வியாபகம் என்ற வார்த்தைக்குப் பரவுதல் என்று பொருள். வியாபாரம் என்ற சொல்லின் மூலம் வியாபகம். ஒன்று பலதாக ஆதல். சில பலவாக ஆதல். எங்கும் நிறைதல். பரவ வேண்டும் என்ற விருப்பு மானுடனின் அடிப்படை இயல்பாக இருந்து வந்திருக்கிறது.
தனது எல்லைகளைக் கடந்து செல்லுதல் என்பது பரவுதலின் தன்மைகளில் ஒன்று.
இந்திய நிலமெங்கும் பயணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தியா என்பது கிராமங்களே என்னும் அடிப்படைப் புரிதல் என்னுடைய அனுபவமாக ஆனது. ஒவ்வொரு கிராமத்திலும் வாழும் ஆயிரக்கணக்கான மனிதர்களே நம் நாட்டின் பெரும் வளம் என்று உணர்ந்தேன். அவர்கள் இணைந்தால் பெருஞ்செயல்கள் ஆற்றப்படும் என என் உள்ளுணர்வு கூறியது.
இங்கே குடும்பம் என்னும் அமைப்பு வலுவானது. மேலைச் சமூகங்களுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது எந்த பொறுப்பும் இல்லை. அந்த சமூகங்கள் ‘’தனிமனிதன்’’ என்னும் கருத்தினை அடிப்படையாய்க் கொண்டவை. அது ஒரு தன்மை. இயல்பு. அதற்குரிய சாதக பாதகங்கள் அவற்றுக்கு உண்டு.
நம் நாட்டில் குடும்பம் , குடி, ஊர் ஆகியவை கண்ணுக்குத் தெரியாத பல சரடுகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த சரடுகள் சில இடங்களில் மெல்லியவையாக இருக்கலாம். சில இடங்களில் வலிமையாக இருக்கலாம். எனினும் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. பகவான் புத்தர் அதனால் தான் ஊர் ஊராகச் சென்று மக்களை நோக்கிப் பேசினார். மகாவீரரின் அறநிலைகள் நாடெங்கும் நிறைந்தன. சேவையே இறைவனை நோக்கி இட்டுச் செல்லும் பாதை என அறைகூவினார் ராமானுஜர்.
ஆன்மீகத்தின் சொற்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்து கொண்டிருந்ததே இந்த நாட்டின் வரலாறு. ஆன்மீகம் என்பது மனிதனை உயர்த்துவது. எல்லா வகையிலும் மனிதனை உயர்த்துவது.
தர்ம அர்த்த காம மோக்ஷ என்பதை நான்கு புருஷார்த்தங்களாக அறிவிக்கிறது இந்திய மரபு. அறத்துக்கு அடுத்த படியாக வைக்கப்படுவது இங்கே பொருளே. பொருளீட்டல் மனிதனின் கடமையாக வகுக்கப்பட்டிருக்கிறது நம் நாட்டில். ’’கூடித் தொழில் செய்’’ என்றான் பாரதி. ஒரு தொழில் அல்லது வியாபாரம் மிக நுண் அளவிலேனும் ஒற்றுமையை உருவாக்குகிறது என்பதும் அமைதியை ஏற்படுத்துகிறது என்பதும் நடைமுறை உண்மை.
‘’காவிரி போற்றுதும்’’ பணிகளின் போது கிராம மக்கள் தங்கள் எல்லைகளைக் கடந்து தங்களை விரிவாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். ஒரு கிராமத்து மனிதர் தனது பொருளியல் நிலை உயர வேண்டும் என விரும்புகிறார் எனில் அதனை அவர் விரும்புவது அவருக்காக மட்டும் இல்லை ; அவர் பொறுப்பேற்றிருக்கும் குடும்பத்துக்காக. அந்த குடும்பத்தின் உறுப்பினர்களுக்காக. அந்த வகையில் அந்த மனிதரின் எண்ணத்தை ஓர் ஆன்மீக உணர்வாகவே ‘’காவிரி போற்றுதும்’’ காண்கிறது.
செயல் புரியும் கிராமத்தில் தேக்கு பயிரிடுதல் என்பது அந்த கிராம மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றத் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் மக்கள் அளிக்கும் ஆதரவால் அதனை உணர முடிகிறது.
இந்த ஆர்வத்துக்கும் அங்கே உருவாகும் மாற்றத்துக்கும் காரணம் அந்த கிராம மக்களே. எள்ளின் முனையளவு மட்டுமே அதில் ‘’காவிரி போற்றுதும்’’ பங்கு உள்ளது.