கொள்வார். 

வீட்டில் சிலர் இல்லாமல் இருப்பதை வெளியூர் சென்றிருப்பதைத் தவிர்க்க அமைப்பாளர் எல்லா வீடுகளுக்கும் அஞ்சல் அட்டைகள் எழுதினார். ஒரு நாளைக்கு இருபது அஞ்சல் அட்டைகள் எழுதி போஸ்ட் செய்ய வேண்டும். அமைப்பாளர் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் அல்லலின்றி எழுதக் கூடியவர் ஆனால் அவருக்கு ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் எழுதுவது கடினம். இளைஞர்கள் யாரையாவது உதவிக்கு சேர்த்துக் கொள்ளலாம் என்று அமைப்பாளர் நினைத்தால் அவர்கள் யாருக்குமே பிழையின்றி தமிழ் பார்த்து எழுதத் தெரியவில்லை. பிழையின்றி என்ன சுத்தமாக தமிழ் எழுதவே தெரியவில்லை. 

அஞ்சல் அட்டைகள் சென்று சேர்ந்தவர்கள் அமைப்பாளருக்கு ஃபோன் செய்வார்கள். ‘’சார் ! போஸ்ட் கார்டு கிடைச்சுது. எனக்கு 20 கன்னு வேணும் . சிட்டா அடங்கல் ஏதும் கொடுக்கனுமா சார்?’’ என்று கேட்பார்கள்.  அமைப்பாளர் ’’இல்ல இல்ல அதெல்லாம் வேண்டாம். விவசாயிகளை ஊக்குவிக்கனும் தான் நாம கன்னு கொடுக்கறோம். இந்த மரக்கன்னு நட சில முறைகள் இருக்கு. அத நீங்க ஃபாலோ செய்யனும். அந்த விழிப்புணர்வை உருவாக்கறது தான் இதுல முக்கியம். அத தான் நான் செய்யறன். உங்களுக்கு 20 கன்னு கொடுத்துடலாம் அதுக்கு மேலயும் கொடுக்கலாம்.’’ விவசாயி, ’’என்ன சார் செய்யணும்?’’ என்பார்.

’’ஒவ்வொரு மரக்கன்னுக்கும் ரெண்டு அடி நீளம் ரெண்டு அடி அகலம் ரெண்டு அடி ஆழம் உள்ள குழி எடுக்கணும்.’’ அமைப்பாளர் சொல்வாரே தவிர விவசாயிக்கு அது எத்துணை பெரிது என்பது முதல் தடவையில் புரியாது. அந்த ஃபோன் உரையாடலில் குறைந்தது மூன்று முறை தடவை சொல்லி முதலில் அவர்கள் மனதுக்குள் இந்த விஷயத்தைக் கொண்டு செல்வார். ‘’அதுல மக்குன சாண எரு நிரப்பனும். உங்க கிட்ட மாடு இருக்கா?’’ ’’பக்கத்து வீட்டுல இருக்கு சார்’’அமைப்பாளருக்குத் தெரியும் மாடு வைத்திருப்பவரும் தேக்கு நடப் போகிறார் என . அமைப்பாளர் இன்னொரு ஐடியா கொடுப்பார். ‘’மக்குன சாண எரு இல்லன்னா முனிசிபாலிட்டில குப்பையை உரமாக்குறாங்க. அதை எடுத்துட்டு வந்து நிரப்பிக்கணும்’’. 

நான்கு நாள் கழித்து விவசாயியிடமிருந்து ஃபோன் வரும். ‘’சார் ! குழி எடுக்க ஜே.சி.பி வரச் சொல்லியிருக்கன். நீங்க ஜே.சி.பி வேலை செய்யும் போது வந்து கூடவே இருங்க. நீங்க சொன்ன அளவையெல்லாம் ஜே.சி.பி ஆப்பரேட்டர்கிட்ட சொல்லி கொஞ்சம் கூட இருந்து வேலையை முடிச்சுக் கொடுங்க’’

அமைப்பாளர் அங்கு செல்வார். ஜே.சி.பி ஆப்பரேட்டர் கேட்பார். ’’சார் குழி எத்தனை அடி நீளம் எத்தனை அடி அகலம் எத்தனை அடி ஆழம் எடுக்கணும்?’’